பஞ்சாப் நேஷனல் வங்கி நிதி மோசடி வழக்கில் தப்பியோடிய குற்றவாளியான நீரவ் மோடியை இந்தியாவுக்கு அனுப்ப லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த லண்டன் நீதிபதி சாமுவேல் கூஸ், ‘நீரவ் மோடி மீதான நிதி மோசடி வழக்கை நிரூபிக்க போதுமான ஆதரங்கள் உள்ளன. அவர்இருக்க வேண்டிய இடம் மும்பையில் உள்ள ஆர்தர் சாலை சிறைச்சாலைதான்’ என்று கூறினார்.
நீரவ் மோடி கடும் மன அழுத்தத்தால் அவதியுற்று வருகிறார் என்று நீரவ் மோடியின் வழக்கறிஞர்கள் கூறினர். அதற்கு நீதிபதி சாமுவேல் கூஸி ‘நீரவ் மோடி இருக்கும் சூழலில் இந்த அறிகுறிகள் வழக்கமான ஒன்றுதான். அவருக்கு சிறைச்சாலையில் தேவையான மருத்துவ உதவி வழங்க்கப்படும்’ என்று கூறினார்.
குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரியான நீரவ் மோடியும் அவருடைய உறவினர் மெகுல் சோக்ஸியும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14,000 கோடி அளவில் நிதி மோசடி செய்துவிட்டு கடந்த 2018-ம் ஆண்டு வெளிநாடு தப்பிச் சென்றனர். மெகுல் சோக்ஸி ஆன்டிகுவா தீவில் தஞ்சம் அடைந்தார். நீரவ் மோடி லண்டனில் கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து 2019 ஜூன் மாதம் சுவிட்சர்லாந்து அரசு நீரவ் மோடி தொடர்புடைய வங்கிக் கணக்குகளை முடக்கியது. அப்போது 6 மில்லியன் டாலர் மதிப்பிலான அவருடைய சொத்துகள் முடக்கப்பட்டன.
நீரவ் மோடியை இந்தியாவுக்கு கொண்டு வர அமலாக்கத் துறையும், மத்திய புலனாய்வு அமைப்பும் தீவிரமாக முயற்சிகள் மேற்கொண்டு வந்தன. இந்நிலையில் நீரவ் மோடியை இந்தியாவுக்கு அனுப்ப லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago