விவாகரத்து பெற்ற முன்னாள் மனைவி வீட்டு வேலைகள் செய்ததற்காக, ரூ.6 லட்சம் வழங்க வேண்டும் என்று சீனாவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சீனாவைச் சேர்ந்த இளம்பெண் வாங். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் சென் என்பவரை திருமணம் செய்தார். கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று விட்டனர். இந்நிலையில், ‘‘திருமண வாழ்க்கையின் போது, 5 ஆண்டுகள் அதிகமான வீட்டு வேலைகள், குழந்தையை கவனித்துக் கொள்ளுதல் போன்றவற்றை செய்தேன். அதற்கு முன்னாள் கணவர் எனக்கு பணம் வழங்க உத்தரவிட வேண்டும்’’ என்று கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, ‘‘எனது முன்னாள் கணவர் வேலைக்கு சென்று வருவதை தவிர வேறு எந்த வேலையையும் வீட்டில் செய்ததில்லை. நான்தான் வீட்டின் அனைத்து பொறுப்புகளையும் ஏற்று செய்து வந்தேன். எனவே, எனக்கு கூடுதல் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும்’’ என்று கூறினார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘‘விவாகரத்துக்கு முன்பு வாங் செய்த வேலைகள் மற்றும் குழந்தையை கவனித்துக் கொண்டதற்கு 8,000 டாலர் (சுமார் 6 லட்சம் ரூபாய்) வழங்க வேண்டும். அத்துடன் மாதம் 2,000 சீன கரன்சி யுவான் (ரூ.22 ஆயிரம்) ஜீவனாம்சம் வழங்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டது. ஆனால், அதிக நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தில் வாங் மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்த தீர்ப்பு வெளியான பிறகு, சீன வலைதளத்தில் காரசார விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் விவாகரத்து பெற் பெண்ணுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் ஏராளமான கருத்துகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
சீனாவில் இந்த ஆண்டு முதல் புதிய சிவில் சட்டங்கள் அமலுக்கு கொண்டு வரப்பட்டன. அதன் மூலம், விவாகரத்து பெற்ற பெண்கள் வீட்டு வேலைகள் செய்ததற்காக முன்னாள் கணவனிடம் இருந்து நஷ்டஈடு கேட்டு பெறலாம் என்று முதல் முறையாக சட்டம் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago