உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத்தில் உள்ள மோடேரா ஸ்டேடியம் நரேந்திர மோடி மைதானம் என பெயர் மாற்றப்பட்டது. புதிய பொலிவுடன் காணப்படும் இந்த மைதானத்தை நேற்று குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.
அகமதாபாத்தில் உள்ள மோடேரா கிரிக்கெட் மைதானம் சுமார் ரூ.800 கோடி செலவில் 63 ஏக்கர் பரப்பளவில் நவீன வசதிகளுடன் சீரமைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானமானது ஒலிம்பிக்கில் கால்பந்து போட்டிக்கு பயன்படுத்தப்படும் மைதானத்தின் அளவை போன்று 32 மடங்கு பெரியது எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.
இங்கு 1.32 லட்சம் பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகின் பெரிய கிரிக்கெட் மைதானம் என்ற புகழை இந்த மைதானம் பெற்றுள்ளது. இதற்கு முன்னர் 90 ஆயிரம் ரசிகர்கள் அமரும் வகையில் கட்டப்பட்டிருந்த ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் கிரிக்கெட் மைதானமே பெரியதாக கருதப்பட்டு வந்தது.
இந்நிலையில் சீரமைக்கப்பட்ட மோடேரா மைதானத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. ஸ்டேடியத்துக்கு 'நரேந்திர மோடி மைதானம்' என பெயர் சூட்டப்பட்டது. உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் கலந்து கொண்டு மைதானத்தை முறைப்படி திறந்துவைத்தார்.
விழாவில் அவர் பேசும்போது, “இந்த மைதானம் உருவாகும் எண்ணம் பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது உண்டானது. அவர் அப்போது குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்தார். இந்த மைதானம் சுற்றுச்சூழல் வளர்ச்சிக்கு சிறந்த உதாரணம்” என்றார்.
தொடர்ந்து இதே மைதானத்தில் கால்பந்து, ஹாக்கி, கூடைப்பந்து, கபடி, குத்துச்சண்டை மற்றும் புல்வெளி டென்னிஸ் போன்ற துறைகளுக்காக கட்டப்பட உள்ள சர்தார் படேல் வளாகத்துக்கான பூமி பூஜை விழாவிலும் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசும்போது, “உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு உள்கட்டமைப்பின் அடிப்படையில் இந்த இடம் அகமதாபாத்திற்கு ஒரு புதிய உலகளாவிய அடையாளத்தை வழங்கும் என்று நான் நம்புகிறேன். இங்குள்ள வசதிகள் வீரர்கள் சிறப்பாக செயல்பட உதவும் என்று நம்புகிறேன். நமது வீரர்கள் பலர் சிறிய நகரங்களில் இருந்து வந்து கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர். குஜராத் கிரிக்கெட் சங்கத்தால் ஊக்குவிக்கப்பட்ட வீரர்களில் ஜஸ்பிரீத் பும்ரா, அக்சர் படேல் போன்ற இன்றைய பிரபலமான பெயர்களும் அடங்கும்” என்றார்.
நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் பகலிரவு போட்டியாக தொடங்கியது. மெல்பர்ன் கிரிக்கெட் மைதானம் வடிவமைத்ததில் பங்காற்றிய ஆஸ்திரேலிய கட்டிடக் கலை நிறுவனமான பாப்புலஸ், நரேந்திர மோடி மைதானத்தின் கட்டிடக் கலைஞராகவும் திகழ்கிறது. இந்த மைதானத்தில் 11 ஆடுகளங்கள் சிவப்பு மற்றும் கருப்பு மண்ணால் வடிவமைக்கப்பட்டுள்ளது. உலக கிரிக்கெட் அரங்கில் பயிற்சி ஆடுகளத்துக்கும் பிரதான ஆடுகளத்துக்கும் ஒரே விதமான மண் மேற்பரப்புகளை கொண்ட ஒரே மைதானம் இதுமட்டும்தான்.
மழை காரணமாக போட்டி பாதிக்கப்பட்டால் 30 நிமிடங்களில் முழுவீச்சில் மைதானத்தை தயார் செய்யும் விதமாக சிறந்த வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளது. வழக்கமான உயர்கோபுர மின்விளக்குகளுக்குப் பதிலாக எல்இடி விளக்குகள் நிறுவப்பட்டுள்ளது. இந்த எல்இடி விளக்குகள் பார்வையாளர்கள் மாட கூரையின் சுற்றளவில் அமைக்கப்பட்டுள்ளதால் நிழல் குறைந்த ஒளியை வழங்கும். இதுபோன்ற விளக்குகள் இந்திய கிரிக்கெட் மைதானங்களில் அமைக்கப்படுவது இதுவே முதன்முறை.
இந்த விளையாட்டு அரங்கில் கிரிக்கெட் அகாடமி, உள்ளரங்க பயிற்சி ஆடுகளம் ஆகியவற்றுடன் தனித்தனியாக இரு பயிற்சி மைதானங்கள் சிறிய அளவிலான பெவிலியன் வசதியுடன் உள்ளது. அதுமட்டுமில்லாமல் உலகிலேயே முதன் முறையாக இங்கு வீரர்களுக்கான 4 ஓய்வறைகள் உள்ளது. ஒரே நாளில் அடுத்தடுத்து இரு ஆட்டங்கள் நடைபெறும் போது இந்த ஓய்வறைகள் உதவியாக இருக்கும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago