அஸ்வின் சதம் அடித்து அசத்தல் இங்கிலாந்து அணிக்கு 482 ரன்கள் இலக்கு 53 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து திணறல்

By பெ.மாரிமுத்து

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் சதம் விளாசினார். இதனால் இங்கிலாந்துக்கு அணிக்கு 482 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்தது.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 329 ரன்களும் இங்கிலாந்து அணி 134 ரன்களும் எடுத்தன. 195 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 18 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா 24, சேதேஷ்வர் புஜாரா 7 ரன்களுடன் ஆட்டமிழக்கா மல் இருந்தனர். நேற்று 3-வது நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடர்ந்த நிலையில் புஜாரா மேற்கொண்டு ரன் ஏதும் சேர்க் காமல் ரன் அவுட் ஆனார்.

இதையடுத்து ரோஹித் சர்மா (26), ரிஷப் பந்த் (8) ஆகியோர் ஜேக் லீச் பந்தில் ஸ்டெம்பிங் ஆனார்கள். அஜிங்க்ய ரஹானே 10, அக்சர் படேல் 7 ரன்களில் மொயின் அலி பந்தில் நடையை கட்டினர். 106 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்த நிலையில் கேப்டன் விராட் கோலியுடன் இணைந்து பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தார் அஸ்வின். விராட் கோலி 107 பந்துகளில், தனது 25-வது அரை சதத்தை அடித்தார். அஸ்வின் 64 பந்துகளில் அரை சதம் எட்டினார். விராட் கோலி 149 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் எடுத்த நிலையில் மொயின் அலி பந்தில் எல்பிடபிள்யூ ஆனார்.

7-வது விக்கெட்டுக்கு அஸ்வினுடன் இணைந்து விராட் கோலி 96 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து களமிறங்கிய குல்தீப் யாதவை 3 ரன்களில் வெளியேற்றினார் மொயின் அலி. இதன் பின்னர் இஷாந்த் சர்மா ஒத்துழைப்பு கொடுக்க அஸ்வின் விரைவாக ரன்கள் சேர்த்தார். இஷாந்த் சர்மா 7 ரன்களில் ஜேக் லீச் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய மொகமது சிராஜ், ஜேக் லீச் ஓவர்களில் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டார்.

91 ரன்களில் இருந்த அஸ்வின் மொயின் அலி பந்தை சிக்ஸருக்கு விளாசி சதத்தை நெருங்கினார். தொடர்ந்து 2 இரு ரன்கள் சேர்த்த அஸ்வின் 5-வது பந்தை பவுண்டரிக்கு விளாசி தனது 5-வது சதத்தை அடித்தார். சொந்த மைதானத்தில் அவருக்கு இது முதல் சதமாக அமைந்தது. சதத்தை நிறைவு செய்ய அஸ்வினுக்கு 134 பந்துகளே தேவையாக இருந்தது. இதில் 14 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடங்கும்.

இதன் பின்னர் அஸ்வின் விரைவாக ரன்கள் சேர்க்க முயன்ற போது ஆலி ஸ்டோன் பந்தில் போல்டானார். 148 பந்துகளை எதிர்கொண்ட அஸ்வின் 106 ரன்கள் சேர்த்தார். அஸ்வினின் விக்கெட்டால் இந்திய அணியின் 2-வது இன்னிங்ஸ் 85.5 ஓவர்களில் 286 ரன்களுக்கு முடிந்தது. கடைசி விக்கெட்டுக்கு மொகமது சிராஜூடன் இணைந்து அஸ்வின் 49 ரன்கள் சேர்த்திருந்தார். சிராஜ் 16 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இங்கிலாந்து அணி சார்பில் மொயின் அலி, ஜேக் லீச் ஆகியோர் தலா 4 விக்கெட்கள் வீழ்த்தினர். இதையடுத்து 482 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இங்கிலாந்து அணி நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 19 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்தது. டாம் சிப்லி (3), ஜேக் லீச் (0) ஆகியோர் அக்சர் படேல் பந்தில் ஆட்டமிழந்தனர். ரோரி பர்ன்ஸ் 25 ரன்களில் அஸ்வின் பந்தில் நடையை கட்டினார்.

கேப்டன் ஜோ ரூட் 2, டான் லாரன்ஸ் 19 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். கைவசம் 7 விக்கெட்கள் இருக்க வெற்றிக்கு மேற்கொண்டு 429 ரன்கள் தேவை என்ற நிலையில் இன்றைய 4-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது இங்கிலாந்து.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்