டிஎஸ்பி மகளுக்கு இன்ஸ்பெக்டர் தந்தையின் ‘சல்யூட்’

By என்.மகேஷ்குமார்

ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு முதல் முறையாக திருப்பதியில் ‘போலீஸ் மீட்’ நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. வரும் 7-ம் தேதி வரை நடைபெறும் இந்நிகழ்ச்சியில் குண்டூர் டிஎஸ்பி.யாக பணியாற்றி வரும் ஜெஸ்ஸி பிரசாந்தி பங்கேற்றார். திருப்பதி அருகே உள்ள கல்யாணி அணைக்கட்டு போலீஸ் பயிற்சி மையத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில், இங்கு இன்ஸ்பெக்டராக ஷியாம் சுந்தர் என்பவர் பணியாற்றி வருகிறார்.

இவர் டிஎஸ்பி ஜெஸ்ஸி பிரசாந்தியை பார்த்து உயரதிகாரிக்கான ‘சல்யூட்’ அடித்தார். இதற்கு ஜெஸ்ஸியும் சிரித்து கொண்டே பதிலுக்கு ‘சல்யூட்’ அடித்தார். எனினும் இருவரும் தந்தையும் மகளும் என்பது பிறகுதான் அனைவருக்கும் தெரிய வந்தது.

மனதில் மகிழ்ச்சியும் பெருமிதமும் பொங்க நெஞ்சை நிமிர்த்தி மகளுக்கு ‘சல்யூட்’ அடித்ததாக ஷ்யாம் சுந்தர் கூறினார்.அவர் மேலும் கூறும்போது, “கடந்த 2018-ல் டிஎஸ்பி.யாகஜெஸ்ஸி தகுதி பெற்றார். இப்போதுதான் அவரை பணிரீதியாக திருப்பதியில் சந்திக்கும் சந்தர்ப்பம் அமைந்தது” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

மகள் ஜெஸ்ஸி கூறும்போது, “அப்பாவும் நானும் ஒருசேர கலந்து கொள்வது இதுதான் முதல்முறை. நான் வேண்டாம் என்றாலும் அவர் என்னை பார்த்து ‘சல்யூட்’ செய்தார். அதை ஏற்க வேண்டும் அல்லவா? அதற்காக நானும் ‘சல்யூட்’ செய்தேன். பதவியில் அவரை விட நான் உயர்ந்த இடத்தில் இருந்தாலும் எனது மனதளவில் அவர் என்னைவிட எப்போதும் உயர்ந்த இடத்தில்தான் இருக்கிறார்” என்றார்.

மகளுக்கு ஷியாம் சுந்தர் ‘சல்யூட்’ அடிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இருவருக்கும் பாராட்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்