உண்மை கண்டறியும் சோதனையில் ‘குழப்பிய’ சஞ்சய் ராய் - கொல்கத்தா வழக்கு நிலவரம் என்ன?

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் காவல் துறையில்தன்னார்வலராக பணியாற்றிய சஞ்சய் ராய் (33) கைது செய்யப்பட்டு உள்ளார். கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி சிபிஐ அதிகாரிகள் வழக்கை விசாரித்து வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து கொல்கத்தாவின் பிரசிடென்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சஞ்சய் ராயிடம் நேற்று ‘பாலிகிராப் டெஸ்ட்' என்றழைக்கப்படும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது சஞ்சய் ராயிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.

பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்தது யார்? அவரை கொலை செய்தது யார்? உன்னுடைய இயர் போன் எப்போது உடைந்தது? பெண் மருத்துவரை இதற்கு முன்பு மானபங்கம் செய்தாயா? ஆர்.ஜி.கர் மருத்துவமனையின் முதல்வர் சந்தீப் கோஸை உனக்கு முன்கூட்டியே தெரியுமா? கொலை செய்த பிறகு அவருக்கு தகவல் கூறினாயா? எத்தனை பேர் மருத்துவமனையின் கருத்தரங்கு கூடத்தில் இருந்தீர்கள் என்பன உள்ளிட்ட 20 கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்கு சஞ்சய் ராய் அளித்த பதில்கள் முழுமையாக பதிவு செய்யப்பட்டன.

மேற்குவங்க காவல் துறையில் தன்னார்வலராக பணியாற்றும் சஞ்சய் ராயின் நெருங்கிய நண்பர், ஆர்.ஜி.கர் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஸ், பெண் மருத்துவரோடு இரவு பணியில் இருந்த 4 பயிற்சி மருத்துவர்களிடமும் நேற்று உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. கொல்கத்தாவில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் 6 பேரிடமும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த விசாரணை குறித்து சிபிஐ வட்டாரங்கள் கூறியதாவது: சஞ்சய் ராய் குழப்பத்தை ஏற்படுத்த மாற்றி மாற்றி பேசுகிறார். அவரிடம் கேட்கப்பட்ட ஒவ்வொரு கேள்வியின்போதும் அவரது ரத்த அழுத்தம், நாடித் துடிப்பு, சுவாசம், வியர்வை, ரத்த ஓட்டம் ஆகியவை கண்காணிக்கப்பட்டன. அவர் அளித்தபதில்களின் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணை நடத்தப்படும்.ஆர்.ஜி.கர் மருத்துவமனையின் முதல்வர் சந்தீப் கோஸிடம் இதுவரை 100 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. அவர் அளித்த பதில்களும் திருப்திகரமாக இல்லை. பெண் மருத்துவரின் கொலையை மறைக்க அவர் தீவிரமாக முயற்சி செய்துள்ளார். அவரிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டு உள்ளது.

கொலையான பெண் மருத்துவரோடு 4 பயிற்சி மருத்துவர்கள் பணியில் இருந்துள்ளனர். அவர்கள் அனைவரும் ஆண்கள். பெண் மருத்துவரோடு இணைந்து அவர்கள் இரவு உணவை சாப்பிட்டு உள்ளனர். அவர்களிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

பெண் மருத்துவரின் பெற்றோர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: வழக்கு விசாரணையை சிபிஐ விரைவுபடுத்த வேண்டுகிறோம். எங்களது மகளின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும். எங்கள்மகள் கொலையில் பலருக்கு தொடர்பு இருக்கக்கூடும். மருத்துவமனையில் சட்ட விரோத செயல்கள் நடைபெற்று உள்ளன. அனைத்து உண்மைகளையும் சிபிஐ வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு பெற்றோர் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்