சென்னை: ஆளுநர் நடத்தும் கல்வி மாநாட்டில் பங்கேற்பது அந்தந்த துணை வேந்தர்களின் தனிப்பட்ட விருப்பம் என்று உயர்கல்வி அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த 29-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை ராணிமேரி கல்லூரி மற்றும் மாநிலக்கல்லூரியில் நடக்கும் கலந்தாய்வை உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி நேற்று பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் 164 அரசு கலை,அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு ஒரு லட்சத்து 7,299 இடங்கள் உள்ளன. இதில் சேர 2 லட்சத்து 46,295 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். பொது கலந்தாய்வு நாளை (ஜூன் 1) தொடங்கி நடைபெறவுள்ளது. கடந்தாண்டை விட அதிகளவில் விண்ணப்பங்கள் வந்துள்ளன.
அரசுக் கல்லூரிகளில் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. நீதிமன்ற வழக்கு முடிந்ததும் ஜூன் முதல் வாரத்தில் அதற்கான பணிகள் விரைவுபடுத்தப்படும். கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக கொண்டுவரப்பட்டதே ‘நான் முதல்வன்’ திட்டம். சிங்கப்பூர் சுற்றுப்பயணத்தின்போது இதுகுறித்து அங்குள்ள உயர்கல்விநிறுவனங்களுடன் முதல்வர்ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார். அதன்படி, அங்குள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் இங்கு வந்தும், நம் மாணவர்கள் அங்கே சென்றும் பயிற்சி பெற உள்ளனர்.
» தமிழகத்தில் கோவை, தேனி, சேலம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு
» ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கே அணிக்கு தமிழிசை, ஸ்டாலின் வாழ்த்து
மாநில கல்விக் கொள்கை குறித்து விவாதிக்கவும் துணைவேந்தர்கள், கல்லூரி முதல்வர்கள் கலந்துகொள்ளும் கூட்டம் இன்று (மே 31) நடைபெற உள்ளது.
ஆளுநரின் கல்வி மாநாடுஜூலை 5-ம் தேதி ஊட்டியில் நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்வது அந்தந்த பல்கலைக்கழக துணைவேந்தர்களின் தனிப்பட்ட விருப்பமாகும். தமிழகம்போல, கர்நாடகாவிலும் மாநில கல்விக் கொள்கை வகுக்கப்பட உள்ளது. இந்த விவகாரத்தில் ஆளுநர்கள் விதிமுறைகளின்படி கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. இவ்வாறு தெரிவித்தார்.
பேட்டியின்போது, உயர்கல்வித் துறை செயலர் தா.கார்த்திகேயன், கல்லூரிக் கல்வி இயக்குநர் கீதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago