சாய் சரண் ஒரு தேனீ போல சுழல்வான்

By செய்திப்பிரிவு

சாய் சரண் ஒரு தேனீ போல சுழல்வான். தன் ஊரில் இருந்து தினந்தோறும் பள்ளிக்கு நண்பர்களோடு தோணியில் பயணம் செய்வான். இரவு பகல் என்று பார்க்காமல் எல்லோருக்கும் உதவுவான். அடுத்த வருடம் 7-ம் வகுப்பு போவதற்குள் தோணியை ஓட்ட வேண்டும் என்று மனதிற்குள் உறுதி எடுத்துக் கொண்டான். அன்றைக்கு எதிர்பாராமல் காற்றும் மழையும் பலமாக வரவே சாய் தன் நண்பர்களோடு தோணி ஏறினான். அப்போது தோணி ஓட்டுபவனுக்கு காகா வலிப்பு வந்துவிடவே அனைவரும் பயந்துவிட்டார்கள்.

சாய் சரண் துணிவை வரவழைத்துக் கொண்டு தோணியை ஓட்டினான். அக்கரையில் பெற்றோர்களுக்கு இந்த விசயம் தீயாய் பரவ பயத்தோடு காத்துக் கொண்டு இருந்தனர். சாய் சரண் ஒரு வழியாக கரையை அடைந்தான். சாண் பிள்ளை ஆனாலும் ஆண்பிள்ளை என்று எல்லோராலும் பாராட்டப் பெற்றான்.

விவேகானந்தர் 8 வயதில் எப்படி தறி கெட்டு ஓடிய குதிரை வண்டியை அடக்கி வண்டிக்குள் இருந்த தாயையும் பிள்ளையும் காப்பாற்றினாரோ அதுபோல் சாய் தம்பியும் நம் பிள்ளைகளை காப்பாற்றிவிட்டான் என்று பேசிக் கொண்டனர். அவன் புகழை பள்ளியும் கொண்டாடியது. தன் திறமை அறிந்து நீச்சல் பயிற்சி வகுப்பில் சேர்ந்து நீச்சல் கற்றுக்கொண்டான். தன் நண்பனோடு ஆற்றில் குளிக்கும் போது சுழலில் மாட்டிக் கொண்ட நண்பனின் உயிரைக் காப்பாற்றினான். எல்லோரும் அவனை பாராட்டினர். இந்த துணிவைக் கொண்டு நம் நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஓடிக்கொண்டே இருந்தது.

அவன் தந்தையிடம் தன் விருப்பத்தை தெரிவித்தான். உடனே தந்தை தாத்தாவின் வீரம் தான் உனக்கும் இருக்கிறது. அவர் ராணுவத்தில் பணிபுரிந்து நாட்டுக்காக உயிரைத் தியாகம் செய்தார். நீயும் ராணுவத்தில் சேர்ந்து நாட்டை காப்பாற்று என்று ஊக்கப்படுத்தினார். படித்து பெரியவனாக ஆகி அப்பா சொல்லை தட்டாமல் ராணுவத்தில் பணி ஏற்று அடுத்தடுத்து தன் வீர தீர சாகசங்களால் புகழை அடைந்தான். தாய் தந்தையருக்கும் பெருமை சேர்க்கும் பிள்ளையாய் இருந்தான். இதைத் தான் வள்ளுவர்

தோன்றிற் புகழோடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று

என்கிறார்

புகழ் அதிகாரம் குறள்:236

கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்