கேரளத் தேர்தலில் காங்கிரஸ் வரலாற்று வெற்றி

By ஆர்.ஜெயக்குமார்


கேரளத்தில் நடைபெற்ற திருக்காக்கரை இடைத்தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது. திருக்காக்கரை தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் பி.டி.தோமஸ் கடந்தாண்டு டிசம்பரில் புற்றுநோய்ப் பாதிப்பால் மரணமடைந்தார். இதையடுத்து அந்தத் தொகுதியில் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் சார்பில் அந்தத் தொகுதியில் பி.டி.தோமஸின் மனைவி உமா தோமஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அவர் இப்போது 72,770 வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடியுள்ளார்.

ஆளும் இடது ஜனநாய முன்னணியின் சார்பில் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மருத்துவர் ஜோ.ஜோசப் போட்டியிட்டார். இவர் 47, 754 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்துள்ளார். உமா இவரைவிட, 25,016 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். இதன் மூலம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற காங்கிரஸ் வேட்பாளர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். 2011இல் பென்னி பெஹ்னன் 22,406 பெற்றதே சாதனையாக இருந்தது. அதை உமா முறியடித்துள்ளார். மேலும் உமாவின் கணவரான பி.டி, தோமஸும் 14,329 வாக்குகள் வித்தியாசத்தில்தான் 2021 தேர்தலில் வெற்றிபெற்றார்.

பாஜக சார்பில் போட்டியிட்ட ஏ.என்.ராதாகிருஷ்ணன் 12, 957 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பெற்றுள்ளார். இந்த இடத்தைக் கைப்பற்றினால் சட்டமன்றத்தில் மார்க்சிஸ்ட் கட்சின் பலம் 100 ஆக உயரும். அதனால் மார்க்சிஸ்ட் கட்சி அதற்காகத் தீவிரமான பிரச்சாரங்களை மேற்கொண்டது. கேரள முதல்வரும் மார்க்சிஸ்ட் தலைவருமான பினராயி விஜயன் திருக்காக்கரையில் பிரச்சாரம் மேற்கொண்டார். “நீங்கள் தவறைத் திருத்திக்கொள்ள வாய்ப்பு அமைந்திருக்கிறது. அதனால் அதைத் திருத்திக்கொள்ளுங்கள்” என திருக்காக்கரையில் அவர் பேசியது விவாதம் ஆனது. மார்க்சிஸ்ட் கட்சி சட்டமன்றத்தில் 100 என்ற நோக்கத்தில் முன்னணித் தலைவர்களைக் களத்தில் இறக்கியிருந்தது.

VIEW COMMENTS