காந்தியடிகள், ஜவஹர்லால் நேரு பிறந்த நாளையொட்டி கடலூரில் வரும் 2-ம் தேதி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி நடத்தி, பரிசளிக்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் வரும் அக்டோபர் 2-ம் நாள் மகாத்மா காந்தியடிகள் பிறந்தநாளையொட்டியும், நவம்பர் 14-ம் நாள் ஜவஹர்லால் நேரு பிறந்த நாளையொட்டியும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கல்லூரி,பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுத் தொகைகள் வழங்கப்பட உள்ளது.
இதன்படி கடலூர் மாவட்டத்தில் வரும் 2-ம்தேதியன்று கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள புனித வளனார் மேல்நிலைப் பள்ளி, பேராயர் மைக்கேல் அகஸ்டின் கலை அரங்கத்தில் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்குத் தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நடைபெறும். போட்டிகளுக்கு கல்லூரி முதல்வர், பள்ளி தலைமையாசிரியர்கள் அவர்தம் கல்லூரி, பள்ளி மாணவர்களிடையே போட்டி நடத்தி 2 பேர் வீதம் தெரிவு செய்து போட்டிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றிபெறும் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். இதே போன்று கல்லூரி மாணவர்களுக்கும் மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ. 5 ஆயிரமும், இரண்டாம் பரிசு ரூ.3 ஆயிரமும், மூன்றாம் பரிசு ரூ.2 ஆயிரமும் வழங்கப்படும். மேலும் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்படும் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுள் அரசுப் பள்ளி மாணவர்கள் இரண்டு பேரைத் தனியாகத் தெரிவு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசுத்தொகை ரூ.2ஆயிரம் வழங்கப்படும்.
பள்ளிப் போட்டி காலை 10 மணிக்கும் கல்லூரிப் போட்டி பிற்பகல் 2 மணிக்கும் நடைபெறும். கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ,மாணவிகள் இதில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago