மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், மின்சார ஒழுங்குமுறை சட்டத்தை திரும்பப் பெற வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை நிறுத்த வேண்டும், பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் இடதுசாரிகள் வரும் 27-ம் தேதி பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இதையொட்டி மறியல் போராட்டங்களிலும் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.
இதை பொது மக்களுக்கு விளக்கும் வகையில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கடலூர் மாவட்ட குழு சார்பில், கடலூரில் நேற்று வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் ஆகியோரிடம் துண்டுபிரசுரம் அளித்து, போராட்டத்திற்கு ஆதரவு திரட்டினர்.
விவசாயிகள் போராட்டம் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் மாதவன் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில குழு உறுப்பினர் குளோப், வட்ட செயலாளர் சுந்தரராஜன், குடியிருப்போர் சங்க பொதுச்செயலாளர் மருதவாணன், மக்கள் அதிகாரம் மண்டல பொறுப்பாளர் பாலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகர செயலாளர் அமர்நாத், ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் பாபு, சாலையோர வியாபாரிகள் சங்கத் தலைவர் மனோகரன், வாலிபர் சங்க நகர தலைவர் செந்தமிழ், மாணவர் சங்கத் தலைவர் லெனின் உள்ளிட்டோர் கலந்து கொண்டு துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.
அவர்களுடன் காங்கிரஸ் சார்பில் மாவட்டத் தலைவர் திலகர், மாநில செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு பிரசுரங்களை வழங்கி, போராட்டத்திற்கு ஆதரவு திரட்டினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago