சுற்றுலாத்தலமாக மாறும் கிருமாம்பாக்கம் ஏரி : 90 சதவீத பணிகள் நிறைவு - அக்டோபரில் திறக்க வாய்ப்பு

By அ.முன்னடியான்

புதுச்சேரி கிருமாம்பாக்கம் ஏரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றுலா திட்டப் பணிகள் 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ள நிலையில், விரைவில் இப்பணிகள் முடிக்கப்பட்டு சுற்றுலா தலமாக மாற்றப் படவுள்ளது. இது கிராமப்புற மக்களின் பொழுதுபோக்கு இடமாக மாறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

புதுச்சேரி மாநிலம் சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. கடற்கரை, மணக்குள விநாயகர் கோயில், அரவிந்தர் ஆசிரமம், பாரதி பூங்கா, தாவரவியல் பூங்கா, நோணாங்குப்பம் படகு குழாம், ஊசுடு ஏரி எனபல்வேறு சுற்றுலா தலங்கள் அமைந் துள்ளன. இங்கு வார விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

இதன் மூலம் அரசுக்கும் நல்ல வருவாய் கிடைக்கிறது. குறிப்பாக இந்த சுற்றுலா தலங்களில் பெரும்பாலானவை நகரப்பகுதியில் அமைந்துள்ளன. கிராமப்பகுதிகளில் குறிப்பிடும்படியான சுற்றுலாதலங்கள் இல்லை. இதனால் கிராமப்பகுதி களில் சுற்றுலாவை மேம்படுத்தும் நடவடிக் கையை அரசு எடுத்து வருகிறது.

இந்நிலையில் கிருமாம்பாக்கத்தில் சுற்றுலா தலம் அமைக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த கிருமாம்பாக்கம் கிராமம்.

இங்குள்ள ஏரியை சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கு புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக புதுச்சேரி சுற்றுலாத்துறை சார்பில், கிருமாம்பாக்கம் ஏரியில், ரூ.5 கோடியே 26 லட்சம் செலவில், நவீன சுற்றுலா தளம் அமைக்கப்பட்டு வருகிறது.

மத்திய அரசின் ‘ரூர்பன்’ (RURBAN) எனப்படும் ஊரக நகர்ப்புற திட்டத்தின் கீழ் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிராமத்தின் தன்மை மாறாமல் நகரத்தின் வசதிகளை அளிப்பதே இத் திட்டத்தின் நோக்கம்.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக கிருமாம் பாக்கம் ஏரி புது பொலிவு பெற இருக்கிறது. ஏரியைச் சுற்றிலும் ரெஸ்டாரண்ட், நவீன படகு தளம், பார்க்கிங், கரைகள் அழகுப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுமார் 3 கி.மீ சுற்றளவு உள்ள ஏரியின் கரை 'பேவர் பிளாக்' கல்லில் சாலை அமைக்கப்பட்டு அழகுப்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இந்த ஏரியில் ஆஸ்திரேலிய நாட்டின் பெலிகான் உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகளும், உள்நாட்டு இனங்களான கொக்கு, நாரை, நத்தை கொத்தி போன்ற பல்வேறு வகையான பறவைகளும் வந்து தங்கியுள்ளன. இதனை கண்டு ரசிக்கும் வகையிலும், ஏரியின் அழகு மற்றும் இங்குள்ள இயற்கை சூழலை கண்டு ரசிப்பதற்காகவும் ஆங்காங்கே ‘பறவைகளைப் பார்வையிடும் கோபுரங்கள்’ அமைக்கப்பட்டுள்ளன.

தற்போது பெரும்பாலான பணிகள் முடிக்கப்பட்டிருக்கும் நிலையில், இறுதி கட்ட பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளது.

கிருமாம்பாக்கம் ஏரி சுற்றுலா தலமாக மாற்றப்படும் நிலையில், சுற்று வட்டார கிராமப்புற மக்களின் பொழுதுபோக்கு இடமாக இது திகழும்.

இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது: ‘‘ 10 சதவீத பணிகளே மிச்சம் இருக்கிறது. வருகிற அக்டோபர் மாதத்துக்குள் பணிகள் நிறைவு பெற்று. திறக்க வாய்ப்புள் ளது.’’என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்