ரெய்டு நடத்தினால் திமுகவினர் வீட்டில் முடங்கிவிடுவார்கள் என நினைக்கிறார்கள். எத்தனை ரெய்டு நடத்தினாலும் அதைப் பற்றி கவலைப்பட மாட்டோம்என அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அண்ணா சிலை அருகே, திமுக வேட்பாளர்கள் குன்னம் எஸ்.எஸ்.சிவசங்கர், ஜெயங்கொண்டம் க.சொ.க.கண்ணன், பெரம்பலூர் எம்.பிரபாகரன், அரியலூர் மதிமுக வேட்பாளர் கு.சின்னப்பா ஆகியோரை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது: உங்கள் தொகுதிக்கு வரும் போதெல்லாம், நீட் கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் நினைவுதான் ஞாபகத்துக்கு வருகிறது. அவரது பெயரில் சென்னை கொளத்தூரில் பயிற்சி மையம் தொடங்கி 1,000 பேருக்கு வேலை கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல, தமிழகம் முழுவதும் அனிதா பெயரில் பயிற்சி மையம் ஏற்படுத்தப்பட்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
இப்போது சென்னையில் எனது மகள் செந்தாமரை வீட்டில் 30-க்கும் மேற்பட்ட வருமானவரித் துறை அதிகாரிகள், 100-க்கும் மேற்பட்ட போலீஸாரின் பாதுகாப்புடன் உள்ளே நுழைந்து ரெய்டு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கெனவே, அதிமுக அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் வீட்டில் எல்லாம் ரெய்டு நடத்தி, அந்தக் கட்சியை மோடி அரசு மிரட்டி உருட்டி வைத்துள்ளது. வருமானவரித் துறை, சிபிஐ போன்றவற்றை வைத்து அனைவரையும் மிரட்டி வருகின்றனர்.
ஒன்றை மட்டும் மோடிக்கு சொல்கிறேன். இது திமுக. நான் கருணாநிதியின் மகன். மிசா, எமர்ஜென்சியை பார்த்தவன் இந்த ஸ்டாலின். நீங்கள் எத்தனை ரெய்டு நடத்தினாலும் அதைப் பற்றி நாங்கள் கவலைப்பட மாட்டோம்.
இன்னும் தேர்தலுக்கு 3 நாட்களே உள்ளன. ரெய்டு நடத்தினால் திமுகவினர் வீட்டில் முடங்கிவிடுவார்கள் என நினைக்கிறார்கள். அது அதிமுகவிடம் நடக்கும். ஆனால், நாங்கள் பனங்காட்டு நரிகள். இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்ச மாட்டோம். இதற்கெல்லாம் பதில் தரக்கூடிய நாள் ஏப்ரல் 6 என்பதை மறந்துவிடக் கூடாது.
234 இடங்களில் திமுக வெற்றி பெறும்என நான் ஏற்கெனவே சொல்லியிருந்தேன். தற்போது வரும் கருத்துக் கணிப்புகளிலும் திமுகதான் அதிக இடங்களை பிடிக்கும் என்கிறார்கள். இந்தத் தேர்தலில் ஒரு அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றாலும், அவர் அதிமுக எம்எல்ஏ கிடையாது. பாஜக எம்எல்ஏவாக மாறிவிடுவார். மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்ற துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் தற்போது, பாஜக எம்பி போலவே செயல்படுகிறார்.
பிரதமர் மோடி, தாராபுரத்தில் பேசியபோது திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிறார். பொள்ளாச்சியில் நடந்த சம்பவத்தை அறியாமல் மோடி பேசுகிறார். அதேபோல, உத்தரபிரதேச மாநிலத்தை ஆளுவது பாஜக, அங்கு பெண்கள் பாலியல் வன்முறை செய்யப்பட்டுள்ளனர். அது உங்களுக்கு தெரியாதா?
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டாமல், கிடப்பில் போடப்பட்டுள்ளதை திமுக முன்னிறுத்தி தேர்தலில் பிரச்சாரம் செய்வதால், எனது மகள் வீட்டில் ரெய்டு நடத்த உத்தரவிட்டுள்ளனர். ஆனால், மதுரையில் இன்று (நேற்று) பிரச்சாரம் மேற்கொள்ளும் மோடி எய்ம்ஸ் பற்றி பேச மாட்டார். 1957-ல் முதன்முதலில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது திமுக. அன்று முதல் இன்று வரை திமுக தனது தேர்தல் அறிக்கையை தொடர்ந்து வெளியிட்டு, அவற்றை நிறைவேற்றி வருகிறது. தற்போது திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 505 வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago