மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்றிரவு பட்டாபிஷேகம் நடைபெற்றது.
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி பெருவிழா கடந்த 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் காலையில் தங்கப்பல்லக்கில் புறப்பாடும், மாலையில் மயில் வாகனம், அன்ன வாகனம் உட்பட பல்வேறு வாகனங்களில் முருகன், தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்றிரவு சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. உற்சவர் சன்னதியிலிருந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் சர்வ அலங்காரத்தில் ஆறுகால் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுப்பிரமணிய சுவாமிக்கு தங்க கிரீடம் சூட்டி சுவாமியின் திருக்கரத்தில் நவரத்தினங்கள் பதித்த செங்கோல், சேவல்கொடி சாற்றப்பட்டு பட்டாபிஷேகம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து இன்று முருகப்பெருமான் தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதற்காக மதுரையிலிருந்த மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் திருப்பரங்குன்றத்தில் எழுந்தருள்கின்றனர். ஏப்ரல் 1-ம் தேதி கிரிவலப் பாதையில் தேரோட்டம் நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago