சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி உடன்பாடு ஏற்படாததால், தேமுதிக தனித்து போட்டியிட தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேமுதிக மூத்த நிர்வாகிகள் பார்த்தசாரதி, இளங்கோவன் அமமுகவின் மூத்த நிர்வாகிகள் பழனியப்பன் உள்ளிட்டோர் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று முன்தினம் சந்தித்து பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. ‘‘பேச்சுவார்த்தை நடப்பது உண்மைதான்’’ என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார். இருப்பினும், தேமுதிக கேட்ட தொகுதிகள் கிடைக்காததால் பேச்சுவார்த்தையை தேமுதிக நிறுத்தியது.
இதற்கிடையே, அதிமுக கூட்டணியில் இருந்து விலகல் ஏன்? என்பது குறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விரிவாக பேசியுள்ளார். ஏற்கனவே, 234 தொகுதிகளை உள்ளடக்கி 7 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மண்டல பொறுப்பாளர்கள், அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, கடந்த 2 மாதங்களாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். விருப்ப மனுக்களை பெற்று, நேர்காணல் நடத்தி, அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களையும் தயாராக வைத்திருக்கிறோம். எனவே, தனித்து போட்டியிடவும் தயாராக இருக்க வேண்டுமென பிரேமலதா தெரிவித்திருந்தார்.
இதனிடையே, புதுச்சேரியில் தனித்து போட்டியிட தேமுதிக முடிவு செய்து, முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலையும் நேற்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ள புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தேமுதிக சார்பில் பாகூரில் வி.பி.பி.வேலு, காலாப்பட்டு - எஸ்.ஹரிஹரன் (எ) ரமேஷ், உப்பளம் - வி.சசிகுமார், நெடுங்காடு - ஏ.ஞானசேகர், திருநள்ளாறு - கே.ஜிந்தாகுரு ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago