வீடியோ காலில் அமித் ஷாவுடன் நடந்த பேச்சுவார்த்தை : என்.ஆர் காங் - பாஜக உடன்பாடு இறுதியாகிறது : முதல்வர் வேட்பாளர் ஆகிறார் ரங்கசாமி :

By செ.ஞானபிரகாஷ்

நீண்ட இழுபறிக்குப் பின் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியாகிறது. முதல்வர் வேட்பாளராக ரங்கசாமி அறிவிக்கப்பட உள்ளார். மகா சிவராத்திரியன்று (நாளை மறுநாள்) கூட்டணி தொடர்பான அறிவிப்பை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக தொடர்ந்து பல முயற்சிகளை எடுத்து வருகிறது. மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால், பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, மாநிலத் தலைவர் சாமிநாதன் உள்ளிட்டோர் ரங்கசாமியிடம் பலமுறை பேசியும் தொடர்ந்து ரங்கசாமி மவுனம் சாதித்து வந்தார்.

ஆனாலும், கூட்டணிக்குள் என்.ஆர்.காங்கிரஸை இழுப்பதில் பாஜக தலைமை தீவிரம் காட்டி வருகிறது. தமிழ் மற்றும் ஹிந்தி தெரிந்த ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகளைக் கொண்டு ரங்கசாமியிடம் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

அப்பா பைத்தியம் சாமி கோயிலுக்கு நேற்று காலை ரங்கசாமி வந்த போது, ஓய்வு பெற்ற உயரதிகாரிகள், வீடியோ கால் செய்தனர். அதையடுத்து அமித்ஷாவும், ரங்கசாமியும் ஓய்வு பெற்ற அதிகாரிகள் துணையுடன் பேசினர். இதை என்.ஆர்.காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உறுதிப்படுத்தினர். புதுச்சேரி நேரு வீதியில் உள்ள கடிகார கடையில் வழக்கமாக அமர்ந்திருக்கும் ரங்கசாமியைச் சந்தித்து ‘இந்து தமிழ்’ சார்பில் இதுபற்றி பேசினோம்.

‘அமித்ஷா தங்களுடன் வீடியோ காலில் பேசினாரா?’ என்று கேட்டதற்கு, ‘‘ஆமாம்’’ என தலையாட்டி, சைகை மொழியில் பதில் தந்தார். விடாமல், ‘ஏதும் முடிவு எடுத்துள்ளீர்களா?’ என்று கேட்டதற்கு, ‘சொல்கிறேன்’ என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்தார். ‘கூட்டணி பற்றி முடிவு எடுத்து விட்டீர்களா?’ என்று கேட்டதற்கு, ‘இன்னும் முடிவு எடுக்கவில்லை’ என்று தெரிவித்தார்.

டெல்லியில் இருந்து மீண்டும் அழைப்பு

இதற்கிடையே, நேற்று மதியம் மீண்டும் பாஜக மேலிடத்தில் இருந்து ரங்கசாமியைத் தொடர்பு கொண்டு பேசினர்.

அதைத் தொடர்ந்து உடனடியாக ரங்கசாமி தனது நிர்வாகிகளுடன் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் அக்கட்சியின் சட்டமன்றஉறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 45 நிமிடங்கள் இக்கூட்டம் நடைபெற்றது.

கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின், தனியார் உணவகத்துக்கு ரங்கசாமி சென்றார். அங்கு பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா மற்றும் பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் வந்தனர். அவர்கள் ரங்கசாமியை சந்தித்துப் பேசினர்.

இதுதொடர்பாக ரங்கசாமியிடம் கேட்டதற்கு, "விரைவில் நல்ல முடிவு அறிவிக்கப்படும்; நிச்சயமாக விரைவில் சொல்கிறேன்" என்றார்.

இதுபற்றி பாஜக மேலிடப் பொறுப்பாளர் சுரானாவிடம் கேட்டதற்கு, "ரங்கசாமி தலைமையை ஏற்க தேசிய ஜனநாயக கூட்டணி தயாராக இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி கண்டிப்பாக வரும் தேர்தலில் அமோக வெற்றி பெறும். ஓரிரு நாளில் தொகுதி பங்கீடு அறிவிக்கப்படும்" என்று குறிப்பிட்டார்.

என்.ஆர்.காங்கிரஸுக்கு 17 இடங்கள்

இதுபற்றி அக்கட்சி வட்டாரங்களில் விசாரித்தபோது, "மத்தியில் உள்ள பாஜக ஆட்சியோடு இணக்கமாக சென்றால்தான் புதுச்சேரிக்கு நன்மை கிடைக்கும். அத்துடன் என்.ஆர்.காங்கிரஸ் கேட்கும் தொகுதிகளை தர பாஜக தயாராக உள்ளது. முதல்வர் வேட்பாளராக ரங்கசாமியை அறிவிப்பதாகவும் உறுதி அளித்துள்ளனர். இதையெல்லாம் குறிப்பிட்டு, ‘பாஜக கூட்டணியில் தொடரலாமா?’ என்று கூட்டத்தில் ரங்கசாமி கேட்டார். பலரும் ரங்கசாமியின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். கூட்டணி தொடர்பான முடிவை விரைவில் அறிவிப்பார். வரும் மகா சிவராத்திரி தினத்தில் (மார்ச் 11) இதுபற்றிய அறிவிப்பு, வேட்பாளர் பட்டியல் உள்ளிட்டவை வெளியிட வாய்ப்புள்ளது" என்று தெரிவித்தனர்.

“புதுவையில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில், என்.ஆர்.காங்கிரஸுக்கு 17 இடங்களை ஒதுக்குவது என்றும், மீதம் உள்ள 13 இடங்களில் பாஜக, அதிமுக, பாமக தங்களுக்குள் பிரித்துக் கொள்ளவும் சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முதல்வர் பதவியை ரங்கசாமிக்கு அளிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்