திமுகவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாணியில் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க மு.க.ஸ்டாலின் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக நேர்காணலில் பங்கேற்ற கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:திமுகவுக்கு ஆலோசனை வழங்கி வரும்ஐபேக் நிறுவனம் ஆய்வு செய்து தரும்பட்டியலில் இடம்பெற்ற பெரும்பாலானோருக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என கருதுகிறோம்.
புதுச்சேரியில் திமுக எம்எல்ஏ ராஜினாமா செய்து, காங்கிரஸ் ஆட்சி கவிழ அவரும் ஒரு காரணமாக இருந்ததை தலைவர் ஸ்டாலினால் ஜீரணிக்க முடியவில்லை. திமுகவின் வெற்றி பிரகாசமாக உள்ளது. ஸ்டாலின் கடந்த 2006-ம் ஆண்டுமுதல் முதல்வர் பதவிக்காக காத்துக்கொண்டிருக்கிறார். இந்த தேர்தலை அதற்கான சிறந்த வாய்ப்பாக கருதுகிறார்.
அதனால் பாஜக சார்பில் ஆபரேஷன் தாமரை திட்டத்தை செயல்படுத்தினாலும் அதற்கு வளைந்து கொடுக்காத வேட்பாளர்களை நிறுத்துவதில் ஸ்டாலின் உறுதியாக உள்ளார்.
அதற்காக, பெரிய வழக்குகளில் சிக்காத, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ உள்ளிட்டவற்றிடம் சிக்க வாய்ப்பில்லாத, இணை நோய்கள் இல்லாத, எந்த சூழலிலும் மாற்று கட்சியை சிந்திக்காத, கட்சி கொள்கையில் பிடிப்புள்ளவர்களுக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவது என ஸ்டாலின் முடிவெடுத்திருப்பதாக அறிகிறோம்.
குறிப்பாக, ஜெயலலிதா பாணியில், தொகுதியில் பிரபலம் இல்லாவிட்டாலும், பண பலம் இல்லாவிட்டாலும், சொல்வதை தட்டாமல் கேட்கும் நிர்வாகிகளை நிறுத்தவும் அதிக வாய்ப்புகள் உள்ளன. ஸ்டாலினின் இந்த முடிவால் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், வாரிசுகளை களமிறக்கும் திட்டத்தில் இருக்கும் நிர்வாகிகள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். கட்சியில் பல ஆண்டுகளாக உழைத்துக்கொண்டு கீழ் மட்டத்திலேயே இருக்கும் தொண்டர்கள் பலருக்கு இது நல்ல வாய்ப்பாக இருக்கும் என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago