நாடு முழுவதும் காங்கிரஸ் சிதைந்துகொண்டிருக்கிறதுபுதுச்சேரியில் பாஜக தலைமையிலான ஆட்சிகாரைக்காலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை

By செய்திப்பிரிவு

குடும்ப அதிகாரம் காரணமாக, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சிதைந்துகொண்டிருக்கிறது. புதுச்சேரியில் அடுத்து பாஜக தலைமையிலான ஆட்சி அமையும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

காரைக்கால் சந்தைத் திடலில், பாஜக சார்பில் ‘மலரட்டும் தாமரை, ஒளிரட்டும் புதுச்சேரி’ என்ற முழக்கத்தை முன்வைத்து தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, புதுச்சேரி மாநில பாஜக தலைவர் வி.சாமிநாதன் தலைமை வகித்தார். இதில் பங்கேற்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது:

புதுச்சேரியில் மட்டுமின்றி, நாடு முழுவதிலுமே குடும்ப ஆட்சி அதிகாரம் காரணமாக காங்கிரஸ் சிதைந்து கொண்டிருக்கிறது. காங்கிரஸிலிருந்து ஒவ்வொருவராக பாஜகவில் இணைகின்றனர்.

புதுச்சேரியில் காங்கிரஸ் அரசுதானாக கவிழ்ந்துவிட்டது. மொழிபெயர்க்கும்போது தன் தலைவரிடமே பொய் சொன்னவர், மற்றவர்களிடமும் பொய் பேசியதால்தான் அக்கட்சியிலிருந்து பிரிந்து வருகின்றனர். உலகில் நல்ல பொய் சொல்பவருக்கு விருது கொடுக்க வேண்டுமானால் நாராயணசாமிக்குதான் வழங்க வேண்டும்.

நமச்சிவாயம் தலைமையில் ஆட்சி அமைப்பதாகக் கூறி வெற்றி பெற்ற பின்னர்,டெல்லியில் சோனியா காந்தி குடும்பத்தின் காலைப் பிடித்து நாராயணசாமி முதல்வரானார். இது புதுச்சேரி மக்களுக்கு செய்ததுரோகம் இல்லையா?. ஊழலை வளர்க்கும்வேலையை மட்டுமே அவர் செய்துள்ளார்.

புதுச்சேரியின் வளர்ச்சிக்கு மத்திய அரசு ரூ.15 ஆயிரம் கோடி வழங்கியுள்ளது. இந்த நிதியின் வளர்ச்சித் திட்டங்கள் இங்கு வந்துசேரவில்லை. புதுச்சேரியில் படித்த இளைஞர்கள் 75 சதவீதத்தினர் வேலையின்றி உள்ளனர். பாஜக ஆட்சி அமைந்தால், அது 40 சதவீதமாகக் குறைக்கப்படும். புதுச்சேரியில் தாமரைமலர்ந்துவிடும் என்ற பயத்தின் காரணமாகவே உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் புதுச்சேரியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் புதிய ஆட்சி அமையப் போகிறது. இதை நாராயணசாமியால் தடுக்க முடியாது.

புதுச்சேரிக்கு அண்மையில் வந்த ராகுல் காந்தி, மத்திய அரசு மீன்வளத் துறைக்கு ஏன் அமைச்சகம் அமைக்கவில்லை எனக் கேட்டுள்ளார். 2 ஆண்டுகளாக தனி அமைச்சகம் செயல்பட்டு வருவதைக் கூட அவர் அறியவில்லை. இவர்கள் மக்களுக்கு என்ன செய்வார்கள்?

உலகின் உன்னதமான மொழியான தமிழ் மொழியில் என்னால் பேச இயவில்லை என்பது வருத்தமாக உள்ளது. இவ்வாறு அமித் ஷா பேசினார்.

கூட்டத்தின்போது, முன்னாள் எம்எல்ஏக்கள் ஜான்குமார், கே.வெங்கடேசன், அருள்முருகன், புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் சிவக்கொழுந்துவின் சகோதரர் ராமலிங்கம், அவரது மகன் ரமேஷ், ஜான்குமார் மகன் விவிலியன் ரிச்சர்ட் உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.

மத்திய இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், மாநிலங்களவை உறுப்பினரும், தேர்தல் இணை பொறுப்பாளருமான ராஜிவ் சந்திரசேகர், புதுச்சேரி முன்னாள் அமைச்சர் ஏ.நமச்சிவாயம், பாஜக மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்குப் பின்னர் தனியார் ஹோட்டலில் கட்சி நிர்வாகிகள், தேர்தல் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோருடன் அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டார்.

புதுச்சேரியில் படித்த இளைஞர்கள் 75 சதவீதத்தினர் வேலையின்றி உள்ளனர். பாஜக ஆட்சி அமைந்தால், அது 40 சதவீதமாகக் குறைக்கப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்