அதிமுகவை பயன்படுத்தி தமிழகத்தில் காலூன்ற பா.ஜ.க. முயற்சி

By பி.டி.ரவிச்சந்திரன்

தமிழகத்தில் அதிமுகவை கருவியாகப் பயன்படுத்தி தமிழகத்தில் காலூன்ற பாஜக முயற்சி செய்கிறது என்று மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் பேசினார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் தேர்தல் நிதியளிப்பு மற்றும் பிரச்சாரம் தொடக்க மாநாடு திண்டுக்கல்லில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர்கள் காமராஜ், பாலபாரதி, பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் பேசினார். திண்டுக்கல் மாவட்டம் சார்பில் 10 லட்சத்து 3 ஆயிரம் ரூபாயை அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ்காரத்திடம் தேர்தல் நிதியாக அளிக்கப்பட்டது. அதன் பிறகு அவர் பேசியதாவது:

மத்திய அரசு ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தியாவை ஒரே கட்சி ஆட்சி செய்ய வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். நினைக்கிறது. இந்தியாவின் உண்மையான குடியரசை மாற்ற பாரதிய ஜனதா அரசு நினைக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நூற்றுக்கும் மேற்பட்டவர்களை சிறையில் அடைத்துள்ளது.

மத்திய அரசு பெரிய தொழிலதிபர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது. ஏழை,எளிய, சாமானிய மக்களை கண்டுகொள்வதில்லை. பொதுத் துறை நிறுவனப் பங்குகளை தனியாருக்கு விற்பது, பின்னர் அதை மூடிவிடுவது என செயல்படுகிறது.

வேளாண் சட்டங்களை ஆதரித்து அதிமுக அரசு வாக்களித்தது. தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இல்லை. எனவே அதிமுகவை கருவியாகப் பயன்படுத்தி தமிழகத்தில் காலூன்ற பாரதிய ஜனதா கட்சி முயற்சி செய்கிறது. நமக்கும், அதிமுகவுக்கும் நேரடி போட்டி கிடையாது. பாரதிய ஜனதா கட்சியுடன் தான் நேரடி போட்டி. இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்