எதிர்கால இந்தியாவுக்கு தமிழகமே வழிகாட்டும்நாங்குநேரி பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

எதிர்கால இந்தியா எப்படி இருக்கும் என்பதை தமிழகம்தான் வழிகாட்டப் போகிறது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் `வாங்க ஒரு கை பார்ப்போம்’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி பேசியதாவது:

தமிழகத்துக்கு வருவது என்றால், எனக்கு ஏற்படும் மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் அளவிட முடியாது. இங்கு பயணம் செய்யும்போது, என் நெஞ்சம் தமிழகத்தோடு கலந்து விடுவதை உணர்கிறேன். குழந்தைகள் கை அசைக்கும்போதும் தாய்மார்கள் சிரிக்கும்போதும் வணக்கம் சொல்லும்போதும் நெகிழ்ந்துபோகிறேன். தமிழகம் சிரிக்கும்போது, என் உள்ளம் மகிழ்ச்சியால் நிறைகிறது. ஆகவே, என்னை சிரிக்க வைக்கும் தமிழகத்தை, நான் சிரிக்க வைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

தமிழகத்துக்கும் எங்கள் குடும்பத்துக்கும் இடையே நீண்ட தொடர்பு இருக்கிறது. இந்திராவின் மீது நீங்கள் கொண்ட அன்பு, ராஜீவ் காந்தி மீது உங்களுக்குள்ள பாசம் ஆகியவை எல்லையில்லாதது. இதை உணர்ந்து கொள்ள தமிழகத்தை முழுமையாக படிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

ஏழ்மை நிலையில் இருந்தாலும், சுயமரியாதையை இழக்காத தமிழர்களைப் பார்த்து மகிழ்கிறேன். இந்தியா எதிர்காலத்தில் எப்படி இருக்கப் போகிறது என்பதை தமிழகம்தான் வழிகாட்ட இருக்கிறது. இது எனது உணர்வு. இதற்கு காரணங்கள் பல உள்ளன. இங்குள்ளவர்களின் உள்ளார்ந்த சக்தி.

தமிழகத்தில் ஆயிரக்கணக்கான சிறு, குறு தொழில்கள் உள்ளன. சீனாவின் மிரட்டலையும் நாட்டின் பொருளாதார வீழ்ச்சியையும் எதிர்கொள்ள சிறு குறு தொழில்களால்தான் முடியும். தொலைபேசி, சட்டை, காலணி உள்ளிட்ட பல பொருட்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டவையாக உள்ளன. ஆனால், நம்மிடம் ஆர்வமுள்ள திறமையான இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் நல்ல சக்தி, கனவு இருந்தாலும், இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டத்தை பார்க்க முடிகிறது. இந்தியாவின் மிகப்பெரிய சவால் இது.

தமிழக அரசு ஒழுங்காக செயல்பட்டால் அனைத்து பொருட்களும் தமிழகத்தில் தயாரிக்கப்பட்டவையாக இருக்கும். அப்போது தமிழக தெருக்களில் வேலையில்லா இளைஞர்களைப் பார்க்க முடியாது. ஆனால், டெல்லியில் உள்ள மத்திய அரசு சிறு குறு தொழில்களையும் விவசாயிகளையும் ஆதரிக்கவில்லை.

பிரதமரை பற்றி கூறுவதற்கு பயப்படவில்லை. மோடி என்னை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது. காரணம் நான் நேர்மையானவன். அவர் நேர்மையற்றவர் என்பதை அவருடைய நெஞ்சம் அறியும். இரவில் 30 விநாடிகளில் நான் தூங்கிவிடுகிறேன். தமிழக முதல்வரால் நிம்மதியாக தூங்க முடியாது. காரணம் அவர் நேர்மையானவர் அல்ல. அதனால், அவரால் மோடியை எதிர்கொள்ள முடியவில்லை. முதல்வரை கட்டுப்படுத்துவதால் தமிழகத்தை கட்டுப்படுத்தலாம் என்று மோடி நினைக்கிறார். அதன் வால்யூமைக் கூட்டினால் முதல்வர் சத்தம் போடுவார். குறைத்தால் அமைதியாக இருப்பார். இந்த ரிமோட்கண்ட்ரோல் பேட்டரியை தமிழக மக்கள் விரைவில் அகற்றப்போகிறார்கள்.

தமிழகத்துக்கு புதிய பாதையை உருவாக்க முடியும் என்று நம்புகிறேன். இதற்கு இளைஞர்களின் சக்தியை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு ராகுல்காந்தி தெரிவித்தார்.

கூட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார். பொருளாளர் ரூபி மனோகரன், மாநில பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், பேரவை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, அகில இந்திய செயலாளர்கள் சஞ்சய்தத், டாக்டர் செல்வகுமார், மாணிக்தாகூர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இன்று திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களிலும் நாளை கன்னியாகுமரி மாவட்டத்திலும் ராகுல்காந்தி பிரச்சாரம் செய்கிறார்.

‘மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்'

தூத்துக்குடி விமான நிலையத்துக்கு நேற்று வந்த ராகுல் காந்திக்கு காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்தில் இருந்து வரும்போது, புதுக்கோட்டை அருகே காரில் இருந்து கீழே இறங்கிய ராகுல் காந்தி, அங்கிருந்த ஒரு குழந்தையை தூக்கி கொஞ்சி மகிழ்ந்தார். பெண்கள் ராகுல் காந்தியுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். பின்னர், தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி முதல் குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பு வரை திறந்த காரில் பயணித்தார். வழிநெடுக காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினரும், பொதுமக்களும் திரண்டிருந்தனர். முள்ளக்காடு அருகே உப்பளத் தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். பின்னர், அங்குள்ள உப்பளத்துக்குள் சென்ற ராகுல் காந்தி, உப்பு வாரும் மட்டையை வாங்கி, தானும் உப்பு வாரினார். உப்பு உற்பத்தி குறித்து தொழிலாளர்களிடம் கேட்டறிந்தார். அப்போது, `மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். மழைக்கால நிவாரணம் வேண்டும்’ என்று உப்பள பெண் தொழிலாளர்கள் கோரிக்கை வைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்