எங்கள் ஆட்சியில் அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டோமா..? மோடிக்கு ஸ்டாலின் கேள்வி

By செய்திப்பிரிவு

‘‘தமிழகத்தில் திமுக ஆட்சியின் போது மக்கள் மீதுஅராஜகத்தை கட்டவிழ்த்து விட்டதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியிருக்கிறார். எந்த ஆதாரத்தின் அடிப்படையில் அவர் அப்படி கூறுகிறார்?’’ என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியை திமுக தலைவர் ஸ்டாலின் தொகுதி தோறும் நடத்தி வருகிறார். திண்டிவனம் அருகே தீவனூர் கிராமத்தில் நேற்று இந்நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் பங்கேற்ற ஸ்டாலின் செஞ்சி, மயிலம், திண்டிவனம் தொகுதிக்குட்பட்ட மக்களிடம் குறைகளைகேட்டறிந்தார். நிகழ்ச்சியில்அவர் பேசியதாவது:

இந்நிகழ்ச்சி முலம் இதுவரை 4 கட்டங்களாக 152 தொகுதி மக்களை சந்தித்து மனுக்களை பெற்றிருக்கிறேன். 5-ம் கட்ட நிகழ்ச்சியைஇங்கு தொடங்குகிறேன். மக்கள்என்னிடம் அளித்த இம்மனுக்களில்முறையிட்டுள்ளவைகளை, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் செய்ய முடியும் என நம்புகிறேன்.

திமுகவின் வளர்ச்சியை எப்படியாவது தடுக்க முயற்சிக்கிறார்கள். இன்னும் இரு மாதங்களில் ஆட்சி முடியப் போவதால் அபத்தமான அறிவிப்புகளை முதல்வர் பழனிசாமி வெளியிடுகிறார். 2 மாதங்களில் என்ன செய்ய முடியும்? இடைக்கால பட்ஜெட்டில் கற்பனை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். கடந்த ஆண்டுகளில், இந்த அறிவிப்புகளை ஏன் வெளியிடவில்லை? ரூ. 5.70 லட்சம் கோடிக்கு கடன் வாங்குவது மட்டுமே இந்த அரசுக்கு தெரிந்த ஒரே நிதி நிர்வாகமாக உள்ளது. தற்போது, ரூ. 40 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் விட்டு கஜானாவை காலி செய்து, தமிழகத்தின் வளர்ச்சியை 50 ஆண்டுகளுக்கு பின்னோக்கி கொண்டு சென்றுவிட்டனர்.

பிரதமருக்கு கண்டனம்

தமிழகத்திற்கு வந்த பிரதமர் மோடி. திமுகவை விமர்சித்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். திமுக, தனது ஆட்சியில் அனைத்து மாவட்டங்களிலும் அராஜகத்தைக் கட்டவிழ்த்து விட்டதாக மோடி குற்றம் சாட்டுகிறார். அதில், ‘அதிகம் பாதிக்கப்பட்டது தமிழகப் பெண்கள்’ என்றும் சொல்லியிருக்கிறார். எந்த ஆதாரத்தின் அடிப்படையில் மோடி இப்படி கூறுகிறார்? 2002-ல் குஜராத்தில் நடந்த பச்சை படுகொலையை இந்தியா இன்னும் மறக்கவில்லை.குடியுரிமைச் சட்டம் மூலம் மக்களை வேதனைக்குள்ளாக்கியது யார்? மோடிக்கு திமுகவைப் பற்றி பேச உரிமை இல்லை.

‘ஒரு பெண் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஜெயலலிதா உதாரணம்’ என்று மோடி கூறியுள்ளார். ‘மாநிலங்களில் சிறந்த ஆட்சியை கொடுத்தது தமிழகத்தைச் சேர்ந்த இந்த லேடியா? குஜராத்தைச் சேர்ந்த மோடியா!’ என்று கேட்டவர் ஜெயலலிதா. ‘ 5 ஆண்டுகால ஜெயலலிதா ஆட்சியில் ஊழல் பெருகி விட்டது’ என்று 2016-ம் ஆண்டுமே மாதம் 7-ம் தேதி ஓசூர்,சென்னையில் மோடி பேசியதை மறந்து விட்டீர்களா? ‘ஊழல் மேல் ஊழல் செய்யும் ஜெயலலிதா’ என்று 2016 மே மாதம் 5-ம் தேதி மதுரையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார். இதுபோன்ற நாடகங்களைப் பார்த்து பழகியவர்கள் தமிழக மக்கள். இந்த சந்தர்ப்பவாத கூட்டணியை மக்கள் நன்றாக புரிந்துவைத்துள்ளனர். மக்கள் ஏமாற மாட்டார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்