புதுச்சேரியில் நிலவும் உச்சக்கட்ட அரசியல் பரபரப்பிற்கு நடுவில், நேற்று புதுவைக்கு வருகை தந்தார் பிரதமர் மோடி.
அவரை லாஸ்பேட்டை விமானநிலையத்தில் ஆளுநர் தமிழிசையுடன் சென்று வரவேற்றார் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிரதான எதிர்க்கட்சித் தலைவரான ரங்கசாமி.
மத்திய அமைச்சர் அர்ஜூன்ராம்மெக்வால் உள்பட 20 பேர் மட்டுமேவரவேற்புக்கு அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் ரங்கசாமி.
ரங்கசாமி சிரித்த முகத்துடன் கைகூப்பி வரவேற்க, பிரதமர் மோடி அவரை கட்டிப் பிடித்து புன்னகைத்தார்.
"உங்களை பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு..! ஏன் டெல்லிக்கு வரச் சொன்னால் வரமாட்டேங்கிறீங்க..! டெல்லிக்கு வாங்க..!" என பிரதமர் அன்பாய் அழைக்க, தனது அக்மார்க் சிரிப்பையே பதிலாய் தந்தார் ரங்கசாமி.
வழக்கமாக முதல்வராக இருக்கும்போதே, டெல்லிக்குச் செல்வதை கூடிய மட்டிலும் தவிர்க்கும் பழக்கம் உடையவர் ரங்கசாமி. தனது நிர்வாகத் தேவையை தொலைபேசியில் பேசியோ, தனது பிரதிநிதிகளை அனுப்பியோ காரியம் சாதிப்பவர்.
இந்த மனநிலை உடையவரை, ‘டெல்லிக்கு வாருங்கள்’ என பிரதமர் பேச அழைத்திருக்கிறார், ‘அவர் ஏற்பாரா..? டெல்லி செல்வாரா..?’ என்பது தெரியவில்லை.
புதுவையைப் பொறுத்தவரையில் பாஜக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இக்கூட்டணிக்கு தலைமை ஏற்றுமுதல்வர் பதவியை பெற வேண்டும்என்பதே ரங்கசாமியின் இலக்கு.
அண்மையில் காங்கிரஸில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் பாஜகவில் இணைந்துள்ளார். இவர், ஒரு வகையில் ரங்கசாமியின் மருமகனும்ஆவார். பாஜக தரப்பில் நமச்சிவாயத்தை முதல்வர் வேட்பாளராக முன் நிறுத்தும் பணிகளும் நடக்கின்றன. இதற்கு மாற்றாக ரங்கசாமிக்கு மத்தியில் முக்கியப்பதவி தரும் திட்டமும் இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறது.
இந்த தருணத்தில், ‘வாருங்கள் பேசலாம்’ என பிரதமர் டெல்லிக்கு அழைத்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago