புதுச்சேரியில் காங்கிரஸ் தரப்பில் அடுத்தடுத்து எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து காங்கிரஸ் அரசு கவிழ்ந்துள்ளது. ஆளுநர் தமிழிசையைச் சந்தித்து முதல்வர் நாராயணசாமி நேற்று ராஜினாமா கடிதத்தை அளித்திருக்கிறார். இதையடுத்து அடுத்தகட்ட நகர்வுகளுக்கு எதிர்க்கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன.
தேர்தல் நெருங்கும் நேரத்தில், மீதமிருக்கும் நாட்களை எப்படி எதிர் கொள்வது என ஆண்ட தரப்பிலும், எதிர் தரப்பிலும் நேற்று மதியம் முதலே ஒன்று கூடி தீவிரமாக விவாதித்து வருகின்றனர்.
இன்னும் ஒருசில வாரங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ளது. இதனால் ஆட்சி அமைக்க எதிர்தரப்பில் இருந்து உரிமை கோர வாய்ப்பில்லை என்ற தகவல் முதலில் வெளியானது.
இந்நிலையில், பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா என்ஆர்.காங்கிரஸ் நிறுவனரும், முன்னாள் முதல்வருமான ரங்கசாமியை நேருவீதியில் உள்ள அலுவலகத்தில் நேற்றுமாலை சந்தித்தார். இருவரும் தனிமையில் சுமார் 20 நிமிடங்கள் பேசினர்.
இதுபற்றி அரசியல் வட்டாரங்களில் விசாரித்தபோது, “கடந்தமுறை பிரதமர் மோடி வந்தபோது புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு இருந்தது. வரும் 25-ம்தேதி புதுச்சேரிக்கு மோடி வருகிறார். அந்த தருணத்தில், என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக ஆதரவுடன் ஆட்சியமைக்க உரிமை கோரும் வாய்ப்பும் உள்ளது” என்று குறிப்பிட்டனர்.
அதிமுக சட்டப்பேரவை கட்சித்தலைவர் அன்பழகன் எம்எல்ஏவிடம் கேட்டதற்கு, “அடுத்த நடவடிக்கை குறித்து கட்சியின் தலைமையைக் கேட்டு முடிவு செய்வோம்” என்றார்.
முதல்வர் நாராயணசாமி தலைமையில் அவரது ஆதரவாளர்களும் நேற்று ஆலோசனை நடத்தினர். இதுபற்றி அனந்தராமன் எம்எல்ஏவிடம் கேட்டதற்கு, “எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைக்க உரிமை கோரினால் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்ய முடிவு எடுத்துள்ளோம்” என்று குறிப்பிட்டார்.
மாநில பாஜகத் தலைவர் சாமிநாதன் எம்எல்ஏவிடம் இதுபற்றி கேட்டதற்கு, “புதுச்சேரிக்கு புதிய அரசு தேவை. வரும் பிப்.25-ல் புதுச்சேரிக்கு பிரதமர் மோடி வருகையை எதிர்பார்த்து உள்ளோம், ஆனாலும், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் ஆசிர்வாதத்துடன் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுகவுடன் இணைந்துதேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் புதுச்சேரியின் எதிர்காலம் சிறந்ததாக அமையும்” என்றார்.
இந்நிலையில் பாஜக கூட்டணிக் கட்சிகள் தரப்பில் விசாரித்தபோது, “ஆட்சி அமைக்க உரிமை கோர போவதில்லை. தேர்தலை சந்திக்கவே முடிவு எடுத்துள்ளோம்” என்று தெரிவித்தனர். பல்வேறு கட்சியினரின் கருத்துகளை வைத்து பார்க்கும் போது, புதுச்சேரியில் தற்போதைக்கு குடியரசுத் தலைவர் ஆட்சியேஅமலாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
கடந்தமுறை பிரதமர் மோடி வந்தபோது புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு இருந்தது. வரும் 25-ம் தேதி புதுச்சேரிக்கு மோடி வருகிறார். அந்த தருணத்தில், என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக ஆதரவுடன் ஆட்சியமைக்க உரிமை கோரும் வாய்ப்பும் உள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago