மதுரை வடக்கு அல்லது தெற்கு தொகுதியில் போட்டியிட விரும்பும் தமாகா

By என்.சன்னாசி

சட்டப் பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி விட்டன. திமுக கூட்டணியில் இடம் பெறும் கட்சிகள் ஓரளவுக்கு முடிவாகிவிட்டன.

ஆனால், அதிமுகவில் கூட்டணி நிலவரம் இதுவரை தெளிவாகவில்லை. எனினும், இந்தக் கூட்டணியில் தாங்கள் நீடிப்பது உறுதி என்றும், தங்களுக்கு கவுரவமான எண்ணிக்கையில் சீட் கிடைக்கும் என நம்புவதாகவும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஏற்கெனவே தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து தனது கட்சியை பலப்படுத்தும் பணிகளை அவர் முடுக்கிவிட்டுள்ளார். முதல் கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாணவர் அணி உட்பட பல்வேறு அணிகளில் புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார்.

கட்சியின் இரண்டாம் கட்ட நிர்வாகிகள் தேர்தல் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர். கட்சித் தலைவர் ஜி.கே.வாசனும் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சென்று நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் பற்றி மாநில, மாவட்ட நிர்வாகிகள் தங்கள் கருத்துக்களை கட்சித் தலைமையிடம் தெரிவித்து வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் குறைந்தது ஒரு தொகுதியிலாவது போட்டியிட வேண்டும் என்ற முனைப்புடன் கட்சியினர் செயல்படுகின்றனர்.

இதுகுறித்து தமாகா மதுரை மாவட்ட நிர்வாகிகள் கூறும்போது, ‘எங்கள் கட்சிக்கு மேற்கு மாவட்டங்களிலும், தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் வாக்கு வங்கி உள்ளது. அதிமுக கூட்டணியில் இரட்டை இலக்கத் தொகுதிகளைப் பெற கட்சித் தலைமையிடம் வலியுறுத்தியுள்ளோம். மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை மதுரை வடக்கு தொகுதி அல்லது தெற்கு தொகுதியில் போட்டியிட திட்டமிட்டு உள்ளோம். இது தொடர்பாக தலைவர் ஜி.கே.வாசனிடம் தெரிவித்துள்ளோம்’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்