‘ஆண்டவன் சொல்றான் அருணாசலம் செய்றான்’ரஜினி ‘பஞ்ச்’ … ஸ்டாலின் ‘நச்’...

By ந.முருகவேல்

‘ஸ்டாலின் தான் வராரு! விடியல் தான் தரப் போறாரு!| என்ற வாசகத்துடன் ‘பிளக்ஸ் பேனர்’ ஜொலிக்க விருத்தாசலத்துக்கு நேற்று வந்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

‘ உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சிக்காக மேடை ஏறிய அவர், அங்கிருந்த கோரிக்கை மனுபெட்டியில் மனு போட்டவர்களின், சில சீட்டுகளை எடுத்து, அதில் இருந்த பெயரை குறிப்பிட்டு பேச அழைத்தார்.

மனு கொடுத்தவர்கள் தங்கள் குறைகளைக் கூறி, அதற்கு பதிலளித்துப் பேசிய ஸ்டாலின், “நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள், நமது ஆட்சி அமைந்தவுடன் உங்கள் கோரிக்கை தீர்க்கப்படும். இன்னும் சொல்லப் போனால், ஓரிரு நாட்களில் கூட தீர்ந்துவிடும். ஏனென்றால் நான் எதைப் பேசுகிறோனோ அதை உடனே செய்து விடுகிறார் முதல்வர் பழனிசாமி.

முதல்வர் மனதில் இருப்பதை நான் அறிந்து பேசுவதாக கூறுகிறார். எனக்கு அந்த மாயாஜாலமெல்லாம் தெரியாது.கரோனா காலத்தில், ‘இ.பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும்’ என்றேன், சில நாள் தாமதித்து ரத்து செய்தார், ‘சட்டப்பேரவைக் கூட்டத்தை தவிர்க்க வேண்டும்’ என்றேன். பின்னர் கூட்டத்தை ரத்து செய்தார். ‘10-ம் வகுப்புத் தேர்வை ரத்து செய்யுங்கள்’ என்றேன். தேர்வு தேதியை அறிவித்துவிட்டு, பின்னர் தேர்வை ரத்து செய்தார். ‘மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஓதுக்கீடு வேண்டும்’ என்ற கோரிக்கையை முன்வைத்து ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தி நெருக்கடி கொடுத்தபோது, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீட்டை அறிவித்தார்.

‘மக்களுக்கு கரோனா பரிசோதனை செய்யுங்கள்’ என்றேன். முதலில், ‘அதற்கெல்லாம் அவசியமில்லை’ என்றார். ஆனால் இந்தியாவிலேயே அதிக பரிசோதனை நடத்தப்பட்டிருப்பது தமிழகத்தில்தான் என்ற நிலை ஏற்பட்டது. இப்படியாக பலவற்றுக்கு நான் குரல் கொடுத்தப் பின்னர்தான், அதை செயல்படுத்துகிறார் முதல்வர் பழனிசாமி.

நடிகர் ரஜினிகாந்த் ஒரு திரைப்படத்தில் பேசிய வசனம் நினைவுக்கு வருகிறது, ‘ஆண்டவன் சொல்றான், அருணாச்சலம் செய்றான்’ என்று சொல்வார். அதைப் போல, ‘ஸ்டாலின் சொல்றார், எடப்பாடி செய்றார்’’ என்றார்.

தொடர்ந்து, “என் குடும்பமே விவசாயக் குடும்பம், ‘நானும் ஒரு விவசாயிதான்’ என்று முதல்வர் பழனிசாமி அடிக்கடி கூறி வருகிறார். இதைக் கேட்கும்போது, ‘நானும் ரவுடி தான்’ காமெடி வசனம் நினைவுக்கு வருகிறது” என்று நேற்றைய கூட்டத்தில், கொஞ்சம் ‘சினி’ டச்சாய் பேசினார் ஸ்டாலின்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்