தனியார் ஆய்வகங்களில் நடத்தப்படும் கரோனா பரிசோதனைக்கான கட்டணத்தை ரூ.800 ஆக தமிழக அரசு குறைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை:
கரோனா தொற்றைக் கண்டுபிடிப்பதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனையை தமிழகத்தில் உள்ள தனியார் ஆய்வகங்களில் இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ரூ.3,000 முதல் ரூ.3,500 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களின் குறைந்தபட்ச கட்டணத்தைவிட 4 மடங்குக்கும் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்காதது வருத்தமளிக்கிறது.
தமிழகத்தில் 221 கரோனா ஆய்வகங்கள் உள்ளன. இவற்றில்154 ஆய்வகங்கள் தனியாருக்கு சொந்தமானவை. தனியார் ஆய்வகங்கள் மூலம் அதிக அளவில் ஆய்வுகள் நடத்தப்பட்டால், ஆய்வுகளின் எண்ணிக்கையை அதிகமாக்கி கரோனா வைரஸ் தொற்றை மிகவும் விரைவாகவும் எளிதாகவும் கட்டுக்குள் கொண்டுவர முடியும்.
தனியார் ஆய்வகங்களில் மக்கள் அதிக எண்ணிக்கையில் ஆய்வு செய்து கொள்ள வேண்டும் என்றால், அதற்கான ஆய்வுக் கட்டணம் கட்டுபடியாகும் அள வில் இருக்க வேண்டும்.
கரோனா ஆய்வுக்கான கருவிகளின் விலை தொடக்கத்தில் மிகவும் அதிகமாக இருந்தது. ஆனால், இப்போது ஓர் ஆய்வுக்கான கருவியின் விலை ரூ.200 ஆக குறைந்து விட்ட நிலையில், அதைவிட 15 மடங்கு கட்டணம் வசூலிப்பது நியாயமல்ல. கரோனா ஆய்வுக் கட்டணத்தை ரூ.400 ஆக குறைக்க முடியுமா என்று மத்திய அரசிடமும் தனியார் ஆய்வகங்களிடமும் உச்சநீதிமன்றம் அண்மையில் கேள்விஎழுப்பியுள்ளது.
எனவே, பொதுநலன் கருதிதமிழகத்தில் தனியார் ஆய்வகங்களின் கரோனா பரிசோதனை கட்டணத்தை மற்ற மாநிலங்களுக்கு இணையாக ரூ.800 ஆக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் தெரிவித் துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago