பள்ளிப் பருவத்திலேயே அரசின் ‘புத்தகப் பூங்கொத்து: வகுப்பறைக்கு ஒரு நூலகம்’ திட்டம் மூலமாகப் புத்தகங்கள் எனக்கு அறிமுக மாயின. முக்கியமான பகுதிகளை டைரியில் குறிப்பெடுத்து வைத்துக் கொள்வேன். அவை பள்ளியில் நடைபெறும் கட்டுரை, கவிதைப் போட்டிகளில் பரிசு பெற உதவின. வெற்றியோ தோல்வியோ போட்டியில் கலந்துகொள்வதற்குப் புத்தகங்கள் எனக்கு ஊக்கம் கொடுத்தன. அதன் நீட்சியாகச் சிறுவர் மலர், படக்கதைகள் என என் வாசிப்பு விரிந்தது.
திரைப்படங்களைப் பார்ப்பதைவிடப் புத்தகம் படிப்பது அலாதியானது. கதையில் வரும் கதாபாத்திரமாகவே என்னைப் பாவித்துக் கொள்வேன். அதன் தொடர்ச்சியாகவே பாடநூல்களைத் தாண்டிய வாசிப்பு ஆர்வம் எனக்குள் நுழைந்தது. பொது அறிவுப் புத்தகங்களை வாசிக்க அம்மா என்னை உற்சாகப்படுத்துவார். நாளிதழ்களில் வரும் குறுக்கெழுத்துப் புதிர்களைக் கண்டுபிடித்துக் குறிக்க அம்மாவுக்கும் எனக்கும் போட்டியே நடக்கும்.
வார இதழ்களில் ஆரம்பித்த வாசிப்பு, நாவல் களுக்கு மாறி நூலகத்தை அறிமுகப்டுத்தியது. ஐந்து வருடக் கல்லூரி வாழ்க்கையில் கல்லூரி நூலகம் என் ஆர்வத்தை மேலும் மேம்படுத்தியது. சிவசங்கரி, இந்துமதி, பிரபஞ்சன், ராஜேஷ்குமார், பாவண்ணணின் பயணக்கட்டுரைகள், கல்கியின் சரித்திர நாவல்கள் எனச் சிலவற்றைத் தேடிப்படித்தேன்.
கதைப்புத்தகங்களை மட்டுமே படித்துக் கொண்டிருந்த என்னை எழுத்தாளர் மதனின் ‘வந்தார்கள் வென்றார்கள்’ புத்தகம் மிகவும் கவர்ந்தது. அது முகலாய சாம்ராஜ்ஜியத்தை அப்படியே கண்முன் நிறுத்தியது. சுஜாதாவின் ‘ஏன்? எதற்கு? எப்படி?’ புத்தகம், பல்வேறு துறைகள் தொடர்பான கேள்விகளுக்கு விடையாக அமைந்தது. முகில் எழுதிய ‘வெளிச்சத்தின் நிறம் கருப்பு’, ‘அண்டார்க்டிகா’ போன்றவை மறக்க முடியாத நூல்கள்.
கரிசல் இலக்கிய எழுத்தாளர்களான கி.ரா, கு.அழகிரிசாமி ஆகியோரது படைப்புகளும் குறிப்பாக சோ.தர்மனின் ‘வௌவால் தேசம்’ நாவலும் எங்கள் வட்டாரப் பகுதிகளின் தெரியாத தகவல்களைத் தெரிந்துகொள்ள உதவின.
‘இந்து தமிழ்திசை’ நாளிதழில் வெளியான இஸ்ரேல் பாலஸ்தீனம் போர்க்களக் குறிப்புகள், அந்த நாடுகளின் வரலாறு, அம்மக்களின் வாழ்க்கை நிலையைத் தெளிவாக எடுத்துக்காட்டின. வருடந்தோறும் நடக்கும் புத்தகக்காட்சியில் குறைந்தது இரண்டு புத்தகங்களையாவது வாங்கிவிட வேண்டும் என்பதை நோக்கமாக வைத்திருக்கிறேன். வாசிக்க நினைக்கும் புத்தகங்களை எல்லாம் வாங்கிப் படிக்க வேண்டும் என்பது என் விருப்பம்.
- பி. சுபத்ரா, கோவில்பட்டி.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago