வாட்ஸ்அப்பை நம்ப முடியாது என்ற எலான் மஸ்க்கின் கருத்துக்கு மெட்டா நிறுவனம் மறுப்பு

By செய்திப்பிரிவு

சான் பிரான்சிஸ்கோ: வாட்ஸ்அப்பை நம்ப முடியாது என்ற எலான் மஸ்க்கின் கருத்துக்கு மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் மெசேஞ்சர் தளம் மறுப்பு தெரிவித்துள்ளது.

என்ன நடந்தது? ட்விட்டர் ஊழியர் ஒருவர்‌ தான் உறக்கத்தில் இருந்த போது வாட்ஸ்அப்‌ மெசேஞ்சர், மைக்ரோபோன் பேக்கிரவுண்டில் இயங்குவதாக சொல்லி ட்வீட் செய்தார். அதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பகிர்ந்திருந்தார். அதில் பயனர்கள் சிலர் தாங்களும் இது மாதிரியான சிக்கலை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்திருந்தனர். அந்த ட்வீட்டில் 'எதையும் நம்பாதே' என மேற்கோள் காட்டி எலான் மஸ்க் ட்வீட் செய்திருந்தார். இதற்கு வாட்ஸ்அப் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் விளக்கம்: "மைக்ரோபோன் செட்டிங்கின் கன்ட்ரோல் முழுவதும் பயனர்கள் வசம்‌ இருக்கிறது. இது ஆண்ட்ராய்டு தரப்பில் வழங்கப்பட்டு‌ இருக்கலாம். Bug-ஆக கூட இருக்கலாம். இது‌ குறித்து கூகுள் தான் விசாரணை செய்ய வேண்டும். பயனர்கள் வாட்ஸ்அப் தளத்திற்கு மைக்ரோபோன் பர்மிஷன் அக்சஸ் தருகிறார்கள். அதன் மூலம் வீடியோ அழைப்பு, வாய்ஸ் அழைப்பு மற்றும் வாய்ஸ் ரெக்கார்டிங் செய்யும் போது மட்டுமே வாட்ஸ்அப், மைக்ரோபோனை பயன்படுத்தும். இது முழுவதும் எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன் பாதுகாப்பு இருப்பதால் அதை வாட்ஸ்அப் தளத்தால் கேட்க முடியாது" என வாட்ஸ்அப் விளக்கம் அளித்துள்ளது.

இதற்கு முன்பும் பிரைவசி சார்ந்த சிக்கலை வாட்ஸ்அப் எதிர்கொண்டது. பயனர்களின் தொலைபேசி எண், சாதனம் (டிவைஸ்) குறித்த தகவல், இருப்பிடம் போன்ற பயனர் தரவை வாட்ஸ்அப் தனது தாய் நிறுவனமான மெட்டாவுடன் பகிர்ந்தது. வாட்ஸ்அப் பிரைவசி சார்ந்த சிக்கலில் சிக்கும் போதெல்லாம் டெலிகிராம் மற்றும் சிக்னல் போன்ற தளங்கள் பயனர்களுக்கு அதிக பிரைவசி வழங்குவதாக தெரிவிக்கும். மறுபக்கம் ட்விட்டர் தளத்தில் வாய்ஸ் மற்றும் வீடியோ சாட் மேற்கொள்ளும் வசதி அறிமுகமாக உள்ளதாவும் தெரிகிறது. இதன் மூலம் பயனர்கள் உலகில் யாருடன் வேண்டுமானாலும் மொபைல் எண் இல்லாமல் பேசலாம் என மஸ்க் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE