வீடியோ இணையதளங்களில் யூடியூப் முன்னணியில் இருந்தாலும், வேறு பல வீடியோ இணையதளங்களும் அநேகம் இருக்கின்றன. அத்துடன், வழக்கமாக அறியப்படும் பொழுதுபோக்கு, நகைச்சுவை வீடியோக்கள் தவிர எண்ணற்ற வகை வீடியோக்களும் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றில் சில அசரவைக்கும் பொக்கிஷங்களைக் கண்டறியலாம். இதற்காக இணையத்தில் அங்கும் இங்கும் அல்லாடத் தேவையில்லை. சுவாரசியமான வீடியோக்களை அடையாளம் காட்டும் அருமையான இணையதளங்கள் இருக்கின்றன. அவற்றில், நீங்கள் புக்மார்க் செய்ய வேண்டிய தளங்கள்:
ஆன்லைன் டிவி
ஹைப்பர்ஸ்கிரீன் இணையதளத்துக்கு விஜயம் செய்தால் அதன் முகப்புப் பக்கத்திலேயே வரிசையாக வீடியோ நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம். ஆன்லைன் டிவி என வர்ணித்துக்கொள்ளும் இந்தத் தளம், பல்வேறு வகையான சுவாரசியமான வீடியோ நிகழ்ச்சிகளைப் பட்டியலிட்டுப் பரிந்துரைக்கிறது. ஷேக்ஸ்பியரைப் புரிந்துகொள்வது என்பதில் தொடங்கி, ஜப்பானில் அவசியம் பார்க்க வேண்டிய இடங்கள்வரை பலவகையான வீடியோ நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம்.
எந்த வீடியோவைப் பார்க்க விருப்பமோ அதை கிளிக் செய்தால் போதும், வீடியோ ஓடத் தொடங்கிவிடும். அதாவது முகப்புப் பக்கத்திலேயே பார்க்கலாம். சில வீடியோக்களை மட்டும் வெளியே சென்று அதற்கான இணையதளத்தில் பார்க்க வேண்டியிருக்கிறது. இந்தப் பட்டியலே சுவாரசியமாக இருந்தாலும், பயனாளிகள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப, வீடியோக்களை அவற்றின் வகைக்கேற்ப தேர்வு செய்யலாம். குறிப்பிட்ட வீடியோவைத் தேடிப் பார்ப்பதற்கான தேடல் வசதியும் இருக்கிறது. உறுப்பினராகப் பதிவுசெய்து கொண்டால், கூடுதல் வசதிகளும் இருக்கின்றன. தினமும் புதிய வீடியோக்கள் பட்டியலிடப்படுகின்றன.
இணைய முகவரி: https://www.hypescreen.com/
பரிந்துரை புதிது
வீடியோக்களைத் தேடும்போது பொதுவாக அவற்றின் வகைகளைத்தான் குறிப்பிட்டுத் தேடுவோம். உதாரணத்துக்குக் கல்வி வீடியோ அல்லது அறிவியல் வீடியோ எனத் தேடுவோம். இதற்கு மாறாக, பயனாளிகள் தங்கள் மனநிலைக்கு ஏற்ற வீடியோக்களைத் தேட வழிசெய்கிறது புதுமை இணையதளமான ஃபைண்டி. மகிழ்ச்சி, சோகம், உற்சாகம், ஊக்கம், ஆர்வம், நம்பிக்கை, பரிவு எனப் பலவகையான மனநிலைகளைக் குறிப்பிட்டு அதற்குரிய வீடியோக்களைத் தேடிப் பார்க்கலாம். இந்த மனநிலைகள் அழகான எமோஜிகள் மூலம் உணர்த்தப்படுகின்றன. அவற்றிலிருந்து தேர்வுசெய்த பின், வீடியோ வகையையும் தேர்வு செய்யலாம். வீடியோவுக்கான கால அளவையும் தேர்வு செய்யலாம். முகப்புப் பக்கத்தில் பட்டியலிடப்படும் வீடியோக்களையும் பார்த்து ரசிக்கலாம்.
சுவாரசியமான வீடியோக்களைக் கண்டறிவதற்கான தளம் இது.
இணைய முகவரி: https://www.findie.me/
செய்தி வீடியோக்கள்
செய்தி நோக்கிலான வீடியோக்கள் தேவையெனில், டிக் வீடியோ பகுதி ஏற்றது. சமூகத் திரட்டி வகை சேவைகளில் முன்னோடியான டிக் அறிமுகமான காலத்தில், பயனாளிகள் செய்தி இணைப்புகளைப் பகிர்ந்துகொள்ள வழி செய்தது. பயனாளிகளே அந்த இணைப்புகளை வாக்களித்து முன்னிலை பெறச்செய்யலாம். இது டிக் அறிமுகம் செய்த புதுமை அம்சமாக விளங்கியது. சில ஆண்டுகள் செல்வாக்குடன் திகழ்ந்த நிலையில் பின் தங்கிய டிக், இப்போது வீடியோ பரிந்துரை சேவையாக உருமாற்றம் பெற்றிருக்கிறது. இதன் முகப்புப் பக்கத்தில் அருமையான செய்தி வீடியோக்களைப் பார்க்கலாம். வேறு வகையான வீடியோக்களையும் பார்க்கலாம்.
அறிவியல், தொழில்நுட்பம், செய்தி, பொழுதுபோக்கு எனப் பலவேறு பிரிவுகளிலிருந்தும் தேர்வு செய்யலாம். இப்போது பெரிதாகப் பேசப்படும் செய்தி சார்ந்த வீடியோக்கள் முன்னிலைப்படுத்தப்படுகின்றன.
இணைய முகவரி: http://digg.com/video
கதை சொல்லும் படங்கள்
இலக்கில்லாத வீடியோக்களைவிட அர்த்தமுள்ள வீடியோக்களைப் பார்க்க விருப்பம் எனில், ஷார்ட் ஆஃப் தி வீக் இணையதளம் கச்சிதமாக இருக்கும். குறும்படம், ஆவணப்பட வகைகளைச் சேர்ந்த வீடியோக்களிலிருந்து கவனமாகத் தேர்வு செய்யப்பட்ட அருமையான வீடியோக்களை இந்தத் தளம் பரிந்துரைக்கிறது. எல்லாமே ஏதோ ஒரு வகையில் கதை சொல்லும் வீடியோக்கள்.
ஒவ்வொரு வீடியோவுடனும் அதற்கான அறிமுகமும் சுருக்கமாக இடம்பெறுகிறது. இந்த அறிமுகம் வீடியோவில் எதிர்பார்க்கக்கூடிய விஷயங்களுக்கான வழிகாட்டியாக அமையும். ஈரானிய படங்களில் தொடங்கி இசை வீடியோவரை பலவகை குறும்படங்களைப் பார்த்து ரசிக்கலாம். இதன் நேர்த்தியான முகப்புப் பக்கமும் கவர்கிறது. பல ஆண்டுகளாகச் செயல்பட்டுவரும் இணையதளம் இது.
இணைய முகவரி:
https://www.shortoftheweek.com/
கல்வி வீடியோக்கள்
அன்பிளக்டிவி மிகவும் எளிமையான வீடியோ. ஆனால், மிகவும் சுவாரசியமானது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்குப் பதிலாகப் பயனுள்ள வீடியோக்களைப் பரிந்துரைப்பதுதான் இந்தத் தளத்தின் நோக்கம். முகப்புப் பக்கத்தில் எப்போதும் ஒரு வீடியோ பரிந்துரைக்கப்படுகிறது. அந்த வீடியோ பிடிக்காவிட்டால், அடுத்த வீடியோவை கிளிக் செய்யலாம். இல்லையெனில், அடுத்த வீடியோவுக்கு மாறலாம். இப்படி வரிசையாக வீடியோக்களைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். எல்லாமே புதிய விஷயங்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய வீடியோக்கள்.
இணைய முகவரி: http://unplugthetv.com/
சுட்டீஸ்களுக்கான வீடியோ
சிறுவர், சிறுமிகள் பார்த்து ரசிக்கும் வகையில் அவர்கள் பிஞ்சு மனதுக்கு ஆர்வம் அளிக்கும் வகையிலான வீடியோக்களைப் பரிந்துரைக்கிறது திகிட்ஸ்ஷுட்சீதிஸ் இணையதளம். அறிவியல், தொழில்நுட்பம், இசை, அனிமேஷன் எனப் பலவகையான வீடியோக்களைப் பார்க்கலாம். எல்லாமே கவனமாகத் தேர்வு செய்யப்பட்டுப் பரிந்துரைக்கப்படுபவை.
இணைய முகவரி:
http://thekidshouldseethis.com/
தளம் புதிது: இணைய கடிகாரம்
கெடு வைத்துக்கொண்டு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு செயலை முடிக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு உதவும் வகையில் அமைந்திருக்கிறது டைமர் இணையதளம். இந்தத் தளத்தின் உள்ள நேரம் காட்டும் கருவியில், நமக்கான நேரத்தை அமைத்துக்கொண்டு அதற்கேற்ப செயல்படலாம். பெரும்பாலும் சமையலறையில் பயன்படுத்துப்படுவது போன்ற டைமர் சாதனம் இந்தத் தளத்தில் உள்ளது. இதில் உள்ள பச்சை நிற அம்புக்குறி மூலம் நேரத்தைக் குறிப்பிட்டு கெடு வைத்துக்கொள்ளலாம். அதன் பிறகு அந்த நேரம் குறைந்துகொண்டே வரும். அதைக் கெடுவாக வைத்துக்கொண்டு வேலைகளைச் செய்து முடிக்கலாம். சமையல் வேலை தொடங்கி உடற்பயிற்சி செய்வது, பாடல் கேட்பது எனப் பலவற்றுக்கு இதைப் பயன்படுத்தலாம். சிக்கலான கூடுதல் அம்சங்கள் இல்லாத மிகவும் எளிமையான இணையதளம். கவனச்சிதறலைக் குறைத்துக்கொண்டு செயல்திறனை அதிகமாக்கிக்கொள்ள விரும்புகிறவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
இணைய முகவரி: http://timerrr.com/
செயலி புதிது: ஆங்கிலம் கற்கலாமா?
ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளைக் கற்றுக்கொள்ள ஸ்மார்ட்போன் செயலிகள் நிறைய இருக்கின்றன. இவற்றில் மிகவும் எளிமையானதாகவும் பயன்படுத்த ஏற்றதாகவும் இருக்கிறது 4 கார்ட்ஸ் செயலி. இந்தச் செயலி மூலம் ஒவ்வொரு வார்த்தையாகக் கற்றுக்கொள்ளலாம். குறிப்பிட்ட ஒரு வார்த்தைக்கான விளக்கம் அளிக்கப்படுகிறது. இவ்வாறு தினமும் நான்கு வார்த்தைகளுக்கான அட்டைகள் மூலம் புதிய சொற்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன.
வார்த்தைகளுக்கான பொருளுடன் அவற்றுக்கான உச்சரிப்பையும் அறியலாம்.
தொடர்ச்சியாகப் பயன்படுத்தினால் புதுப்புது வார்த்தைகளாக அறிந்துகொள்ளலாம். ஆங்கில வார்த்தைகளைப் பயனாளிகள் தங்கள் மொழியில் மொழிபெயர்த்துக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. தமிழ் உள்ளிட்ட பலமொழிகளில் பயன்படுத்தலாம்.
தினமும் விநாடிவினாவை எதிர்கொள்ளும் வசதியும் இருக்கிறது. இணைய இணைப்பு இல்லாவிட்டாலும் இந்தச் செயலியைப் பயன்படுத்தலாம். ஆண்ட்ராய்டு போனில் தரவிறக்கம் செய்ய முடியும்.
மேலும் விவரங்களுக்கு: https://4cards.in
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
2 days ago
தொழில்நுட்பம்
2 days ago
தொழில்நுட்பம்
2 days ago
தொழில்நுட்பம்
2 days ago
தொழில்நுட்பம்
4 days ago
தொழில்நுட்பம்
4 days ago
தொழில்நுட்பம்
5 days ago
தொழில்நுட்பம்
5 days ago
தொழில்நுட்பம்
8 days ago
தொழில்நுட்பம்
9 days ago
தொழில்நுட்பம்
10 days ago
தொழில்நுட்பம்
11 days ago
தொழில்நுட்பம்
15 days ago