“சாட் ஜிபிடியை நினைத்தால் ரொம்ப பயமா இருக்கு” - ஓபன் ஏஐ நிறுவனர் சாம் ஆல்ட்மேன் அலறல்

By செய்திப்பிரிவு

சான் பிரான்சிஸ்கோ: உலகில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சில மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என சாட் ஜிபிடி எனப்படும் ஏஐ சாட்பாட்டை உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார். அண்மையில் சாட்ஜிபிடி-4 வெர்ஷன் அறிமுகமாகி இருந்தது.

மனித சக்திக்கு மாற்றாக செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட இந்த சாட்ஜி பிடி இருக்குமா என்ற விவாதம் ஒருபுறம் நடந்து வருகிறது. அதுவும் ஜிபிடி-4 அறிமுகமான பின்னர் இந்த சாட்பாட் செய்யக்கூடிய சில பணிகள் குறித்த பட்டியலும் வெளியாகி உலக மக்களிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருந்தது. இந்த சூழலில் சாம் ஆல்ட்மேன், ஏஐ குறித்த தனது கருத்துகளை தெரிவித்துள்ளார்.

“நாம் இங்கே கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கடந்த இரண்டு தலைமுறைகளாக மனித குலம் தொழில்நுட்ப மாற்றத்திற்கு ஏற்ற வகையில் அற்புதமாக தகவமைத்துக் கொண்டது. ஆனால், தற்போதைய மாற்றம் விரைவான ஒன்றாக உள்ளது. அதனால் நாம் அதை எச்சரிக்கையுடன் கையாள வேண்டியுள்ளது. சாட் ஜிபிடி வெறும் ஒரு கருவி. இதை மனிதனுக்கு மாற்றாக கருத்தில் கொள்ள முடியாது. மனித படைப்பாற்றல் வரம்பற்றது என்பதை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

இந்த மாடலை பயன்படுத்தி சமூகத்தில் மிகப் பெரிய அளவில் தவறான வழிக்கு பயன்படுத்தப்படுமோ என அஞ்சுகிறேன். அது சைபர் அட்டாக் சார்ந்த கம்யூட்டர் கோடிங்காக கூட இருக்கலாம். அதே போல இதைக் கொண்டு தவறான தகவல்களும் பரப்பப்பட வாய்ப்பு உள்ளது. இதை பாதுகாப்பான முறையில் ஒழுங்குப்படுத்த காலம் உள்ளது என நான் நினைக்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE