நம் தாத்தா, பாட்டியிடம் நமக்குத் தெரியாத விஷயங்களை கேட்டு தெரிந்து கொண்டோம். நாம் அதையடுத்து பெற்றோரிடம், பின்னர் நூலகத்தில் புத்தகங்களின் ஊடாக தெரிந்து கொண்டோம். இன்றைய தொழில்நுட்ப உலகில் கூகுள் துணை கொண்டு அதை தெரிந்து வருகிறோம்.
நொடிக்கு 99,000 தேடல்களை கூகுள் செயல்படுத்துகிறது. கூகுள் ஒரு நாளைக்கு 850 கோடி தேடல்களை செயலாக்குகிறது. நாம் மேற்கொள்ளும் ஒரு சிறிய தேடலுக்கு கூகுள் தேடுபொறியில் அது தொடர்பான பலதரப்பட்ட தகவல்களை கொடுக்கிறது. இப்போது அதை விடவும் வல்லமை கொண்ட தொழில்நுட்பம் ஒன்று அறிமுகமாகி உள்ளது. அதில் என்னென்ன உள்ளது என்பதை விரிவாக பார்ப்போம்.
அந்த புதுவரவின் பெயர் சாட் ஜிபிடி (Chat GPT). சான்பிரான்சிஸ்கோவை சேர்ந்த ‘ஓபன் ஏஐ’ என்ற நிறுவனம் உருவாக்கியது. இதுவும் மற்றொரு தேடு பொறி தானே என்று அவ்வளவு எளிதாக நாம் கடந்து சென்று விட முடியாது. இது அதுக்கும் மேலானது.
» ரஜினி நடித்த ‘காளி’, ‘கர்ஜனை’ படங்களின் தயாரிப்பாளர் காலமானார்
» உயர் நீதிமன்ற புதிய நீதிபதிகள் 2 பேர் மதுரை கிளைக்கு மாற்றம்
உலகத்தின் இப்போதைய பேசு பொருள் இதுதான். இதைப்பற்றி ஆயிரக்கணக்கான செய்திகள், கட்டுரைகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதனை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதன் வரவால் கூகுள் தேடு பொறி உட்பட தற்போது பயன்பாட்டில் உள்ள இன்னும் பிற தொழில்நுட்பங்கள் பயன்பாடுகள் காணாமல் போகுமா என்ற தலைப்பில் உலகம் முழுவதும் மக்கள் பேசி வருகின்றனர்.
ஆரம்ப காதல், அடுத்த நிலைக்கு சென்ற கதைதான் இங்கு நடந்துள்ளது. இந்தத் தெருவில் கணினி அறிவியல். அடுத்த தெருவில் செயற்கை நுண்ணறிவு. இந்த இரண்டு நண்பர்களும் கொஞ்சம் கொஞ்சமாக மிக மெதுவாக பல ஆண்டுகளாக பழகி வந்துள்ளார்கள்.
இப்போதைய உலகளாவிய அச்சம் என்னவென்றால் அந்தப் பழக்கம் மிக நெருக்கமான பழக்கமாக மாறி அடுத்த நிலையை அடைந்து விட்ட காரணத்தால்தான். செயற்கை மனிதர்கள் அதாவது இயந்திர மனிதர்கள் பெருக்கம் ஏற்பட்டு இயற்கையாக தோன்றிய நமது மனித குலத்திற்கு என்ன ஆகுமோ? என்ன நடக்குமோ? என்ற அச்சம் மக்களின் மனதில் வந்துவிட்டது.
‘டெக்னாலஜி அரக்கர்களும், அதனால் துன்பப்படும் மனித குலமும்’ இந்த நிகழ்வு அறிவியல் கற்பனை கதைகளில் மட்டுமா அல்லது எதிர்காலத்தில் நாம் எதிர்கொள்ள உள்ளோமா? என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
இந்த சாட் ஜிபிடி என்னென்ன செய்யும்?
ஷேக்ஸ்பியர் பாணியில் ஆங்கிலத்தில் கவிதை கேட்டால் அதனை ஓரிரு நிமிடங்களில் கொடுக்கும். புதிர் கேட்டால், விடையும் கொடுக்கும். மிக நீண்ட சாப்ட்வேர் புரோகிராமில் தவறு எங்கு உள்ளது என்று கேட்டால் அதனையும் இது கண்டுபிடித்து சரியாக விடை தரும். அடுத்து நான் ஆரம்பிக்கக்கூடிய சிறிய வியாபாரத்திற்கு என்ன செய்ய வேண்டும்? அதனை எப்படி நடத்த வேண்டும்? என்று கேட்டால், ஓரிரு வார்த்தைகளில் விடை தராமல் மிக விளக்கமாக கொடுக்கும்
சாட் ஜிபிடி? மனிதர்கள் உடன் பேராசிரியர், வல்லுநர் போல உரையாடி, உரையாடல் மூலம் தகவல்களை வழங்கும் மற்றும் கேள்விகளுக்கும் இது பதில் வழங்கும். சாட் ஜிபிடி ஒரு சாட்பாட். இந்த சாட்பாட் என்பது ஆன்லைன் அரட்டை உரையாடல் சாப்ட்வேர் அப்ளிகேஷன். உதாரணம் தானியங்கு சாட்பாட் சேவை சில வெப்சைட்டுகளில் இருக்கும். பெரும்பாலும் இதனை வங்கி சார்ந்த வெப்சைட்டுகளில் பார்க்கலாம்.
சாட் ஜிபிடி குறித்த 3 முக்கிய தகவல்கள்
GPT என்பதன் விரிவாக்கம் Generative Pre-trained Transformer. ஜெனரேட்டிவ் மாடல் என்பது புள்ளியியல் படிப்பு துறையை சார்ந்தது. புதிய டேட்டா புள்ளிகளை கண்டுபிடிக்க பயன்படுத்தும் ஒரு மாடல். உதராணமாக பல மனிதர்களால் எழுதப்பட்ட பலவிதமான கருத்துக்களையும், செய்திகளையும் அடிப்படையாக வைத்துக் கொண்டு, முன்னரே சொல்லப்பட்ட அந்த பலவிதமான கருத்துக்களை எடுத்து பயன்படுத்தி நவீன கட்டுரைகள் அல்லது கதைகளை சாப்ட்வேர் எழுத ஜெனரேட்டிவ் மாடல் பயன்படுகிறது.
Pre-trained language models (PLM) எடுத்துக்காட்டு BERT. கூகுள் இதை பயன்படுத்துகிறது. ஒரு வாக்கியத்தில் அடுத்து என்ன வார்த்தை வரும் என்பதை துல்லியமாக கணிக்க அதிக அளவிலான தரவுகளுடன் பயிற்சி அளிக்கப்படுகிறது. எந்த ஸ்பெஷல் டொமைன் நாலேஜ் கொண்டு முன்கூட்டியே பயிற்சி தரப்படாத மாடல்கள் இவை. ஆனாலும் அதனால் டொமைன் சார்ந்த பணிகளை முடிக்க முடியும். உதாரணம் மொழிபெயர்ப்பு.
Transformer: இது ஆழ் கற்றல் மாடல். இது ஒரு பிரபலமான செயற்கை நியூரல் நெட்வொர்க் ஆர்க்கிடெக்சர். தொடர்ச்சியான தரவுகளில் (Sequential Data) உள்ள தொடர்புகளை கவனிப்பதன் மூலம் இந்த நியூரல் நெட்வொர்க், சூழலையும் அதன் பொருளையும் கற்றுக் கொள்ளும்.
முக்கிய அம்சங்கள் என்ன?
சாட் ஜிபிடி மிகவும் தனித்துவமானது. மொழி மாதிரியில் 175 பில்லியன் பேராமீட்டர்ஸ் உள்ளன. அதாவது, பயிற்சியின் போது ஒரு neural நெட்வொர்க் மேம்படுத்தும் மதிப்புகள். மனிதன் எப்படி பேசுகிறானோ, எப்படி எழுதுகிறானோ அதை அப்படியே புரிந்து கொள்ள வல்லமை படைத்தது இந்த சாட் ஜிபிடி.
கேட்கின்ற கேள்விகளுக்கு, சந்தேகங்களுக்கு பெரும்பாலான நியூரல் நெட்வொர்க்குகள் ஆம் அல்லது இல்லை அல்லது எளிய வாக்கியங்களை விடையாக கொடுக்க மட்டுமே திறன் கொண்டவை. ஆனால், சாட் ஜிபிடியால் உரைநடை மாதிரி நீண்ட வாக்கியங்களை விடையாக தர முடியும்.
மற்றவர்கள் குறை சொல்ல இயலாதவாறு, வேலைகளை மிக நேர்த்தியாக சிறப்பாக உன்னதமாக செய்து முடிக்கும் கலையை இது கொண்டுள்ளது. இயந்திர மொழிபெயர்ப்பு, கேள்வி பதில் மற்றும் க்ளோஸ் டாஸ்க்குகள் முதலிய வேலைகளில் சாட் ஜிபிடி அருமையாக செய்து முடித்து, மனித குலத்தை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
சாட் ஜிபிடி வருவதற்கு முன்பே ஏறத்தாழ இதே மாதிரி செயல்பாடு கொண்ட சில கருவிகள் பயன்பாட்டில் இருந்துள்ளன.
இதன் தொழில்நுட்ப பக்கம்: சாட் ஜிபிடிக்கு மிகப்பெரிய இணைய உரை தரவு தொகுப்புகளுடன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதன் மொத்த அளவு 570GB. செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆழ் கற்றல் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
மொழி செயலாக்க ஏஐ மாதிரியாக்கம் என்ற தொழில்நுட்பத்தை இது அடிப்படையாகக் கொண்டுள்ளது. அதுவும் இந்த மொழி மாடல் மிக மிகப் பெரியது.
ஓபன் ஏஐ நிறுவனத்தில் மூன்று பிரிவின் மூலம் உரை தகவல்கள் சேகரிக்கப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட விக்கிப்பீடியாவின் உரை, பிற உரைகள், இணையத்தில் பொதுவில் கிடைக்கும் தரவுத் தொகுப்பு. ஆக மொத்தம் 570GB உரை தகவல் மூலம் இயங்குகிறது.
இது திறந்து பார்க்க முடியாத மூடப்பட்ட சிஸ்டம் அல்லது black-box system. அதன் அல்காரிதம் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்த முழு விவரங்களை ஓபன் ஏஐ வெளியிடவில்லை. அவை எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதை முழுமையாக மற்றவர்களால் உறுதியாக அறிய முடியாது.
சாட் ஜிபிடிக்கான ஆராய்ச்சி 2018-ல் தொடங்கப்பட்டது. முந்தைய 2 பதிப்புகள் பொது மக்களுக்கு வெளியிடப்படவில்லை. ஆனால் 3வது பதிப்பு கிடைக்கிறது.
எப்படி வேலை செய்கிறது இது?
சாட் ஜிபிடி பிராம்ட்டில் (Prompt) பேச்சு அல்லது எழுத்துக்கள் வார்த்தைகளை டைப் செய்து அல்லது கேள்விகள் கேட்பது மூலம் அந்தக் கேள்வியை புரிந்து கொண்டு, மீண்டும் பேச்சு வார்த்தைகளால் அல்லது ஸ்கிரீனில் எழுத்து மூலம் பதிலை காட்டும்.
சாட் ஜிபிடியின் பயன்பாடுகள்: சாட் ஜிபிடி ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரின் பாணியில் கவிதைகள், பாடல்கள் மற்றும் சிறுகதைகளை எழுத முடியும். அதிக அளவிலான தகவல்களை, சுருக்கி பகுப்பாய்வு செய்வதன் மூலம், பயனர் கருத்து மற்றும் சமூக ஊடக உரையாடல்களை புரிந்து கொள்வதில் சாட் ஜிபிடி உங்கள் நேரத்தையும், முயற்சியையும் பெரிய அளவில் சேமிக்கும். சுமார் ஒரு லட்சம் பேர் உங்களது பொருளுக்கு (Product) பின்னூட்டம் (Feedback) கொடுத்துள்ளார்கள் என்று உதாரணமாக எடுத்துக் கொண்டால் அத்தனை பின்னூட்டங்களையும் மிக விரைவாக ஆராய்ச்சி செய்து உங்களுக்கு அதன் முடிவுகளை தெரிவிக்கும்.
உங்கள் வாடிக்கையாளரின் தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்வது என்பது குறித்து சிறந்த, விரைவான முடிவுகளை எடுக்க உங்களுக்கு உதவும். இது உங்களுக்கு சில யோசனைகளை உருவாக்க உதவும். குறைந்த நேரத்தில் அதிக மற்றும் உயர்தர வேலைகளை செய்து முடிக்கும். உதாரணமாக ஆன்லைன் டியூஷன் தொழில் நடத்தும் போது அந்த வெப்சைட்டில் என்ன எழுத வேண்டும் என்று கேட்டால் இந்த சாட் ஜிபிடி அருமையான விளக்கத்தை உங்களுக்கு கொடுக்கும்.
வரி வரியாக பல வரிகளில் இருக்கும், கணினி புரோக்ராமில் தவறு எங்கு உள்ளது என்று சொல்வதோடு மட்டுமல்லாமல் அந்தத் தவறை திருத்தி கொடுப்பதும் சாட் ஜிபிடியின் மிகப்பெரிய பயன்பாடாக பார்க்கப்படுகிறது
சாட் ஜிபிடியும் சமுதாய மாற்றமும்: குழந்தைகளின் படிப்பு செலவை தாங்க முடியாமல் தவிக்கும் மக்களுக்கு இந்த சாட் ஜிபிடி அப்ளிகேஷன் வரமா அல்லது சாபமா? இதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும். கல்வி செலவை சாட் ஜிபிடி அப்ளிகேஷன் குறைத்தால் மிகவும் நன்றாக இருக்கும் .
அலைபேசிக்குள் எந்நேரமும் இருக்கும் இளைஞர் கூட்டம் இந்த கருவி மூலமாக நல்ல நல்ல புத்தகங்களை படிக்க ஆரம்பித்தால் நன்றாக இருக்கும்.
குழந்தை கல்வியையும், வேலையும், வீட்டையும், சமாளிக்க முடியாமல் வாழும் குடும்ப தலைவிகளுக்கு, இந்த கருவி குழந்தைகளின் படிப்புக்கு அன்றாட வீட்டுப் பாடம் துவங்கி மாத அசைன்மென்ட், அறிவியலில் மிகப் பெரிய அளவில் உதவலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது
மனிதனுடைய வேலை வாய்ப்பு பல வருடங்களாகவே குறைந்து கொண்டே வந்து கொண்டிருக்கிறது. அதி அறிவுடன் விளக்கத்துடன் செய்திகள் பல விதத்தில் உங்கள் அலைபேசியில் வரிசையாக வரும் இந்த டெக் யுகத்தில், இந்த சாட் ஜிபிடி கருவியால் மனிதர்களது வேலை வாய்ப்புகள் குறையாது என்று யார் கூறினாலும் , அதனை நம்ப யாரும் தயாராக இல்லை.
மைக்ரோசாப்ட் மற்றும் சில நிறுவனங்கள் இதை வெகு விரைவில் பயன்படுத்த தொடங்குவார்கள் என்ற செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
இந்த சாட் ஜிபிடி மனித சிந்தனையும், உற்பத்தி திறனையும் முடக்குமா அல்லது ஆச்சரியப்படும் அளவுக்கு உற்பத்தி திறனை அதிகரிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டி உள்ளது. அதிக நேரம் உட்கார்ந்து வாழுதல் ஆரோக்கியம் கேள்வி குறி. சாட் ஜிபிடி அதை குறைத்தால் அருமை.
Data-Driven தொழில்நுட்பத்தையும், மனித படைப்பாற்றலையும் சமநிலைப் படுத்துவது எவ்வாறு என்று ஆராய நமக்கு இது வழிகாட்டும் என கருத்து நிலவுகிறது.
மனிதர்கள் தரக்கூடிய செய்திகள் அல்லது தகவல்களில் இருந்து இந்த Programக்கு தெரியாத விஷயங்களை (RLHF) Reinforcement Learning மூலம் தெரிந்து கொள்ளும் திறமை உண்டு. இந்த Reinforcement Learning, சாட் ஜிபிடியை மிகவும் சக்திவாய்ந்தது, பல்துறை சார்ந்தது ஆகவும் உருவாக்குகிறது.
சாட் ஜிபிடியின் சிறப்பு என்னவென்றால், கேட்கப்பட்ட கேள்விக்கு பொருத்தமான தகவல் அல்லது பதில் இல்லை என்றால் அது அதன் அறியாமையை ஒப்புக்கொள்கிறது. தற்போது, செயற்கை நுண்ணறிவு , பெரிய தரவு மற்றும் மெஷின் லேர்னிங் சார்ந்த சட்டங்கள் எதுவும் இந்தியாவில் இல்லை. செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல், வேலைவாய்ப்பில், பணி அமர்த்தலில் தற்போது, அமெரிக்கா ஒரு முன்மொழியப்பட்ட ஏஐ சட்டத்தை பயன்படுத்துகிறது.
சில நேரங்களில் இதில் கிடைக்கும் சில பதில்கள் இன்னும் சரியாக பொருத்தமாக இல்லை என்றாலும், அனைத்து வகையான மனிதர்களும் அதனுடைய பதில்களை பார்த்து, புருவத்தை உயர்த்தி, வாயடைத்து ஆச்சரியத்துடன் செய்வது அறியாமல் இதனுடைய செயல்பாடுகளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. மொத்தத்தில், சாட் ஜிபிடி நல்ல விதத்தில் செயல்பட்டால் மனித குலம் வரவேற்கும்.
கட்டுரை: சி.ஆர்.சத்தியமூர்த்தி
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
2 days ago
தொழில்நுட்பம்
4 days ago
தொழில்நுட்பம்
4 days ago
தொழில்நுட்பம்
4 days ago
தொழில்நுட்பம்
7 days ago
தொழில்நுட்பம்
8 days ago
தொழில்நுட்பம்
11 days ago
தொழில்நுட்பம்
11 days ago
தொழில்நுட்பம்
14 days ago
தொழில்நுட்பம்
15 days ago
தொழில்நுட்பம்
16 days ago
தொழில்நுட்பம்
17 days ago
தொழில்நுட்பம்
17 days ago
தொழில்நுட்பம்
18 days ago
தொழில்நுட்பம்
18 days ago