சாம்சங் கேலக்சி M சீரிஸ் போனில் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள அப்டேட்: டவுன்லோட் செய்வது எப்படி?

By செய்திப்பிரிவு

சென்னை: சாம்சங் கேலக்சி M சீரிஸின் ஆறு போன்களில் ஆண்டராய்டு 13 இயங்குதள அப்டேட் கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை டவுன்லோட் செய்வது எப்படி, அதன் அம்சங்கள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புதுப்புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம். அதே போல பழைய மாடல் போன்களில் அப்டேட்களையும் வழங்கும்.

அந்த வகையில் இப்போது M சீரிஸ் போன்களில் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள அப்டேட்டை வழங்கி வருகிறது அந்நிறுவனம். கேலக்சி M53, கேலக்சி M52 5ஜி, கேலக்சி M33, கேலக்சி M32 5ஜி, கேலக்சி M32 மற்றும் கேலக்சி M13 5ஜி என ஆறு மாடல்களில் இந்த அப்டேட் கிடைக்கிறது.

டவுன்லோட் செய்வது எப்படி? - இந்த மாடல் போன்களை பயன்படுத்தி வரும் பயனர்கள் செட்டிங்ஸ் சென்று சாப்ட்வேர் அப்டேட் ஆப்ஷனை தேர்வு செய்து தங்கள் போனை புதிய இயங்குதளத்தை பயன்படுத்தும் வகையில் அப்டேட் செய்து கொள்ளலாம். அதற்கு முன்னர் போனின் பேட்டரி போதுமான அளவு சார்ஜ் செய்யப்பட்டு இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இந்த அப்டேட்டை மேற்கொள்வதன் மூலம் பயனர்கள் ஒன் UI 5.0 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லாக் ஸ்க்ரீனை போட்டோ மற்றும் வீடியோக்கள் மூலம் கஸ்டமைஸ் செய்வதில் தொடங்கி பல விட்ஜெட்களை ஒன்று சேர்ப்பது, போட்டோ எடிட் ஆப்ஷன்கள், போட்டோ ரீ மாஸ்டர் டூல், ஸ்மார்ட்போனின் செக்யூரிட்டி மற்றும் பிரைவசி சார்ந்த டேஷ்போர்டு, மல்டி விண்டோ பயன்பாடு போன்றவை இந்த புதிய அப்டேட்டில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெகு விரைவில் சாம்சங் F சீரிஸ் போன்களுக்கும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள அப்டேட் கிடைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE