தொழில்நுட்ப உலகம்: சுவடுகளும் புதிய போக்குகளும்!

By சைபர் சிம்மன்

2016- ல் தொழில்நுட்ப உலகைத் திரும்பி பார்க்கும்போது, சைபர் தாக்குதல்கள், பொய் செய்தி பிரச்சினைகள், தாக்காளர்கள் கைவரிசை ஆகிய நிகழ்வுகள் ஆதிக்கம் செலுத்தின. பாட்கள் (Bots) எனப்படும் தானியங்கி மென்பொருள்களின் எழுச்சி, செயற்கை நுண்ணறிவு தொடர்பான விவாதம், இணையச் சமநிலைக்கான குரல் ஆகிய போக்குகளும் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. கூகுளின் பிக்சல் போன் அறிமுகம், ஸ்மார்ட் போன் பிரியர்களைப் பித்துப்பிடித்து அலையவைத்த போக்கேமான் கோ விளையாட்டு, ‘ஐஸ் பக்கெட் சேலஞ்ச்’ போலப் பிரபலமாகி வரும் ‘மேனிக்வன் சேலஞ்ச்’ போன்ற போக்குகளும் முக்கியமாகத் திகழ்கின்றன. விடைபெறும் ஆண்டில் தொழில்நுட்ப உலகில் கவனத்தை ஈர்த்த முக்கிய நிகழ்வுகள் பற்றி ஒரு பார்வை:

‘ஃபிரீ பேசிக்’சிற்குத் தடை

இணையச் சேவைகளைப் பயன்படுத்துவதில் பாரபட்சமான கட்டண முறையைக் கடைப்பிடிக்கக் கூடாது எனத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் பிறப்பித்த தடையாணை இணையச் சமநிலைக்கு ஆதரவான உத்தரவாக அமைந்தது. இந்த உத்தரவை அடுத்து பேஸ்புக் நிறுவனம் தனது சர்ச்சைக்குரிய ‘ஃபிரீ பேசிக்ஸ்’ (Free Basics) திட்டத்தை இந்தியாவில் விலக்கிக் கொள்வதாக அறிவித்தது. இணையதளங்களை இலவசமாகப் பயன்படுத்த வழி செய்வதாக பேஸ்புக் கூறினாலும், ஒரு பகுதி இணையத்தை மட்டுமே அணுக வழி செய்வதால் இந்தத் திட்டம் இணையச் சமநிலைக்கு எதிரானது எனக் கடும் விமர்சனத்திற்கு இலக்கானது.

‘வாட்ஸ் அப் என்கிரிப்ஷன்’

முன்னணி மெசேஜிங் சேவையான வாட்ஸ் அப், செய்திகள், ஒளிப்படங்கள், வீடியோக்கள் என அனைத்து விதமான பரிவர்த்தனைகளும் என்கிரிப்ஷன் முறையில் பாதுகாக்கப்படுவதாக அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இது இணைய உலகில் என்கிரிப்ஷன் தொடர்பான முக்கியத்துவத்தையும் உண்டாக்கியது. தரவுகள் பரிமாற்றத்தை சங்கேத குறியீடுகள் மூலம் பாதுகாக்கும் இந்த முறையால் அனுப்புகிறவர், பெறுபவர் மட்டுமே உரிய செய்தியை வாசிக்க முடியும்.

அத்துடன், வாட்ஸ் அப் தன்னுடைய தனியுரிமைக் கொள்கையை மாற்றி அமைத்ததும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன்படி, பயனாளிகளின் தொலைபேசி எண் உள்ளிட்ட தகவல்களைத் தாய் நிறுவனமான பேஸ்புக்குடன் பகிர்ந்துகொள்ள இருப்பதாக வாட்ஸ் அப் அறிவித்தது விவாதத்தை ஏற்படுத்தியது.

போக்கேமான் கோ மோகம்

ஸ்மார்ட் போன்களில் அறிமுகமான போக்கேமான் கோ விளையாட்டு பெரும் வரவேற்பைப் பெற்று புதிய மோகமாக உருவெடுத்தது. ‘ஆக்மெண்டட் ரியாலிட்டி’ எனப்படும் மேம்படுத்தப்பட்ட யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த விளையாட்டு, போக்கேமான் ஜீவராசிகளைத் தேடிப் பிடிப்பதற்காக ஸ்மார்ட் போன் பிரியர்களை வீடு, அலுவலகங்களை விட்டு வெளியேறி பொது இடங்களில் அலைய வைத்தது. இந்த விளையாட்டு இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் வரவேற்பைப் பெற்றது.

பொய்ச்செய்தி பிரச்சினை

சமூக ஊடகங்களின் செல்வாக்கு அதிகரித்து வரும் நிலையில், அவற்றின் மூலம் பகிரப்படும் பொய்ச் செய்தி பிரச்சினை கவலையை ஏற்படுத்தியது. குறிப்பாக அமெரிக்க அதிபர் தேர்தலின்போது டிரம்பிற்கு ஆதரவாக ரஷ்யாவை மையமாகக் கொண்ட போலி இணையதளங்கள் சார்பில் உலாவவிடப்பட்ட பொய்ச் செய்திகள் விவாதத்தை ஏற்படுத்தின. பொய்ச் செய்திகளைக் கட்டுப்படுத்துவதில் தீவிரம் காட்டுவதாக பேஸ்புக்கும் கூகுளும் அறிவித்தன.

சைபர் தாக்குதல்

2016-ல் ஏதேனும் ஒரு வகையில் சைபர் தாக்குதல்கள் தலைப்புச் செய்தியில் இடம் பெற்றுக்கொண்டே இருந்தன. யாஹு நிறுவனம், தனது லட்சக்கணக்கான பயனாளிகளின் தகவல்கள் தாக்காளர்கள் கைவரிசைக்கு இலக்கானதாகத் தெரிவித்தது அதிர்ச்சியை உருவாக்கியது. அமெரிக்கத் தேர்தல் செயல்முறையைப் பலவீனப்படுத்தும் வகையிலான செயலில் ரஷ்யவைச் சேர்ந்த தாக்காளர்கள் குழு ஈடுபட்டதாகச் செய்திகள் வெளியாயின. ஜனநாயகக் கட்சியின் பிரச்சார வலைப்பின்னலும் தாக்குதலுக்கு இலக்கானது.

ராகுலும் தப்பவில்லை

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க், கூகுள் சி.இ.ஒ. சுந்தர் பிச்சை உள்ளிட்டோரும் தாக்காளர்களின் கைவரிசைக்கு இலக்கானார்கள். இந்தியாவில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் டிவிட்டர் பக்கமும் காங்கிரஸ் கட்சியின் டிவிட்டர் பக்கமும் தாக்குதலுக்கு இலக்காயின.

பாட்களின் எழுச்சி

பாட்கள் (Bots) எனக் குறிப்பிடப்படும் தானியங்கி மென்பொருள்கள் தொடர்பான செய்திகள் பெருமளவு கவனத்தை ஈர்த்தன. அரட்டைக்கான பாட்கள், வர்த்தக நிறுவனம் சார்பில் வாடிக்கையாளர்களுக்கு வழிகாட்டும் பாட்கள் உள்ளிட்டவை வருங்காலத்தில் புதிய போக்காக அமையும் என வல்லுநர்கள் தெரிவித்தனர். வங்கிச் சேவை உள்ளிட்டவற்றில் இந்த வகை மென்பொருள்களே வழிகாட்டும் நிலை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேஸ்புக், கூகுள், மைக்ரோசாப்ட், ஆப்பிள் உள்ளிட்ட நிறுவனங்கள் இதில் தீவிரம் காட்டி வருகின்றன. இதே போலவே செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஆய்வுகளும் தீவிரமாகியுள்ளன. தானியங்கிமயமாக்கலின் விளைவாக வேலை இழப்பு ஏற்படும் அபாயம் பற்றியும் ஆய்வுகள் வெளியாகின.

யு.பி.ஐ. செயலி அறிமுகம்

தேசிய பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் உருவாக்கிய யு.பி.ஐ. செயலி அறிமுகமானது. ஸ்மார்ட் போன் மூலம் வங்கி கணக்கில் இருந்து நேரடியாகப் பணம் அனுப்ப, பெற உதவும் இந்தச் செயலியை முன்னணி வங்கிகள் அறிமுகம் செய்தன. டிஜிட்டல் பரிவர்த்தனை தொடர்பான விவாதமும், விழிப்புணர்வும் அதிகரித்து வரும் நிலையில், யு.பி.ஐ. கவனத்தை ஈர்க்கிறது.

‘கபாலி தி பாஸ்’

பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நடிகர் ரஜினி காந்தின் கபாலி திரைப்படம் இணையத்தில் அதிர்வலைகளை எழுப்பியது. இந்தப் படத்தின் முன்னோட்டம் வெளியானபோது இணையத்திலும், சமூக ஊடகங்களிலும் கபாலிடா எனும் பதம் டிரெண்டானது. முன்னோட்ட காணொளி யூடியூப்பில் பெரும் வரவேற்பைப் பெற்றது. படம் வெளியான போதும் டிவிட்டரில் ரஜினியின் செல்வாக்கை வெளிப்படுத்தும் குறும்பதிவுகள் அதிக அளவில் பகிரப்பட்டன.

சுஷ்மாவின் சுறுசுறுப்பு

வெளியுறவுத்துறை அமைச்சரான சுஷ்மா ஸ்வராஜ், டிவிட்டர் மூலம் தொடர்பு கொண்டவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதில் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு அனைவரது பாராட்டையும் பெற்றார். டிவிட்டர் பயன்பாட்டில் முன்னுதாரணமாகத் திகழும் ஸ்வராஜ், நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலையும் டிவிட்டர் மூலமே பகிர்ந்துகொண்டார். இணையவாசிகள் அவர் நலம்பெற விரும்பிக் குறும்பதிவுகளை வெளியிட்டனர்.

கலைநயமான செயலி

ஆண்ட்ராய்டு, ஐபோன்களுக்காக எண்ணற்ற செயலிகள் அறிமுகமானாலும், பிரிஸ்மா செயலி பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்த்தது. பயனாளிகள் தங்கள் ஒளிப்படங்களை நவீன ஓவியம் போல மாற்றிக்கொள்ள வழி செய்யும் இந்தச் செயலி வாயிலாகப் பகிரப்பட்ட படங்கள் அவற்றின் கலைநயமான தோற்றத்திற்காக வரவேற்பைப் பெற்றன.

‘கூகுள் பிக்சல்’ போன்

கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்த பிக்சல் ஸ்மார்ட் போன்கள் ஆண்டின் சிறந்த ஸ்மார்ட் அறிமுகங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. கூகுள் நிறுவனத்தால் நேரடியாக அறிமுகம் செய்யப்பட்ட முதல் ஸ்மார்ட் போன் எனும் அந்தஸ்து, இதன் மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்களும் பரவலாகப் பேசப்பட்டன. புதிய ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இது அறிமுகமானது. ஐபோன் 7பிளஸ், சாம்சங் கேலக்ஸி எஸ் 7, மோட்டோ இசட், ஜியோமி ரெட்மி 3எஸ் பிரைம், எச்டிசி 10 உள்ளிட்டவை குறிப்பிடத்தக்க ஸ்மார்ட் போன்களாக அமைந்தன. இவற்றில் கேலக்ஸி 7 போன்கள் தீப்பிடித்துக்கொள்ளும் தன்மைக்காகச் சர்ச்சைக்கு இலக்காயின.

‘ஸ்னேப்சேட்’ கண்ணாடி

தானாக மறையும் ஒளிப்படங்களைப் பகிர்ந்து கொள்ள வழிசெய்யும் ஸ்னேப்சேட் நிறுவனம், புதிய மூக்குக் கண்ணாடியை அறிமுகம் செய்தது. ஸ்னேப்சேட் ஸ்பெக்டகல் எனும் இந்தச் சாதனம் அறுவை சிகிச்சை உள்ளிட்டவற்றை நேரடி ஒளிபரப்பு செய்ய உதவிவருகிறது. இது அணிகணிணி உலகில் புதிய போக்காக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘சாய்வாலா’ புகழ்

இணையம் மூலம் பல படங்களும், வீடியோக்களும் வைரலாகப் பரவிப் புகழ் பெற்றன என்றாலும், பாகிஸ்தானில் டீக்கடை ஒன்றில் பணியாற்றிய வாலிபர் ஒரு ஒளிப்படத்தால் ஒரே நாளில் இணையம் முழுவதும் பிரபலமானார். அர்ஷ்த் கான் எனும் அந்த வாலிபர் டீக்கடை ஒன்றில் டீ ஆற்றிக்கொண்டிருக்கும் காட்சியை ஒளிப்படக் கலைஞர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துகொண்டார். அந்த வாலிபரின் அழகான தோற்றமும், பச்சை நிறக் கண்களும் இணையவாசிகள் அனைவரையும் கவர்ந்திழுத்தன. அவரது ஒளிப்படத்தை லட்சக்கணக்கானோர் பகிர்ந்தனர். அவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவராக இருந்தது இந்தியர்கள் மத்தியில் கூடுதல் கவனத்தை ஏற்படுத்தியது. இணையப் புகழ் காரணமாக இந்த வாலிபருக்கு விளம்பரப் பட வாய்ப்பும் தேடி வந்தது. இதே போல அமெரிக்காவில் டேம் டேனியல் எனும் வாலிபர் தனது அழகான தோற்றத்திற்காக இணையப் புகழ் பெற்றார்.

இணைய மயக்கம்

பெண்மணி ஒருவரின் கால்களின் தோற்றமும் இணையத்தைக் குழப்பத்தில் ஆழ்த்தியது. அந்தப் படத்தில் உள்ள கால்களின் தோற்றம் பளபளப்பாக இருக்கிறதா, அல்லது அவற்றின் மீது வெள்ளை பெயிண்ட் பூசப்பட்டிருக்கிறதா, எனும் கேள்விக்குத் தெளிவாகப் பதில் சொல்ல முடியாததே இந்தப் படத்தை பற்றிப் பேசுவதற்குக் காரணமாக அமைந்தது. இணையம் இதற்குப் பதில் அளிப்பதில் சரி பாதியாகப் பிரிந்து நின்றது. அதே போலப் பள்ளி மாணவர்களுக்கான குதிரைப் படங்களைக் கொண்ட அல்ஜீப்ரா புதிரும் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டது.

வைரல் வீடியோ

சில ஆண்டுகளுக்கு முன்னர் குளிர்ந்த நீரை மேலே கொட்டிக்கொள்ளும் ஐஸ் பக்கெட் சாலஞ்ச் வீடியோ வைரலானது போல 2016 இறுதியில் சிலையாக நிற்கும் ‘மானிக்குவன் சேலஞ்ச்’ வைரலானது. பின்னணியில் இசை ஒலிக்க, ஒரு செயலைச் செய்து கொண்டிருக்கும்போதே இடையே சிலையாக நிற்பது போலக் காட்சி தரும் வகையிலான வீடியோவைப் பகிர்வது புதிய போக்காக உருவாகி இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

3 days ago

தொழில்நுட்பம்

3 days ago

தொழில்நுட்பம்

9 days ago

தொழில்நுட்பம்

10 days ago

தொழில்நுட்பம்

10 days ago

தொழில்நுட்பம்

10 days ago

தொழில்நுட்பம்

14 days ago

தொழில்நுட்பம்

15 days ago

தொழில்நுட்பம்

17 days ago

தொழில்நுட்பம்

17 days ago

தொழில்நுட்பம்

20 days ago

தொழில்நுட்பம்

22 days ago

தொழில்நுட்பம்

22 days ago

தொழில்நுட்பம்

23 days ago

தொழில்நுட்பம்

24 days ago

மேலும்