யூடியூப் வீடியோ தேடலில் புதுமை: கூகுள் அறிமுகப்படுத்தும் அம்சம் செயல்படுவது எப்படி?

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: யூடியூப் தளத்தின் வீடியோ தேடலில் புதியதொரு அம்சத்தை சேர்க்க உள்ளது கூகுள் நிறுவனம். இந்த அம்சம் தற்போது சோதனை ஓட்டத்தில் இருப்பதாக தகவல். அடுத்த சில மாதங்களில் இது பொதுப் பயன்பாட்டுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான அறிவிப்பு ‘கூகுள் ஃபார் இந்தியா’ நிகழ்வில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் நிறுவனத்தின் வீடியோ ஸ்ட்ரீமிங் சமூக வலைதளம்தான் யூடியூப். கடந்த 2021-இல் கிடைத்த தகவலின்படி உலகளவில் சுமார் 2.21 பில்லியன் கணக்கிலான மக்கள் இந்த சேவையைப் பெற்று வருகின்றனர். சிலர் தங்களது வீடியோக்களை யூடியூப் தளத்தில் பதிவேற்றமும் செய்து வருகின்றனர். இந்த தளத்தில் உலகின் பெரும்பாலான மொழிகளில் வீடியோக்களை பார்க்கலாம்.

இந்தச் சூழலில் டெல்லி நிகழ்வில் கூகுள் அறிமுகம் செய்துள்ள முக்கிய அம்சங்களில் ஒன்றாக அமைந்துள்ளது இந்த வீடியோ தேடல். தற்போது இது பீட்டா பயனர்களின் பயன்பாட்டுக்கு கிடைத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அம்சத்தின் மூலம் பயனர்கள் யூடியூப் வீடியோவில் உள்ள சில தருணங்களை தேடிப் பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, பயனர் ஒருவர் மாமல்லபுரம் பகுதி குறித்த வீடியோ ஒன்றை பார்த்து வருகிறார் என்றால், அதில் கலங்கரை விளக்கம், கடற்கரை கோயில் போன்ற பகுதிகளை அந்த வீடியோவில் நேரடியாக சேர்ச் செய்து பார்க்க முடியும் எனத் தெரிகிறது.

அதைச் செய்ய அந்த வீடியோவின் கீழ் பகுதியில் உள்ள சேர்ச் ஆப்ஷனை பயன்படுத்த வேண்டும் எனச் சொல்லப்பட்டுள்ளது. அதன்மூலம் அந்த வீடியோவில் பயனர்கள் தங்களுக்கு தேவையானதை டைப் செய்து பார்த்துக் கொள்ள முடியுமாம். இதனால், ஒரு யூடியூப் வீடியோவில் ஒரு குறிப்பிட்ட லொக்கேஷனை சுலபமாக பார்க்க முடியும் என தெரிகிறது. இது ‘Search in Video’ அம்சம் என அறியப்படுகிறது.

இதுதவிர இருமொழி சேர்ச் முடிவு பேஜ் போன்றவையும் அறிமுகம் ஆகியுள்ளது. இதன் மூலம் பயனர்கள் ஆங்கிலத்தில் ஏதேனும் ஒன்றை தேடினால் அதற்கான உள்ளூர் மொழி தேடல் முடிவுகளும் கிடைக்கும். இப்போதைக்கு இந்தி, தமிழ், வங்காளம், மராத்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் மட்டுமே இந்த அம்சம் கிடைக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE