ப்ளு, கோல்டு, கிரே... ட்விட்டரில் புதிய மாற்றம்

By செய்திப்பிரிவு

நியூயார்க்: ட்விட்டரின் வெரிஃபைடு எனப்படும் ப்ளூ டிக் வழங்கப்பட்ட அதிகாரபூர்வ பக்கங்களில் புதிய நிறங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ட்விட்டர் தளத்தில் பல்வேறு மாற்றங்களை எலான் மஸ்க் செய்து வருகிறார். குறிப்பாக, பணம் கொடுத்து ப்ளூ டிக் பெற்றுக்கொள்ளும் முறையை அறிவித்தார். இந்த நிலையில், வெரிபைடு பக்கங்களில் புதிய மூன்று நிறங்களை ட்விட்டர் அறிமுகப்படுத்தி இருக்கிறது.

மூன்று நிறங்களுக்கான விளக்கத்தையும் ட்விட்டர் அளித்துள்ளது. அதன்படி ப்ளு... இந்த நிறம் ட்விட்டரில் தனிநபர் கணக்கை குறிக்கிறது. முன்னர் ட்விட்டர் வெரிஃபைடு பக்கங்கள் எல்லாம் ப்ளு நிறத்தில்தான் இருந்தன. கோல்டு... இந்த நிறம் வணிக ரீதியான கணக்கை குறிக்கிறது. கிரே...இந்த நிறம் அரசாங்கங்கள் தொடர்பான கணக்கை குறிக்கிறது.

இதற்கிடையில், ட்விட்டரில் ப்ளு டிக் பெறுவதற்கான கட்டணத்தை ஐபோன் பயனர்களுக்கு 11 டாலராகவும், ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு 8 டாலராகவும் ட்விட்டர் அறிவித்துள்ளது.

முன்னதாக, ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு (ரூ.3.65 லட்சம் கோடி) வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் முழுமையடைந்து, எலான் மஸ்கின் கட்டுப்பாட்டுக்குள் அந்நிறுவனம் வந்துள்ளது. முதல் நடவடிக்கையாக ட்விட்டரின் சிஇஓ-வாக பொறுப்பு வகித்து வந்த பராக் அகர்வாலை பணி நீக்கம் செய்தார். மேலும், தலைமை நிதி அதிகாரி நெட் செகல், சட்டத்துறை தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல் ஆகியோரையும் பணி நீக்கம் செய்தார். மேலும், ட்விட்டரில் பல ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள், முக்கியப் பொறுப்பில் இருந்தவர்கள் என ட்விட்டரின் மொத்த ஊழியர்களில் பாதி பேர் (50%) வேலையிலிருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE