டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ரான்சம்வேர் தாக்குதல்: சீன ஹேக்கர்கள் மீது சந்தேகம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கடந்த மாதம் இறுதி வாரத்தில்டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கணினிகள் திடீரென்று முடங்கின. முடக்கத்துக்கான காரணத்தை ஆய்வு செய்தபோது ஹேக்கர்கள் சைபர் தாக்குதல் நடத்தி இருப்பது தெரியவந்தது. ரான்சம்வேர் வைரஸை அனுப்பி மருத்துவமனை சர்வர்களை ஹேக்கர்கள் முடக்கியது உறுதியானது.

சர்வர்கள் முடங்கியதால், கணினிகளில் நோயாளிகளைப் பற்றி சேமித்து வைக்கப்பட்ட தகவல்களை மருத்துவர்கள் பயன்படுத்த முடியாமல் போனது. தரவுகளை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் சைபர் செக்யூரிட்டி நிபுணர்கள் இறங்கினர். பத்து நாட்கள் மேலாகியும் இன்னும் மருத்துவமனை சர்வர்களிலிருந்து தரவுகளை மீட்டெடுக்க முடியவில்லை. இதனால், எய்ம்ஸ் மருத்துவமனையில் டிஜிட்டல் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டு, வேலைகள் கைப்படையாக செய்யப்படுகின்றன. இந்நிலையில், இந்த சைபர் தாக்குதலை சீன ஹேக்கர்கள் நிகழ்த்தியிருக்கக் கூடும் என்று சந்தேகம் எழுந்துள்ளது.

சைபர் செக்யூரிட்டி: இந்நிகழ்வு தொடர்பாக விசாரணையில் ஈடுபட்டிருக்கும் சைபர்செக்யூரிட்டி அதிகாரிகள் கூறுகையில், “சீனாவைச் சேர்ந்த ‘எம்பரர்டிராகன்பிலே’ மற்றும் ‘புரோன்ஸ்ஸ்டார்லைட்’ ஆகிய இரு ரான்சம்வேர் குழுக்கள் சர்வதேச அளவில் மருத்துவ நிறுவனங்களைக் குறிவைத்து சைபர் தாக்குதல் நடத்தி வருகின்றன. எய்ம்ஸ் நிகழ்வுக்கு இவர்கள் காரணமாக இருக்கக்கூடும். இவர்கள் தவிர, ‘லைப்’ ரான்சம்வேர் குழுமம் மீதும் சந்தேகம் உள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.

ரூ.200 கோடி தர வேண்டும்: எய்ம்ஸ் மருத்துவமனையில் சேகரிக்கப்பட்டிருந்த முக்கியமானஅரசியல் தலைவர்கள், பிரபலங்கள் உட்பட லட்சக்கணக்கான நோயாளிகளைப் பற்றிய விவரங்கள் ஹேக்கர்களின் கைகளுக்குச் சென்றுள்ளன. தரவுகளை திரும்ப வழங்க வேண்டுமென்றால் ரூ.200கோடி தர வேண்டும் என்று ஹேக்கர்கள் நிபந்தனை விதித்ததாக தகவல் வெளியானது. ஆனால், இது குறித்து டெல்லி காவல் துறை கூறுகையில், “எய்ம்ஸ் நிர்வாகத்திலிருந்து அப்படி எந்தப் புகாரும் எங்களுக்கு வரவில்லை” என்று தெரிவித்தனர். இந்தச் சூழலில், மருத்துவமனை தரவுகளை ஹேக்கர்கள் விற் பனைக்கு விட்டிருக்கக் கூடும் என்றும் சைபர் செக்யூரிட்டி நிபுணர்கள் கூறுகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE