மத்திய தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ‘தி இந்து’ நாளிதழுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா, தொலைத்தொடர்பு துறை, செமிகண்டக்டர் தயாரிப்பு, ரயில்வே துறை சார்ந்து மத்திய அரசு கொண்டிருக்கும் திட்டங்களை அவர் நம்முடன் பகிர்ந்துகொண்டார். பேட்டியிலிருந்து….
தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா
மத்திய அரசு 2019-ம் ஆண்டு தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்தது. தனிநபர்களின் தகவல்களை தொழில்நுட்ப நிறுவனங்கள், சமூக வலைதள நிறுவனங்கள் எப்படி கையாள வேண்டும் என்ற வழிமுறைகள் அந்த மசோதாவில் வரையறுக்கப்பட்டன. இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால், தனிநபர்களின் தகவல்களை அரசு கண்காணிக்க வழிவகுக்கும் என்றும் அது கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் இந்த மசோதாவுக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. அதையடுத்து நாடாளுமன்றக் குழுவின் பார்வைக்கு இம்மசோதா அனுப்பப்பட்டது. இந்த மசோதா மீது நாடாளுமன்ற கூட்டுக் குழு 81 திருத்தங்களை முன்வைத்துள்ள நிலையில் இம்மசோதாவை மத்திய அரசு இம்மாதத் தொடக்கத்தில் திரும்பப்பெற்றது. இந்தப் பரிந்துரைகளை கருத்தில்கொண்டு புதிய மசோதா உருவாக்கப்பட்டுவருவதாக அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார்.
இதன் அடுத்த கட்ட நகர்வு குறித்து அவர் நம்மிடம் கூறியதாவது:“உலக முழுவதும் தகவல் பாதுகாப்புக் கொள்கைகள் நடைமுறைக்கு வந்துவிட்டன. தற்போதைய போக்குக்கு ஏற்ப தகவல் பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு உருவாக்கி வருகிறது. அது அனைவரையும் உள்ளடக்கி, அனைவருக்கும் ஏற்றவகையில் இருக்கும். அடுத்த ஆண்டு பட்ஜெட் அறிவிப்பின் போது நாடாளுமன்றத்தில் புதிய தகவல் பாதுகாப்பு மசோதா அறிமுகப்படுத்தப்படும். தொலைத்தொடர்பு, சைபர் செக்யூரிட்டி, டிஜிட்டலாக்கம் சார்ந்தும் புதிய மசோதாக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன” என்றார்.
» ஆசிய கோப்பை | பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா - கொண்டாட்டத்தில் மக்கள்; வாழ்த்திய பிரதமர் மோடி
» "நான் பாத்துக்குறேன்" - கடைசி ஓவரில் சிக்ஸர் விளாசி தோனியை நினைவூட்டிய ஆட்ட நாயகன் ஹர்திக்
சமூக வலைதளங்கள் மீதான கட்டுப்பாடு
இந்தியாவில் சமீப ஆண்டுகளாக சமூக வலைதள நிறுவனங்களுக்கும் அரசுக்கும் இடையே முரண்பாடு அதிகரித்து வருகிறது. சமூக வலைதளங்கள் கட்டுப்பாடில்லாமல் செயல்படுகின்றன என்றும் பொய்ச் செய்திகள், வன்முறையைத் தூண்டும் பதிவுகள், ஆபாசப் பதிவுகள் அதிகரித்திருப்பதாகவும், இவற்றை சமூக வலைதள நிறுவனங்கள் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு கூறி வந்தது. இது தொடர்பாக கடந்த ஆண்டு புதிய விதிகளை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியது. மத்திய அரசின் கட்டுப்பாடுகளால் கருத்துச் சுதந்திரம் பாதிக்கப்படும் என்றும் பயனாளர்களின் தனியுரிமை பறிபோகும் என்றும் சமூக வலைதள நிறுவனங்கள் மத்திய அரசின் விதிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக அவர் நம்மிடம் கூறுகையில், “மத்திய அரசு இந்தியர்களின் தகவல் பாதுகாப்பில் மிகுந்த கவனத்துடன் இருக்கிறது. அதைத்தான் சமூக வலைதள நிறுவனங்களிடம் வலியுறுத்துகிறோம். ஒரு நாட்டில் செயல்படும் நிறுவனம் அந்நாட்டு சட்டங்களைப் பின்பற்ற வேண்டும். இதுதான் உலகம் முழுவதும் நடைமுறையாக இருக்கிறது. இந்தியாவில் செயல்படும் நிறுவனங்கள் இந்திய விதிகளைப் பின்பற்ற வேண்டும். மாறாக, அவர்கள் நமக்கு விதிகளைச் சொல்லக்கூடாது. ” என்றார்.
தொலைதொடர்புத் துறை
இந்தியாவில் விரைவில் 5ஜி அறிமுகமாக உள்ளது. ஆனால், 5ஜி தொடர்பான தொழில்நுட்பங்களுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை இந்தியா சார்ந்திருக்கிறது. இந்நிலையில் தொலைத்தொடர்புத் துறை சார்ந்து மத்திய அரசின் திட்டங்கள் குறித்து நம்மிடம் கூறுகையில், “இந்தியாவில் தொலைத் தொடர்புத் துறை சார்ந்து வலுவான கட்டமைப்பு உருவாக்கப்பட்டுவருகிறது. சேவை மட்டுமல்ல தொலைத்தொடர்பு துறை சார்ந்த உற்பத்தியிலும் கவனம் செலுத்தப்படுகிறது. இத்துறை சார்ந்து புதிதாக நிறைய உற்பத்தி நிறுவனங்கள் ஆரம்பிக்கப்படுகின்றன. அந்தவகையில், அடுத்த ஆண்டிலே இந்தியா தொலைத்தொடர்பு சார்ந்த தொழில்நுட்பங்களை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு தயாராகிவிடும்” என்றார்.
விரைவில் செமிகண்டக்டர் ஆலை
தற்போது உலக அளவில் செமிகண்டக்டருக்கு பெரும் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், வாகன உற்பத்தி முதல் மின்னணு சாதனங்கள் உற்பத்தி வரையில் நிறுவனங்கள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன.இந்தியா அதன் செமிகண்டக்டர் தேவையில் பெரும் பகுதியை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது. இந்நிலையில், இந்தியாவிலே செமிகண்டக்டர் தயாரிப்பு நிறுவனங்களை உருவாக்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரம் காட்டிவருகிறது. இது தொடர்பாக பல முன்னணிவெளிநாட்டு நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.
இதுகுறித்து அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில் “செமிகண்டக்டர் தொடர்பான கட்டமைப்பு உருவாக்கத்தில் நாம் மிகச் சிறப்பாக முன்னேறிக்கொண்டிருக்கிறோம். அது தொடர்பான அனைத்து நிர்வாக நடைமுறைகள் இந்த ஆண்டுக்குள் முடிக்கப்பட்டுவிடும். இந்த ஆண்டிலே இந்தியாவில் முதல் செமிகண்டக்டர் தயாரிப்பு ஆலை தொடங்கப்படலாம். செமிகண்டக்டர் தயாரிப்பைப் பொறுத்தவரையில் உலக நாடுகள் இந்தியா போன்ற சிறந்த கூட்டாளியைத்தான் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றன” என்றார்.
பிஎஸ்என்எல் லாபம் ஈட்டும்
பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி இருந்த பிஎஸ்என்எல் நிறுவனத்தை மீட்டெடுக்க மத்திய அரசு 2019-ம் ஆண்டு ரூ.70 ஆயிரம் கோடி நிதி அளித்தது. சமீபத்தில், ரூ.1.64 லட்சம் கோடி நிதி வழங்க மத்திய அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் செயல்பாடு தற்போது எப்படி இருக்கிறது, அந்நிறுவனம் சார்ந்து மத்திய அரசின் அடுத்தகட்ட திட்டம் என்ன என்பது குறித்து அவர் கூறுகையில், “2019-ல் வழங்கப்பட்ட நிதியால் தற்போது பிஎஸ்என்எல் மேம்படத் தொடங்கி இருக்கிறது. இனிமேல் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட அதிக லாபம் ஈட்டும் நிறுவனமாக அதை மாற்ற வேண்டும். விரைவிலே பிஎஸ்என்எல்-லில்4ஜியை அறிமுகப்படுத்த உள்ளோம். 2023 இறுதியில் பிஎஸ்என்எல் 5ஜி சேவையை வழங்கும். பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு தற்போது பிராட்பேண்ட் வாடிக்கையாளர்கள் அதிகரித்துவருகின்றனர். டிஜிட்டல் ஏற்றத்தாழ்வை குறைப்பதில் பிஎஸ்என்எல் முக்கிய பங்கு வகிக்கிறது. நாட்டில் தொழில்நுட்ப சேவைகள் சென்றடையாத பகுதிகளை பிஎஸ்என்எல்தான் இணைக்கிறது” என்றார்.
சர்வதேச தரத்தில் இந்திய ரயில்வே
ரயில்வே குறித்து அவர் கூறுகையில், “ரயில் பயணிகளுக்கு மிகச் சிறந்த அனுபவத்தை வழங்கும் நோக்கில், ரயில்வே நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுவருகின்றன. தற்போது 50 ரயில் நிலையங்கள் உலகத் தரத்தில் மேம்படுத்தப்படுகின்றன. நவீன ரயில்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. ‘வந்தே பாரத்’ ரயில் மணிக்கு 180 வேகத்தில் செல்லக்கூடியது. பல ரயில்களில் அதிநவீன இன்ஜீன்கள் பொருத்தப்படுகின்றன. ஒட்டுமொத்தத்தில், இந்திய ரயில்வே மிக மிகப் பெரும் மாற்றத்துக்கு உள்ளாகிறது”என்றார்.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
6 days ago
தொழில்நுட்பம்
7 days ago
தொழில்நுட்பம்
12 days ago
தொழில்நுட்பம்
14 days ago
தொழில்நுட்பம்
14 days ago
தொழில்நுட்பம்
14 days ago
தொழில்நுட்பம்
17 days ago
தொழில்நுட்பம்
18 days ago
தொழில்நுட்பம்
21 days ago
தொழில்நுட்பம்
21 days ago
தொழில்நுட்பம்
23 days ago
தொழில்நுட்பம்
25 days ago
தொழில்நுட்பம்
25 days ago
தொழில்நுட்பம்
26 days ago
தொழில்நுட்பம்
27 days ago