நாட்டிலேயே முதல் முறை: சொந்த இணையதள சேவையை கொண்ட மாநிலமானது கேரளா!

By செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: நாட்டிலேயே முதல் முறையாக சொந்தமாக இணையதள சேவையை கொண்டுள்ள ஒரே மாநிலமானது கேரளா. இதனை அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப துறையின் திட்டங்களில் ஒன்று கேரளா ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க் லிமிடெட். இதன் மூலமாக மாநிலத்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் இணையதள அக்சஸை வழங்க அரசு திட்டமிட்டிருந்தது. அதற்கான இணைய சேவை வழங்குவதற்கான ‘ISP’ உரிமத்தைப் இப்போது தொலைத்தொடர்புத் துறையிடம் இருந்து பெற்றுள்ளது அம்மாநில அரசு. அதையடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் சமூகத்தில் நிலவும் டிஜிட்டல் ஏற்றத் தாழ்வை கலையலாம் என தெரிவித்துள்ளார் முதல்வர் பினராயி விஜயன். இதன் சேவை தொடங்க உள்ளதையும் அவர் உறுதி செய்துள்ளார்.

"நாட்டிலேயே சொந்தமாக இணையதள சேவையை கொண்ட ஒரே மாநிலமாக கேரளா உருவெடுத்துள்ளது. இதன் சேவையை தொடங்குவதன் மூலம் மக்களுக்கு இணைய அணுகலை அடிப்படை உரிமையாக வழங்க முடியும்" என ட்வீட் மூலம் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் அந்த மாநிலத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் வசித்து வரும் குடும்பங்கள் மற்றும் முப்பதாயிரம் அரசு அலுவலங்களுக்கு கேரளா ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க் லிமிடெட் இணைய சேவையை இலவசமாக வழங்க உள்ளது.

கடந்த ஆட்சியில் இணைய சேவையை மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாக அறிவித்தது பினராய் விஜயன் தலைமையிலான அரசு. தொடர்ந்து ரூ.1548 கோடியில் கேரளா ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க் திட்டத்தையும் அப்போது அறிமுகம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE