டிஆர்டிஓ பெண் விஞ்ஞானி டெஸ்ஸி தாமஸுக்கு ஏபிஜே-2022 விருது

By செய்திப்பிரிவு

குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகம் மற்றும் நிம்ஸ் மருத்துவ மையத்தின் ஏபிஜே-2022 விருது, இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) விஞ்ஞானி மற்றும் டைரக்டர் ஜெனரல் டாக்டர் டெஸ்ஸி தாமஸுக்கு வழங்கப்படுகிறது.

தங்கள் துறையில் சிறப்பாக பணிபுரியும் அரசுத்துறை அதிகாரிகளை கவுரவிக்கும் வகையில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் இவ்விருதை இந்நிறுவனங்கள் வழங்கிவருகின்றன. நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் ஏபி.மஜித்கான் தலைமையிலான விருது தேர்வுக் குழுவால் நடப்பாண்டு விருதாளராக டெஸ்ஸி தாமஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

டிஆர்டிஓ உருவாக்கியுள்ள கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி-3 ஏவுகணை, நீண்ட தூர ஏவுகணையான அக்னி-5 ஆகிய திட்டங்களின் இயக்குநராக டாக்டர் டெஸ்ஸி தாமஸ் செயல்பட்டார். மத்திய அரசிடம் இருந்தும், பல்வேறு அமைப்புகளிடம் இருந்தும் தனது பணித் திறனுக்காக ஏராளமான விருதுகளை இவர் பெற்றுள்ளார்.

வரும் 19-ம் தேதி நெய்யாற்றின்கரை நிம்ஸ் மெடிசிட்டியில் நடைபெறும் விழாவில் கேரள ஆளுநர் ஆரிப் முஹம்மது கான் இவ்விருதை, டெஸ்ஸி தாமஸுக்கு வழங்குகிறார். விழாவுக்குப் பின்னர் மதியம் 2 மணி முதல் ஒரு மணி நேரம் மாணவர்களுடன், டாக்டர் டெஸ்ஸி தாமஸ் உரையாடுகிறார். விண்வெளி ஆராய்ச்சி, ஏவுகணை ஆராய்ச்சி குறித்து அறிய ஆர்வமுள்ள மாணவர்கள்

94867 60474 என்ற எண்ணில் பதிவு செய்து கொள்ளலாம். இத்தகவலை நிம்ஸ் மெடிசிட்டி பொது மேலாளர் டாக்டர். கே.ஏ.சஜு தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE