சென்னை: மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் முறையை ஒழிப்பதற்காகக ஐஐடி மெட்ராஸ்-ன் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள ரோபோவான ‘ஹோமோசெப்’(HomoSEP) களப்பணிக்கு தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனிதகழிவுகளை மனிதன் அகற்றுவதற்கு பல தடைகள், சட்டங்கள் இருந்த போதிலும் மலக்குழி மரணங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றும் முறையை ஒழிக்கும் வகையில் ரோபோ ஒன்றைத் தயாரிக்கும் பணியில் மெட்ராஸ் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் குழு ஈடுபட்டிருந்தனர். பணிகள் முடிவுற்று களப்பணிக்கு தயாரக உள்ள அந்த ரோபோவிற்கு "ஹோமோசெப்" என்று பெயரிடப்பட்டுள்ளது.
களப்பணிக்காக, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மொத்தம் 10 இயந்திரங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டு, அதற்கான இடங்களைக் கண்டறிவது தொடர்பாக தூய்மைப் பணியாளர்களுடன் ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே தொடர்பு கொண்டுள்ளனர். குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் இடங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
தூய்மைப் பணியின்போது நிகழ்ந்த துயர சம்பவத்தில் கணவர்களைப் பறிகொடுத்த நாகம்மா, ருத் மேரி ஆகியோரின் தலைமையில் இயங்கி வரும் சுயஉதவிக் குழுக்களுக்கு, சஃபாய் கர்மசாரி ஆந்தோலன் (SKA)தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் முதல் இரண்டு ஹோமோசெப் இயந்திரங்கள் வழங்கப்பட்டு உள்ளன. மனிதக் கழிவுகளை அகற்றும் போது ஏற்படும் பாதிப்புகளால் நேரடியாக பாதிக்கப்பட்ட பெண்களைக் கொண்ட இதுபோன்ற சுயஉதவிக் குழுக்களை உருவாக்கி அவைகளுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் செயல்படுத்துவது ஐஐடி மெட்ராஸ்-ன் தனித்துவமான முன்னோடி மாதிரியாகும். மேலும் 9 இயந்திரங்களை விநியோகிப்பதற்கான பணிகள் ஏற்கனவே திட்டமிட்டபடி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.
ஐஐடி மெட்ராஸ்-ல் உள்ள சென்டர் ஃபார் நான் டிஸ்ட்ரக்டிவ் எவாலுவேஷனைச் (Centre for Nondestructive Evaluation) சேர்ந்த பேராசிரியர் பிரபு ராஜகோபால் தலைமையில், இயந்திரப் பொறியியல் துறை ஆசிரியர், ஐஐடி மெட்ராஸ் ஆதரவுடன் இயங்கி வரும் தொடக்க நிறுவனமான சொலினாஸ் இண்டக்ரிட்டி பிரைவேட் லிமிடெட் (Solinas Integrity Private Limited) ஆகியோரைக் கொண்ட குழுவினர் பல ஆண்டுகளாகப் பணியாற்றி "ஹோமோசெப்" ரோபோவை உருவாக்கி உள்ளனர்.
இத்திட்டத்தின் முதன்மைத் திட்ட ஆய்வாளரும், ஐஐடி மெட்ராஸ் இயந்திரப் பொறியியல் துறையின் ஆசிரியருமான பேராசிரியர் பிரபு ராஜகோபால் ஹோமோசெப் குறித்து கூறும்போது,"பாதியளவு திடமாகவும், பாதியளவு திரவமாகவும் மனித மலத்துடன் உள்ள கழிவுநீர்த் தொட்டி மூன்றில் இரண்டு பங்கு அளவுக்கு நிறைந்திருக்கும் போது நச்சு நிறைந்த சூழலைக் கொண்டிருக்கும். மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் முறைக்கு தடைகளும், தடை உத்தரவுகளும் அமலில் இருந்த போதிலும், இந்தியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான மரணங்கள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றன.
ஹோமோசெப் திட்டம் தனித்துவம் வாய்ந்தது. ஏனெனில் அவசரமான, அவசியமான ஒரு சமூகப் பிரச்சினைக்கு தீர்வு காண பல்கலைக் கழகம் (எங்கள் குழு), தன்னார்வத் தொண்டு நிறுவனம், தொழில்துறை கூட்டாண்மை சமூகப் பொறுப்பு, தொடக்க நிலை நிறுவனங்கள் ஆகியவை ஒன்றிணைந்து உள்ளன. பெரிய அளவிலான சிக்கலான பிரச்சினை என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும் இதற்கான உந்துதலில் மற்றவர்களுடன் இணைய எங்கள் முயற்சி ஒரு உத்வேகமாக இருக்கும்.
பல ஆண்டுகளாக இத்திட்டத்தில் தீவிர ஆர்வமுடன் பணியாற்றிய திவான்ஷு, பாவேஷ் நாராயணி உள்ளிட்ட ஏராளமான மாணவ-மாணவிகளுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டு உள்ளோம். நீர் மற்றும் சுகாதாரத்தில் கவனம் செலுத்தி வரும் தொடக்க நிறுவனமான சொலினாஸ்-ன் சுறுசுறுப்பான குழுவினர் எங்களோடு இடம் பெற்றுள்ளனர். பெருநிறுவன சமூகப் பொறுப்பு மூலம் கிடைத்து வரும் ஆதரவும் எங்களின் வளர்ச்சிக்கும், எங்கள் பணியை மேலும் முன்னெடுத்துச் செல்லவும் உறுதுணையாக இருந்து வருகிறது. இந்த ரோபோக்களை ஒட்டு மொத்தமாகத் தயாரித்து நாடு முழுவதும் மிகப் பெரிய அளவில் விநியோகிக்க அரசுத் தரப்பில் இருந்து அடுத்த ஆண்டு ஆதரவு கிடைக்கும் என நம்புகிறோம்" என்றார்.
தொடக்கநிலை பங்குதாரரான சொலினாஸ் இண்டக்ரிட்டி-யின் தயாரிப்புத் தலைமை (Product Lead) பாவேஷ் நாராயணி கூறிகையில், "ஆய்வகத் தயாரிப்பில் இருந்து உண்மையான கழிவுநீர்த் தொட்டியில் ஈடுபடுத்தக் கூடிய ஒரு ரோபோ தயாரிப்பாக மாற்றித் தருவதற்கான பாதை சிரமங்கள் நிறைந்தது. தூய்மைப் பணியாளர்களின் (சஃபாய் கர்மசாரி) பாதுகாப்பை மனதில் கொண்டு தீர்வை வடிவமைக்க எங்கள் குழுவினர் பல நாட்கள் இரவு பகலாக அயராது உழைத்தனர். பொறியாளர்கள், உலோகப் புனைவாளர்கள் (fabricators),தொழில்நுட்பப் பணியாளர்கள் ஆகியோரின் அர்ப்பணிப்பு, கடின உழைப்பு காரணமாக இந்த மைல்கல்லை எங்களால் எட்ட முடிந்துள்ளது. தூய்மைப் பணியாளர்களுக்கு பயிற்சி மற்றும் பாதுகாப்பு தொடர்பான அமர்வுகளை நடத்தி ஹோமோசெப் ரோபோ-வின் செயல்பாடுகள் மற்றும் இயக்கும் முறைகள் குறித்து எங்கள் குழுவினர் விளக்குகின்றனர். ஹோமோசெப் உருவாக்கப்பட்டதால் அவர்களின் முகங்களில் காணப்படும் மகிழ்ச்சி, எங்களை ஊக்கத்துடன் பணியாற்றவும், அதிகளவில் விநியோகிக்கவும் உறுதுணையாக இருக்கும். ஒன்றிணைந்து பணியாற்றினால், கழிவுநீர்த் தொட்டிகளில் இருந்து மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் முறையை முற்றிலும் ஒழித்துவிடமுடியும்.
இந்த கருத்தாக்க மாதிரியின் மூலம் குறிப்பிடத்தக்க சில கண்டுபிடிப்புகளை எங்கள் கூட்டுக் குழுவினர் கண்டறிந்துள்ளனர். விரிவான உருவகப்படுத்துதல் மூலம் பிளேடு வடிவமைப்பை மேம்படுத்தி பரிசோதித்துப் பார்த்தோம். எளிதில் எடுத்துச் செல்லும் வகையில் குறும்படிவாக்கம் செய்வதிலும் வெற்றிகண்டோம். தொலைதூர இடங்களுக்கும் எங்கள் தயாரிப்பை எடுத்துச் செல்லும் வகையில் டிராக்டருடன் ஒருங்கிணைத்து இருக்கிறோம்" என்றார்.
ஹோமோசெப் ரோபோவில் உள்ள தனிப்பயனாக்கப்பட்ட ரோட்டரி பிளேடு மெக்கானிசம் (blade mechanism) மூலம் கழிவுநீர்த் தொட்டியில் உள்ள கடினமான கசடுகளையும் ஒன்றுசேர்த்து, உறிஞ்சும் மெக்கானிசம் (suction mechanism) மூலம் தொட்டியில் உள்ள கழிவுகளை பம்ப் செய்யலாம். உரிய பயிற்சி மற்றும் தகுந்த வழிகாட்டுதல் ஆகியவற்றுடன் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு துப்புரவுத் தொழிலாளர்கள் தாங்களே ஹோமோசெப் ரோபோவை இயக்க முடியும். இதற்கான பணிகளை ஆராய்ச்சிக் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். ஹோமோசெப்-ன் வடிவமைப்பு தொடங்கி ஒட்டுமொத்த நடைமுறைகள் அனைத்திலும் 'பாதுகாப்பு' அம்சங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
பேரா. ராஜகோபால் வழிகாட்டுதலில் திவான்ஷு குமாருக்கு முதுகலை இறுதியாண்டுக்கான ஆய்வுத் திட்டமாக உருவாக்கப்பட்டதுதான் ஹோமோசெப். 'கார்பன் ஜீரோ சாலன்ஞ்-2019' போட்டியில் இடம்பெற்று பின்னர் ஐஐடி மெட்ராஸ்-ன் சமூகம் தொடர்புடைய திட்ட முன்முயற்சிக்கான நிதியுதவியும் பெறப்பட்டது. அதன்பின்னர் இரண்டு ஆண்டுகள் தொற்றுநோய்- தொடர்பான கடினமான சூழல் நிலவியபோதும், ஹோமோசெப் திட்டத்தை மேலும் மேம்படுத்த ஐஐடி-மெட்ராஸ் ஆதரவுடன் இயங்கி வரும் சொலினாஸ் இண்டக்ரிட்டி பிரைவேட் லிமிடெட் தொடக்கநிலை நிறுவனத்துடன் ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து பணியாற்றி வந்தனர்.
இந்த முன்மாதிரித் திட்டத்திற்காக சமூகப் பொறுப்பு நிதியின் மூலம் பல்வேறு நிறுவனங்கள் தொடக்கம் முதலே ஆதரவை வழங்கி வருகின்றன. தொடக்கத்தில் முன்வடிவ (prototype) மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டபோது 2019-ம் ஆண்டில் விண் பவுண்டேஷனும் (WIN Foundation), 2019-20-ம் ஆண்டுகளில் இந்த தயாரிப்பை மேம்படுத்தும் பணிக்கு கெயில் (இந்தியா) நிறுவனமும், ரோபோவின் குறும்படிவாக்கம் மற்றும் பெயர்வுத் திறனுக்காக (miniaturization and portability) கேப்ஜெமினி நிறுவனமும் தங்கள் சமூகப் பொறுப்பு நிதி மூலமாக ஆதரவு அளித்துள்ளன. கடந்த ஆண்டில் இருந்து என்.எஸ்.இ. பவுண்டேஷன் (NSE Foundation) மூலம் 8 ஹோமோசெப் ரோபோக்களையும், எல்&டி டெக்னாலஜி சர்வீசஸ் (L&T Technology Services Foundation) மூலம் 2 ஹோமோசெப் ரோபோக்களையும் சமூகப் பொறுப்பு நிதி மூலம் உருவாக்கி விநியோகிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
7 days ago
தொழில்நுட்பம்
7 days ago
தொழில்நுட்பம்
12 days ago
தொழில்நுட்பம்
14 days ago
தொழில்நுட்பம்
14 days ago
தொழில்நுட்பம்
14 days ago
தொழில்நுட்பம்
17 days ago
தொழில்நுட்பம்
18 days ago
தொழில்நுட்பம்
21 days ago
தொழில்நுட்பம்
21 days ago
தொழில்நுட்பம்
23 days ago
தொழில்நுட்பம்
25 days ago
தொழில்நுட்பம்
25 days ago
தொழில்நுட்பம்
26 days ago
தொழில்நுட்பம்
27 days ago