இளமை .நெட்: சமூக ஊடகப் பயன்பாடு: நாம் அறிந்தது என்ன?

By சைபர் சிம்மன்

நாம் ஏன் போஸ்ட் செய்கிறோம்?

நம் காலத்தின் முக்கியமான இந்தக் கேள்விக்கு விடை அளிப்பதற்காக ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. சமூக ஊடகப் பயன்பாடு பற்றிய புதிய புரிதல்களை முன்வைக்கும் இந்த ஆய்வு முடிவுகள் பற்றி அறிந்துகொள்வதோடு இது தொடர்பாக உருவாக்கப்பட்டுள்ள ஆன்லைன் பாடத்திட்டத்திலும் நீங்கள் சேர்ந்து பயிலலாம்.

இந்த ஆய்வும் சரி, அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள ஆன்லைன் பயிற்சி வகுப்புகளும் சரி, நாம் சமூக ஊடகத்தைப் பயன்படுத்தும் விதம் தொடர்பாக நமது புரிதலை மேலும் விசாலமாக்கக்கூடியது!

தகவல் தொடர்புக்கும் சரி, நட்பு வட்ட உரையாடலுக்கும் சரி சமூக ஊடகங்களைத்தான் அதிகம் பயன்படுத்துகிறோம். ஆனால் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் விதம் பற்றி நாம் எந்த அளவுக்கு அறிந்திருக்கிறோம் என்பது சந்தேகம்தான்!

மானுடவியல் நோக்கிலும் இந்தக் கேள்வி முக்கியம் பெறுவதால் 9 மானிடவியல் ஆய்வாளர்கள் களத்தில் இறங்கி இதற்குப் பதில் காண முடிவுசெய்தனர். இந்தியா, பிரேசில், சிலி, சீனா, இத்தாலி, பிரிட்டன் உள்ளிட்ட 15 நாடுகளில் 15 மாதங்கள் செலவிட்டு இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

லண்டன் யுனிவர்சிட்டி கல்லூரி மற்றும் ஐரோப்பிய ஆய்வுக் குழு இரண்டும் இணைந்து நடத்திய இந்த ஆய்வில் இந்தியா தொடர்பான ஆய்வை மானுட‌வியல் வல்லுந‌ர் ராம் வெங்கட்ராமன் மேற்கொண்டார்.

பொதுவாக சமூக ஊடகப் பயன்பாட்டினால் தனிநபர்கள் சுய நாட்டம் கொண்டவர்களாகவும், சுயவிரும்பிகளாகவும் மாறியிருப்பதாகக் கருதப்படும் நிலையில், இந்த ஆய்வு பெரும்பாலும் பாரம்பரியக் குழு, குடும்பம், இன உணர்வுகள் சமூக ஊடகப் பயன்பாட்டிலும் பிரதிபலிப்பதாகத் தெரிவிக்கிறது. உதாரணமாக பிரேசிலில் நேருக்கு நேர் சந்தித்துப் பேசிக்கொள்ளும் வாய்ப்பில்லாத குழுக்களைச் சேர்ந்த பலர் ஃபேஸ்புக்கில் நண்பர்களாக இருப்பது தெரியவந்துள்ளது. கிராமப்புற சீனாவில் பயனாளிகள் தங்கள் கணக்கு மற்றும் பாஸ்வேர்டுகளைக்கூடப் பகிர்ந்துகொள்ளும் நிலை இருக்கிறது.

இதே போல சமூக ஊடகங்கள் கல்வியில் இருந்து திசை திருப்பும் கவனச் சிதற‌லாக இல்லாமல் கல்விக்கு உதவும் சாதனங்களாக இருக்கின்றன என்பதும் மற்றொரு முக்கியக் கண்டுபிடிப்பாக அமைகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை வசதி படைத்த பள்ளிகள் சமூக ஊடகத்தைக் கவனச் சிதறலாகக் கருதும் நிலையில், ஏழை எளியவர்கள் படிக்கும் பள்ளிகளில் சமூக ஊடகங்கள் கற்றலுக்கு உதவும் முக்கியச் சாதனமாகக் கருதப்படுகிறது. ஃபேஸ்புக் மூலம் குழுக்கள் அமைத்து ஐ.ஏ.எஸ். தேர்வுக்குத் தயாராக உதவும் கிராமப்புறக் குழுக்கள் இதற்கு உதாரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் செல்ஃபி பற்றித் தெரியவந்துள்ள விஷயங்கள் மிகவும் சுவாரஸ்யமானவை. ஏனெனில் உலகம் முழுவதும் பலவிதமாக செல்ஃபி எடுத்துக்கொள்ளும் பழக்கம் இருப்பதையும், நாட்டுக்கு நாடு இது மாறுபடுவதையும் ஆய்வு உணர்த்துகிறது. செல்ஃபி என்பது சுயநலம் சார்ந்த‌து அல்ல என்றும் தெரியவந்துள்ளது.

சமூக ஊடகம் என்பது சமூக ஊடகத் தளங்கள் அல்ல. மாறாக அவற்றைப் பயன்படுத்தும் மக்களும், அவர்கள் பகிர்ந்துகொள்ளும் தகவல்களும்தான் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை கடவுள் படத்தை வெளியிடுவதில் தொட‌ங்கி மதம் தொடர்பான உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளச் சமூக ஊடகம் பரவலாகப் பயன்படுத்தப்படுவதாக ஆய்வு தெரிவிக்கிறது. பலரும் ஊக்கம் தரும் செய்திகள் மற்றும் வாசகங்களைத் தங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்துகொள்கின்றனர். பிரேசிலில் ஆதிக்கம் செலுத்திய ‘ஆர்குட்’ சேவை பற்றிய தகவல்களும் இடம்பெற்றுள்ளன.

வர்த்தகம், அரசியல் போன்ற துறைகளில் சமூக ஊடகத்தின் தாக்கம் பற்றியும் விரிவான தகவல்களை இந்த ஆய்வு தெரிவிக்கிறது. சமூக ஊடகம் பாலின வேறுபாட்டின் மீது தாக்கம் செலுத்துகிறது, இணையத்தில் நிலவும் சமத்துவம் நிஜ உலகில் பிரதிபலிப்பதில்லை என்பன போன்ற தகவல்களும் தெரியவந்துள்ளன. முக்கியமாக, சமூக ஊடகம் என்பது வெறும் தகவல் தொடர்புக்கானது மட்டும் அல்ல; அது வாழ்க்கையில் ஓர் அங்கம் என்றே பெரும்பாலானோர் கருதுகின்றனர். மீம்கள் இணைய உலகில் கலாச்சாரக் காவலர்களாக உருமாறி இருப்பதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது.

சமூக ஊடகம் சில நேரங்களில் தனியுரிமையை அதிகரிக்கவும் உதவலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆய்வை மேற்கொண்ட லண்டன் கல்லூரி மானுடவியல் தலைவரான டேனியல் மில்லர் உலகம் முழுவதும் சாமானிய மக்கள் சமூக ஊடகங்களை எப்படிப் பயன்படுத்துகின்றனர் என்பது குறித்து நாம் எந்த அளவுக்குக் குறைவாக அறிந்திருக்கிறோம் என்பதையும் ஆய்வு உணர்த்துவதாகத் தெரிவித்துள்ளார்.

அவர் சொல்வது உண்மை என்பதை இந்த ஆய்வு முடிவுகளைப் பகிர்ந்துகொள்ள அமைக்கப்பட்டுள்ள இணையதளம் தொடர்பாகவும், அதில் உள்ள இணையப் பயிற்சி வகுப்புகள் மூலமும் உணரலாம். ஆங்கிலம் தவிர தமிழிலும் இவற்றை அணுகும் வசதி இருக்கிறது.

சமூக ஊடகப் பயன்பாடு ஆய்வு பற்றி அறிய: >http://www.ucl.ac.uk/why-we-post/tamil

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

39 mins ago

தொழில்நுட்பம்

2 hours ago

தொழில்நுட்பம்

1 day ago

தொழில்நுட்பம்

1 day ago

தொழில்நுட்பம்

3 days ago

தொழில்நுட்பம்

5 days ago

தொழில்நுட்பம்

6 days ago

தொழில்நுட்பம்

6 days ago

தொழில்நுட்பம்

10 days ago

தொழில்நுட்பம்

14 days ago

தொழில்நுட்பம்

18 days ago

தொழில்நுட்பம்

20 days ago

தொழில்நுட்பம்

28 days ago

தொழில்நுட்பம்

1 month ago

தொழில்நுட்பம்

1 month ago

மேலும்