ஆவலை வீசுவோம் 19 - வியத்தகு வீடியோ தேடியந்திரங்கள்!

By சைபர் சிம்மன்

இணையத்தில் தகவல்களை தேடுவதற்கான நுட்பத்திற்கும், வீடியோக்களை தேடுவதற்கான நுட்பத்திற்கும் அதிக வேறுபாடுகள் இருப்பது, இதற்கென தனி தேடியந்திரங்களின் தேவையை உருவாக்கி இருக்கிறது.

இணையம் அதன் ஆரம்ப நிலையில் இருந்து வெகுதூரம் முன்னேறி வந்திருக்கிறது. இந்த மாற்றத்தை வேறு எந்த அம்சங்களை விட வீடியோவில் பளிச்சென உணரலாம். இன்று, பஸ் அல்லது ரயில் பயணத்தின்போது கையில் இருக்கும் ஸ்மார்ட்போனில் வீடியோ பார்த்து ரசிக்க முடிகிறது. பென்டிரைவ் தலைமுறை இதை இயல்பான வசதியாக ஏற்றுக்கொண்டு அலட்சியம் செய்யலாம். ஆனால் முந்தைய தலைமுறைக்கு இது எளிதில் ஏற்றுக்கொள்ள முடியாத ஆச்சர்யமாக இருக்கும். ஏனெனில் இணையத்தில் வீடியோ என்பது எளிதில் பார்த்து ரசிக்க கூடிய அம்சமாக இருக்கவில்லை. ஆரம்ப காலத்தில் இருந்த இணையத்தின் கட்டமைப்பு வசதி அப்படி!

இணையத்தை பொருத்தவரை வரி வரிவம் என்பது வேறு; புகைப்படம் மற்றும் ஆடியோ, வீடியோ என்பது வேறு. அதாவது வரி வடிவ தகவல்களை இடம்பெற செய்வதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால் புகைப்படம் அல்லது வீடியோ கோப்பை பதிவேற்ற வேண்டும் என்றால் அதற்கு அதிக இட வசதி தேவை. புகைப்படங்களின் அளவு பெரிதாக இருந்தால் அதன் காரணமாகவே குறிப்பிட்ட இணைய பக்கம் தரவிறக்கம் ஆவதற்கு தாமதமாகலாம். எனவே, புகைப்படங்களை பயன்படுத்தும்போது அளவில் பெரிய படங்களை தவிர்த்துவிட்டு, சிறிய அளவிலான படங்களை நாடும் பழக்கம் ஆரம்ப கால இணையத்தில் சொல்லப்படாத விதியாக இருந்தது இப்போது கற்காலத்து தகவலாகிவிட்டது.

புகைப்படமும் வீடியோவும்

புகைப்படங்களுக்கே இந்த நிலை என்றால் அவற்றை கொள்ளளவில் நூறு மடங்கு, ஆயிரம் மடங்கு பெரிதான வீடியோ கோப்புகள் பற்றி கேட்கவே வேண்டாம். வீடியோ கோப்பை பதிவேற்றுவது இணையத்தின் சர்வர் இடத்தை விழுங்கும் என்பதோடு, அதை பார்த்து ரசிக்க முற்படும் இணையவாசிகளையும் சோதித்துவிடும். ஒரு சின்ன வீடியோ கோப்பு முழுவதுமாக தரவிறக்கம் ஆக மணிக்கணக்கில் ஆகலாம். எனவே வீடியோ கோப்புகள் இரண்டாம் பட்சமாக கூட அல்ல மூன்றாம்பட்சமாகவே கருதப்பட்டு வந்தன. கடந்த நூற்றாண்டு வரை இது தான் நிலை.

இணைய ஸ்டீரிமிங்கிற்கும் பழக்கப்பட்ட நெட்பிளிக்ஸ் தலைமுறைக்கு இது நம்ப முடியாத விஷயமாக இருக்கலாம். எனினும் இணைய இணைப்பின் வேகமும், உள்கட்டமை வசதியும் கிலோ பைட்டாகவும் இருந்த காலத்தில் இணைய பக்கங்கள் முழுவதும் தரவிறக்கம் ஆகவே தவம் இருக்க வேண்டும்.

ஆனால் புத்தாயிரமாண்டில் இந்த நிலை மாறத் துவங்கியது. டயல் அப் யுகம் விடைபெற்று, பிராட்பேண்ட் இணையப்பு போன்றவை பரவலாகி இணைய இணைப்பின் வேகம் மேம்பட்டு, இணையவாசிகளின் எதிர்பார்ப்பும் அதிகரிக்கத் துவங்கியது. இதன் பயனாக இணையத்தில் வீடியோ பார்ப்பதும் எளிதானது. வீடியோக்கள் அதிகரித்தபோது அவற்றை தேடி கண்டுபிடிப்பதற்கான வசதி பற்றிய எதிர்பார்ப்பும் அதிகமானது. இந்த வேட்கையே வீடியோ தேடலுக்கான எதிர்பார்ப்பையும், தேவையையும் அதிகமாக்கியது.

ஆரம்ப கால வீடியோ தேடல்

ஆனால், வீடியோ தேடல் வசதி ஆரம்ப காலத்திலேயே இருக்கவே செய்தது. கூகுள் மட்டும் அல்ல, அதற்கு முந்தைய முன்னோடி தேடியந்திரங்களும் கூட வீடியோ தேடல் வசதியை அளித்தன. ஆனால் பத்தோடு பதினொன்று என்று சொல்வது போல வீடியோ தேடல் வசதி முன்னுரிமை பெறாத உப அம்சமாகவே இருந்தது. தேடியந்திர வடிவமைப்பிலேயே இதை பார்க்கலாம். தேடல் முடிவுகள் பட்டியலிடப்படும் போது முதலில் வலைப்பக்கங்களும், இரண்டாவதாக செய்திகளும் குறிப்பிடப்பட்டிருக்கும். மூன்றாவதாக புகைப்படமும் அதற்கு அடுத்த இடத்தில் கடைசியாக வீடியோ இடம்பெற்றிருக்கும்.

2005-ல் யூடியூப் இணையதளம் அறிமுகமான பிறகு இந்த நிலை மாறியது. இணையத்தில் வீடியோ கோப்புகளை பதிவேற்றுவது எளிதானதோடு, வீடியோ கோப்புகளை தேடிப்பார்க்கும் தேவையும் அதிகமானது. இந்த இடத்தில் இரண்டு முக்கிய அம்சங்களை நினைத்து பார்க்க வேண்டும். முதல் அம்சம் பூனை வீடியோக்கள். இணையத்திற்கு பூனைகள் மீது என்ன பாசமோ, நேசமோ தெரியவில்லை; ஆனால் பூனை வீடியோக்கள் தான் வீடியோ பரப்பில் ஆதிக்கம் செலுத்தின. பூனை வீடியோக்களை பார்க்கும் ஆர்வமும் வீடியோ தேடலில் முக்கியமாக இருந்தது. மற்றொரு அம்சம், தேடியந்திரமாக கூகுளின் எழுச்சி.

கடந்த நூற்றாண்டின் இறுதியில் அறிமுகமான கூகுள் இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் முன்னணி தேடியந்திரமாக வெற்றிக்கொடி நாட்டியது. அது மட்டும் அல்லாமல் பொதுவாகவே தேடல் மீதான நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் அதிகமாகி இருந்தது. இணையத்தில் என்ன தேவை என்றாலும் தேடி எடுத்துவிடலாம் என்ற எண்ணமும் வலுப்பெற்றிருந்தது. இதற்கு கூகுள் மட்டும் காரணம் அல்ல; கூகுளுக்கு மாற்றாக உருவாகும் உத்தேசத்துடன் உண்டான நூற்றுக்கணக்கான போட்டி தேடியந்திரங்களும் தேடல் மீதான எதிர்பார்ப்பை விரிவாக்கியது. கூகுள் போட்டியாளர்கள் மட்டும் அல்ல, யூடியூப்பிற்கு மாற்றாக உருவான டெய்லிமோஷன், விமியோ, ஹுலு, மெட்டாகேப் உள்ளிட்ட வீடியோ பகிர்வு சேவைகளும் வீடியோ தேடலுக்கான தேடலை தீவிரமாக்கின.

புத்தாயிரமாண்டின் புதிய அலை

இதன் விளைவாக பார்த்தால் புத்தாயிரமாண்டின் முதல் பத்தாண்டுகளில் வீடியோக்களை தேடித்தருவதற்காக என்றே உருவான பிரத்யேக தேடியந்திரங்களே டஜன் கணக்கில் இருந்தன. கிளிப்பிளாஸ்ட், ட்ருவியோ, வீடியோ சர்ப், ஈசி ஜிங், 5மின், கிளிப் டிவி... என இந்த பட்டியல் நீள்கிறது. இவற்றில் பெரும்பாலான தேடியந்திரங்கள் இப்போது காணாமல் போய்விட்டன என்றாலும், தனித்தன்மையோடு விளங்கும் வீடியோ தேடியந்திரங்கள் சில இன்னமும் தாக்குப்பிடித்து நிற்கின்றன.

வீடியோக்களையும் கூகுள் போன்ற பொது தேடியந்திரத்தில் தேடிக்கொள்ள பழக்கப்பட்டிருப்பவர்களுக்கு இத்தனை தனி வீடியோ தேடியந்திரங்கள் இருப்பது வியப்பை அளிக்கலாம். ஆனால் தனித்தேடியந்திரங்களை பயன்படுத்திப் பார்த்தால்தான் அவற்றுக்கான தேவையும், அவை ஏற்படுத்தி தரக்கூடிய சாத்தியங்களும் புரியும்.

பொது தேடியந்திரங்கள்

எல்லா பொது தேடியந்திரங்களுமே வீடியோ தேடல் வசதியை அளிக்கின்றன. கூகுள் வீடியோஸ் எனும் பெயரில் இந்த வசதியை அளிக்கிறது. அல்லது தேடல் முடிவுகளில் வீடியோ எனும் பிரிவை கிளிக் செய்து பார்க்கலாம்; இல்லை என்றால் தேடல் குறிச்சொல்லுடன் வீடியோ எனும் பதத்தை சேர்த்துக்கொண்டு வீடியோ கோப்புகளை மட்டும் தேடலாம். யாஹூ ஸ்கிரினின் எனும் பெயரில் யாஹூ வீடியோ தேடலை வழங்கியது. மைக்ரோசாப்டின் 'பிங்' வீடியோ தேடலில் மேம்பட்ட வசதியை அளிக்கிறது. வீடியோ தேடலின் முன்னோடியான 'வீடியோ சர்ப்' தேடியந்திரத்தை கையகப்படுத்தியதும் இதற்கான ஒரு காரணமாக இருக்கலாம்.

சர்வதேச தேடியந்திரமான யான்டெக்ஸ், தனியுரிமை பாதுகாப்பு அளிப்பதை முக்கியமாக கருதும் 'டக்டக்கோ' ஆகிய தேடியந்திரங்களும் வீடியோ தேடல் வசதியை கொண்டிருக்கின்றன.

ஆனால் வீடியோ தேடல் வழக்கமான இணைய தேடலில் இருந்து பெருமளவு மாறுபட்டது என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம். தேடியந்திரங்கள் பொதுவாக என்ன செய்கின்றன. இணையம் முழுவதும் உள்ள தகவல்களை தொகுத்து வைத்துக்கொள்கின்றன. தேடப்படும் குறிச்சொல்லுக்கு ஏற்ப இந்த தொகுப்பில் இருந்து பக்கங்களை எடுத்து அளிக்கின்றன. குறிச்சொல்லுக்கு பொருத்தமாக இணைய பக்கங்களை பட்டியலிட தங்களுக்கென அல்கோரிதம் எனப்படும் தனி படிமுறைகளையும் கொண்டிருக்கின்றன. இந்த படிமுறையே தேடியந்திரங்களின் தனித்தன்மையாகவும் இருக்கின்றன.

இப்படி தேடும் போது குறிச்சொல் எந்த பக்கத்தில் எல்லாம் இருக்கிறதோ அவை எடுக்கப்பட்டு, பின்னர் பொருத்தமான தன்மைக்காக அல்கோரித ஆய்வுக்கு உள்ளாகின்றன. இந்த முறை வரி வடிவிலான தகவலுக்கு ஏற்றதாக இருக்கிறது. இதே முறையில் வீடியோக்களையும் தேடும்போது நிறைய போதாமைகள் இருக்கின்றன.

வீடியோ தேடல் சிக்கல்

வீடியோவில் உள்ள அனைத்து அம்சங்களையும் குறிச்சொல்லால் அடையாளம் கண்டுவிட முடியாது. தலைப்பு மற்றும் வீடியோ பற்றிய குறிப்புக்களே அடையாளம் காட்டக்கூடியவை. உதாரணமாக ஒரு வீடியோ நகைச்சுவை வீடியோ என குறிப்பிடப்பட்டிருக்கும். அல்லது இந்த வீடியோ உங்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் என குறிப்பிடப்பட்டிருக்கும். வீடியோவின் முழுத்தன்மையும் அறிய இது போதுமானதல்ல. அதேபோல சச்சினின் 100-வது சதம் என்றால் எளிதாக தேடி விடலாம். அதே தலைப்பில் வீடியோ இருக்கும். ஆனால் சச்சின் இடம்பெற்ற மற்ற ஆட்டங்களின் வீடியோக்கள் இந்த தேடல் தொகுப்பில் இல்லாமல் போகலாம். உதாரணமாக ராகுல் திராவிட்டுடன் சச்சின் ஜோடி சேர்ந்து ஆடிய ஆட்டங்களின் வீடியோ இதில் இருக்காது. சச்சின் – திராவிட் ஜோடியாக ஆடிய ஆட்டம் என தலைப்பிட்டிருந்தால் மட்டும் அவை இடம்பெறும். அப்போது கூட சவ்ரவ் கங்குலி அல்லது லட்சுமண் போன்றவர்களுடன் சச்சின் அல்லது திராடவிட் இணைந்து ஆடிய ஆட்ட வீடியோ சச்சின் அல்லது திராவிட் வீடியோவை தேடும் போது விடுபடலாம்.

இவை உதாரணங்கள் தான். ஆனால் வீடியோ தேடலில் இதுபோன்ற எண்ணற்ற சிக்கல்கள் இருக்கின்றன. இசை வீடியோ அல்லது திரைப்பட வீடியோக்கள் என செல்லும்போது இன்னும் வேறுவிதமான நுட்பங்கள் தேவை. பொது தேடியந்திரங்கள் இவற்றை எல்லாம் பொருட்படுத்துவதில்லை. எனவே தான், வீடியோ தேடலை மேம்படுத்த பிரத்யேகமான அணுகுமுறை தேவைப்படுகிறது. வீடியோ தேடியந்திரங்களுக்கான மற்றொரு சவால் பழைய வீடியோக்கள் மட்டும் அல்லாமல் புதிதாக பதிவேற்றப்படும் வீடியோக்களையும் அடையாளம் கண்டு பட்டியலிட வேண்டும்.

தனி வீடியோ தேடியந்திரங்கள் இந்த சவாலைதான் எதிர்கொண்டு வருகின்றன. தலைப்பு மற்றும் வர்ணனை குறிப்புகள் தவிர வீடியோவில் அடையாளம் காணக்கூடிய பலவகை குறிப்புகளை தேடி எடுத்து அவற்றின் அடிப்படையில் வீடியோக்களை வகைப்படுத்தி மேம்பட்ட தேடல் அனுபவத்தை அளிக்க முயல்கின்றன.

தனித் தேடியந்திரங்கள்

இந்த வகையில் அறிமுகமான முன்னோடி தேடியந்திரங்கள் என பிளின்க்ஸ் ( >http://www.blinkx.com/), வீடியோசர்ப் மற்றும் ட்ருவியோ ஆகியவற்றை குறிப்பிடலாம். இவற்றில் ட்ருவியோ ஏ.ஒ.எல் சேவையுடன் ஐக்கியமாகிவிட்டது. வீடியோசர்ப் மைக்ரோசாப்டின் பிங் வசமாகிவிட்டது. பிளின்க்ஸ் இன்னமும் தனி வீடியோ தேடியந்திரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. யூடியூப்பிற்கு முன்னதாகவே 2004-ல் அறிமுகமான பிளின்க்ஸ் நடுவே அதன் விளம்பர வருவாய் உத்திக்காக சர்ச்சைக்கு இலக்கானாலும், வீடியோ தேடலிலில் முக்கிய அங்கம் வகிக்கிறது.

பிளின்க்ஸ் தேடியந்திரத்தில் வழக்கமான தேடியந்திரம் போலவே குறிச்சொல் மூலம் தேடலாம். அதற்கேற்ப பொருத்தமான வீடியோக்களை இது பட்டியலிடுகிறது. செய்தி வீடியோ உள்ளிட்டவற்றை இதன் மூலம் எளிதாக அணுகலாம். வீடியோக்களை கண்டறிவதற்கும், பகிர்வதற்குமான சிறந்த வழி என்று பிளின்க்ஸ் தன்னை வர்ணித்துக் கொள்கிறது.

ட்ருவியோ சேவையை இப்போது ஏஒஎல் ( >http://on.aol.com/) வடிவில் அணுகலாம். வீடியோக்களை குறிச்சொல் மூலம் தேடலாம். இது தவிர முன்னணி வீடியோக்கள் முகப்பு பக்கத்திலேயே பட்டியலிடப்பட்டுள்ளன. செய்தி, விளையாட்டு, சினிமா, வைரல் ஆகிய தலைப்புகளிலும் வீடியோக்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் சில...

மற்றொரு முன்னோடி வீடியோ தேடியந்திரமான கிளிப்பிளாஸ்ட் ( >http://www.clipblast.com/) வீடியோவுக்கான உடனடி கையேடு எனும் வர்ணனையோடு அறிமுகமானது. இப்போதும் அதன் தளத்தை அணுகமுடிகிறது என்றாலும் அதன் தேடல் சேவை எந்த அளவு துடிப்புடன் இருக்கிறது எனத் தெரியவில்லை.

2004-ம் ஆண்டில் அறிமுகமான பிளிப்.டிவி வீடியோ தேடியந்திரம் எனும் அடைமொழிக்குள் பொருந்தாது என்றாலும் தரமான வீடியோ பகிர்வுக்கான மேடையாக நிறுவப்பட்டு பின்னர் பெரிய அளவில் வளர்ச்சி பெற்று வீடியோ பிரியர்கள் மத்தியில் செல்வாக்குடன் விளங்கியது. 2013-ல் மேக்கர் டிவியால் கையகப்படுத்தப்பட்டுவிட்டது: http://www.maker.tv/

இதேபோல முகம் கண்டுணர் நுட்பத்தின் அடிப்படையில் செயல்பட்ட வியூடல் (Viewdle) சேவை கூகுள் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டது.

எதிர்காலம் என்ன?

வீடியோ தேடியந்திரங்கள் வரிசையில் மாஷ்பீடியா ( >http://www.mashpedia.com/) சற்று வித்தியாசமானது. வீடியோக்களுக்கான இணைய களஞ்சியமாக வர்ணிக்கப்படும் இந்தத் தேடியந்திரம் மாறுபட்ட முறையில் வீடியோக்களை தொகுத்தளிக்கிறது. ஒரு தலைப்பு தொடர்பாக, யூடியூப் வீடியோக்கள் மற்றும் விக்கிபீடியா தகவகளை இரண்டையும் ஒருங்கிணைத்து வழங்குவது இதன் சிறப்பு. குறிச்சொல்லை டைப் செய்த உடன், அந்த தலைப்பு தொடர்பான விக்கிபீடியா தகவல் மற்றும் வீடியோக்களை திரட்டித் தருகிறது.

இதேபோல கல்வி நோக்கில் அறிவியல் வீடியோக்களை மட்டும் தேடித்தரும் சேவையை சயின்ஸ்ஹேக் ( >http://sciencehack.com/) தளம் வழங்குகிறது.

வீடியோ என்றதும் திரைப்பட காட்சிகளும் நினைவுக்கு வரும். மூவிகிளிப்ஸ் (http://www.movieclips.com/) தளம் திரைப்படங்களின் காட்சிகளை கிளிப் வடிவில் தேடித்தருகிறது. ஹாலிவுட் படங்களின் முன்னோட்ட காட்சிகளையும் காணலாம்.

இதே போலவே யார்ன். ( >http://getyarn.io/) தளம் திரைப்பட கிளிப்கள், இசை வீடியோக்கள் மற்றும் டிவி தொடர் காட்சிகளை தேடித்தரும் சேவையை அளிக்கிறது.

இந்த வரிசையில் லுக்கட்ஸ் ( >http://lookats.com/) நேரடி ஸ்ட்ரீமிங் காட்சிகளுக்கான தேடியந்திரமாக அறிமுகம் ஆகியிருக்கிறது. மீர்கேட், பெரிஸ்கோப் உள்ளிட்ட நேரடி ஒளிபரப்பு செயலிகளில் வெளியாகும் ஸ்டீரிமிங் காட்சிகளை இதன் மூலம் தேடலாம்.

முன்னணி வீடியோ பகிர்வு சேவையான யூடியூப்பில் தேடல் வசதி இருந்தாலும் அந்த தளத்தில் உள்ளவற்றை மட்டும் தான் தேட முடியும். யூடியூப்பில் சிறந்த முறையில் தேடுவதற்கு என்றே கூட இடையே சில தேடியந்திரங்கள் உதயமாயின.

இணையத்தில் வீடியோ தேடல் என்பது அதன் பரிணாம வளர்ச்சியில்தான் இருக்கிறது. உள்ளடக்கத்திற்கு ஏற்க வீடியோக்களை தேடித்தரும் அற்புதமான வீடியோ தேடியந்திரம் எதிர்காலத்தில் உருவாக்கப்படலாம்.

வீடியோ தேடியந்திர வரலாறு பற்றி யோசிக்கும்போது இணையத்தில் பதிவேற்றப்பட்ட முதல் வீடியோ எது எனும் கேள்வி எழுகிறது. இந்த கேள்விக்கான பதிலை தேடினால் எல்லா தேடியந்திரங்களும் விழிக்கின்றன. இணையத்தில் பதிவேற்றப்பட்ட முதல் புகைப்படம் தொடர்பான தகவல் மற்றும் வீடியோ பகிர்வு சேவையான யூடியூப்பில் பதிவேற்றப்பட்ட முதல் வீடியோ பற்றியும்தான் தகவல்கள் கிடைக்கின்றன.

இணையத்தில் இடம்பெற்ற முதல் வீடியோ என்னவாக இருக்கும்? உங்களுக்கு ஏதேனும் தகவல் தெரியுமா?

முந்தைய அத்தியாயம்:> ஆ'வலை' வீசுவோம் 18 - பயனுள்ள பசுமை தேடியந்திரங்கள்!

- சைபர்சிம்மன், இணைய வல்லுநர், தொடர்புக்கு enarasimhan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

5 days ago

தொழில்நுட்பம்

5 days ago

தொழில்நுட்பம்

10 days ago

தொழில்நுட்பம்

12 days ago

தொழில்நுட்பம்

12 days ago

தொழில்நுட்பம்

12 days ago

தொழில்நுட்பம்

15 days ago

தொழில்நுட்பம்

16 days ago

தொழில்நுட்பம்

19 days ago

தொழில்நுட்பம்

19 days ago

தொழில்நுட்பம்

22 days ago

தொழில்நுட்பம்

23 days ago

தொழில்நுட்பம்

24 days ago

தொழில்நுட்பம்

25 days ago

தொழில்நுட்பம்

25 days ago

மேலும்