இணையத்தில் புழங்குபவர்கள் ‘எமிலி டெம்பிள் உட்’டை அவசியம் அறிந்துகொள்ள வேண்டும். எமிலியைப் பற்றித் தெரிந்துகொண்டால் அவர் மீது மதிப்பு உண்டாகும் என்பது மட்டும் அல்ல, இணையம் மீதான நம்பிக்கையும் அதிகமாகும். அதைவிட முக்கியமாக இணையத்தின் இருண்ட பக்கமான ‘ட்ரோல்’களின் தொல்லையை எதிர்கொள்வதற்கான ஊக்கமும் உண்டாகும்.
அமெரிக்கக் கல்லூரி மாணவியான எமிலி விக்கிப்பீடியாவின் முன்னணிப் பங்களிப்பாளராக இருக்கிறார். கூட்டு முயற்சியின் அடையாளமாகத் திகழும் விக்கிப்பீடியாவில் ஆயிரக்கணக்கான தன்னார்வப் பங்களிப்பாளர்கள் இருந்தாலும், எமிலியின் பங்களிப்பை விஷேசமாகக் குறிப்பிடக் காரணம் இல்லாமல் இல்லை.
அவர் விக்கிப்பீடியாவின் பெருங்குறை ஒன்றைச் சரி செய்யும் வகையிலும் இணையத்தின் பெருங்குறை ஒன்றை எதிர்கொள்ளும் வகையிலும் பங்களிப்புச் செய்துவருகிறார். இதைத்தான் விக்கிமீடியாவின் வலைப்பதிவு, எமிலி பகலில் உயிரியல் மாணவியாகவும், இரவில் இணைய ட்ரோல்களுடன் மல்லுக்கட்டுபவராகவும் இருக்கிறார் எனக் குறிப்பிடுகிறது. ட்ரோல்களுக்கு அவர் நல்ல தண்டனை வழங்கிவருவதாகவும் அந்தப் பதிவு பாராட்டுகிறது.
அதாவது ட்ரோல்கள் தொடுக்கும் ஒவ்வொரு ஆவேசத் தாக்குதலுக்கும் பதிலாகக் கோபமோ, வெறுப்போ கொள்ளாமல் ஒரு பெண் விஞ்ஞானிக்கான அறிமுகப் பக்கத்தை அவர் விக்கிப்பீடியாவில் உருவாக்கிவருகிறார். இது ட்ரோல்களின் தாக்குதலை இலக்கு தவறிய அம்புகளாக மாற்றும் அதே நேரத்தில் அவரது ஆதார நோக்கத்தை மேலும் செழுமையாக்குகிறது.
எமிலி இதை எப்படிச் செய்கிறார்?
எமிலிக்கு இப்போது 21 வயது. ஆனால் 12 வயதிலேயே அவர் விக்கிப்பீடியாவில் களமிறங்கிவிட்டார். 5 வயதிலேயே குழந்தைகள் கலைக்களஞ்சியத்தைக் கரைத்துக் குடித்திருந்தவருக்கு இதே ஆர்வத்தை, ‘கன்டென்ட்’ உருவாக்கும் திசையில் திருப்புவது இயல்பாக இருந்திருக்கிறது. தைவான் பாடகி ஏஞ்சலா சாங் பற்றிய முதல் கட்டுரையை உருவாக்கியவர் அதன் பிறகு நூற்றுக்கணக்கான கட்டுரைகளைச் சமர்பிப்பவராகவும், கட்டுரைகளை ‘எடிட்’ செய்பவராகவும் உருவானார்.
அவரது கட்டுரைகளில் பல குறிப்பிடத்தகவையாக இருந்தாலும், 2012-ம் ஆண்டு அவர் தொடங்கிய முயற்சிதான் இப்போது அவரைப் பற்றிப் பேச வைத்திருக்கிறது. பெண் விஞ்ஞானிகளுக்கான அறிமுகப் பக்கங்களைக் கட்டுரையாக எழுதுவதுதான் அவர் தொடங்கிய விக்கி திட்டம்!
விக்கி நோக்கில் இது மிகவும் முக்கியமான முயற்சி. ஏனெனில் விக்கிப்பீடியா உள்ளடக்கத்திலும், செயல்பாட்டிலும் பெண்கள் தொடர்பாக இருக்கும் குறையைக் களையும் வகையில் இது அமைந்துள்ளது.
விக்கிப்பீடியா பங்களிப்பாளர்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் போதுமான அளவு இல்லை என்ற ஒரு கருத்து முன்வைக்கப்பட்டுக் கவலையுடன் விவாதிக்கப்படுவதை நீங்கள் அறிந்திருக்கலாம். அதே போலவே விக்கிப்பீடியா உள்ளடக்கத்திலும் பாலின இடைவெளி வெளிப்படையாகவே இருக்கிறது.
விக்கிப்பீடியாவில் உள்ள வாழ்க்கை வரலாறுகளில் 15 சதவீதம்தான் பெண்கள் பற்றியதாக இருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதிலும் பெண் விஞ்ஞானிகள் என்று எடுத்துக்கொண்டால் இது இன்னமும் குறைந்து போகும்.
எமிலி, ‘ராயல் சொசைட்டி ஆஃப் சயின்ஸ்’ அமைப்பின் பெண் விஞ்ஞானிகள் பற்றி விக்கிப்பீடியாவில் தேடியபோது, போதிய தகவல்கள் இல்லாததைக் கவனித்தார். இந்தத் தகவல் அப்போது தனக்குப் பெரும் ஆவேசத்தைத் தந்ததாக எமிலி கூறியிருக்கிறார். ராயல் சொசைட்டி என்பது விஞ்ஞானிகளின் புகழரங்கு போன்றது. அதில் இடம் பெற்ற பெண் விஞ்ஞானிகளுக்கே விக்கிப்பீடியாவில் இடமில்லை என்றால் எப்படி எனக் கொதித்துப்போனவர் அந்தக் கணமே (அதிகாலை 2 மணி) ஒரு பெண் விஞ்ஞானி பற்றிய அறிமுகக் கட்டுரையை எழுதிப் பதிவேற்றினார்.
அத்தோடு நின்றுவிடாமல் பெண் விஞ்ஞானிகள் பற்றிய கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதுவதற்காக என்று தனியே ஒரு விக்கி திட்டத்தையும் தொடங்கினார். இதன் ஒரு பகுதியாகப் பெண் விஞ்ஞானிகளை அணுகி அவர்கள் பங்களிப்பையும் கோரினார். அறிவியல் பயிலும் மாணவிகளையும் ஒன்றுதிரட்டி இந்த முயற்சியில் ஈடுபடுத்திவருகிறார். இதன் பயனாகப் பெண் விஞ்ஞானிகள் பற்றிய 300-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை விக்கிப்பீடியா முகப்பு பக்கத்தில் கொண்டுவந்திருக்கிறார்.
விக்கிப்பீடியாவில் பெண் விஞ்ஞானிகள் பற்றி நூற்றுக்கணக்கான கட்டுரைகளை உருவாக்கி இருப்பது ஒரு சாதனை. அவர்களில் இன்னும் கவனிக்கப்படாத பிரிவினராக இருக்கும் கருப்பினப் பெண் விஞ்ஞானிகளையும் அடையாளப்படுத்தும் செயலிலும் எமிலி ஈடுபட்டு வருகிறார்.
இந்தச் செயலுக்காகப் பாராட்டுகளுக்கு மத்தியில் இணையத் தாக்குதல்களுக்கும் இலக்காகிவருகிறார் எமிலி. அவர் பெண் என்பதாலும், பெண் விஞ்ஞானிகள் பற்றிய தகவல்களைத் தேடித்தேடி இடம்பெறச் செய்வதாலும் அதிருப்தி அடைந்த ‘ட்ரோல்’கள் எனும் இணைய விஷமிகள் பலர் அவருக்கு இமெயில் மூலம் தொல்லை கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். அவரை ஆபாசமாக வர்ணிப்பது, டேட்டிங்கிற்கு அழைப்பது, அவதூறாகப் பேசுவது எனப் பல விதங்களில் தங்களின் எதிர்ப்பைக் காட்டுகின்றனர்.
ஆனால் எமிலி இந்தத் தாக்குதலை எதிர்கொண்ட விதம் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. ஒவ்வொரு முறை தாக்குதலுக்கு இலக்காகும் போதும் அவர், புதிதாக ஒரு பெண் விஞ்ஞானி பற்றிய அறிமுகக் கட்டுரையை எழுதுவது எனும் கொள்கையைக் கடைப்பிடித்து வருகிறார். ஆக, மனம் வருந்தச் செய்யும் மெயில் வரும் போதெல்லாம் அதனால் துவண்டுவிடாமால் அதையே ஒரு உத்வேகமாக மாற்றிக்கொண்டு புதிய கட்டுரையை எமிலியும் அவரது சகாக்களும் எழுதி வருகின்றனர். இப்படி அடுத்தடுத்து எழுத வேண்டிய கட்டுரைகள் குறித்து அவர் ஒரு பெரிய பட்டியலே வைத்திருக்கிறார்.
எமிலியின் பங்களிப்பில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் அவரது விக்கி நிபுணத்துவம். விக்கிப்பீடியாவில் எந்தப் புது கட்டுரையையும் இடம்பெற வைக்கலாம் என்றாலும் அது விக்கி விதிகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும். இல்லை என்றால் நிராகரிக்கப்படும். அதிலும் வாழ்க்கை வரலாறு கட்டுரையைப் பதிவேற்ற வேண்டும் என்றால் அதற்கான தகுந்த முகாந்திரம் இருக்க வேண்டும். அதாவது வாழ்க்கை வரலாற்றுக்குரிய நபர் பற்றி ஏற்கெனவே பரவலாக எழுதப்பட்டிருக்க வேண்டும். அந்த நபர் பற்றி ஆதாரபூர்வமான கட்டுரைகள் வெளியாகியிருக்க வேண்டும்.
பெண் விஞ்ஞானிகள் வெளியே தெரியாமல் இருப்பதுதான் பெருங்குறை எனும்போது அவர்களைப் பற்றிய கட்டுரைகள் விக்கிப்பீடியாவில் இடம்பெறாமல் போக இதுவே ஒரு காரணமாக இருக்கிறது. ஆனால் எமிலி விக்கிப்பீடியா நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் ஆதாரங்களைத் தேடிப்பிடித்து அதில் ஏற்கப்படும் நடையில் பெண் விஞ்ஞானிகளை அறிமுகம் செய்துவருகிறார்.
எமிலியின் பெண் விஞ்ஞானிகள் விக்கி திட்டம்: >https://en.wikipedia.org/wiki/Wikipedia: WikiProject_Women_scientists
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
2 days ago
தொழில்நுட்பம்
2 days ago
தொழில்நுட்பம்
8 days ago
தொழில்நுட்பம்
9 days ago
தொழில்நுட்பம்
9 days ago
தொழில்நுட்பம்
9 days ago
தொழில்நுட்பம்
13 days ago
தொழில்நுட்பம்
14 days ago
தொழில்நுட்பம்
16 days ago
தொழில்நுட்பம்
16 days ago
தொழில்நுட்பம்
19 days ago
தொழில்நுட்பம்
21 days ago
தொழில்நுட்பம்
21 days ago
தொழில்நுட்பம்
22 days ago
தொழில்நுட்பம்
23 days ago