ட்விட்டர் மாறிக்கொண்டிருக்கிறது. ட்விட்டர் மாறாது, நீடித்து நிலைக்கும்! இந்த வரியைப் படிக்கும் போது, ட்விட்டர் மாறுமா, மாறாதா என முடிவு செய்ய முடியாமல் குழப்பமாக இருக்கிறதா? இணைய உலகில் பலருக்கு ஏற்பட்ட குழப்பம் இது என்பது மட்டும் அல்ல, ட்விட்டருக்கு இறங்கற்பா பாடும் அளவுக்கு அதன் அபிமானிகளைப் பொங்க வைத்த விவாதமாகவும் மாறியிருக்கிறது.
விஷயம் இதுதான். குறும்பதிவுச் சேவையான ட்விட்டர் தனது சேவையில் முக்கிய மாற்றத்தைக் கொண்டு வர இருப்பதாக அண்மையில் பிரபல இணையதளமான 'பஸ்ஃபீட்' செய்தி வெளியிட்டது. ட்விட்டர் தனது 'டைம்லைன்' அமைப்பை மாற்றித் தோன்ற வைக்க இருப்பதாக அந்தச் செய்தி தெரிவித்தது.
இந்தச் செய்தியைப் படித்ததுமே ட்விட்டர் பயனாளிகள் கொந்தளித்துவிட்டனர். அவர்களின் கோபம் குறும்பதிவுகளாகக் கொப்பளித்தது மட்டும் அல்ல, ட்விட்டர் வழக்கப்படி அவை பொருத்தமான 'ஹேஷ்டேக்' மூலம் ஒன்றிணைக்கப்பட்டன. #RIPTwitter என்பதுதான் அந்த ஹேஷ்டேக்.
யாரேனும் மறையும் போது அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் குறும்பதிவுகள்தான் இந்த ஹேஷ்டேகுடன் வெளியாகும். அப்படி இருக்க ட்விட்டருக்கே இப்படி ஒரு ஹேஷ்டேகா? அதிலும் ட்விட்டர் அபிமானிகளே அதை உருவாக்க வேண்டிய அவசியம் என்ன?
எல்லாம் ட்விட்டர் உத்தேசித்துள்ளதாகக் கூறப்படும் மாற்றத்திற்கு எதிரான ஆவேசத்தின் வெளிப்பாடுதான்.
இணையச் சேவைகளில் புதிய அம்சங்களும் மாற்றங்களும் இயல்பானதுதான். பயனாளிகளுக்குப் புதிய அனுபவத்தை வழங்க அவசியமானதும் கூட. ஏன், ட்விட்டரே கூட, பயனாளிகளுக்காகப் பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது. ஆனால், ட்விட்டரின் சமீபத்திய மாற்றம் அதன் ஆதாரத் தன்மைக்கு எதிராக அமைந்திருப்பதுதான் அதன் பயனாளிகளால் பொறுத்துக்கொள்ள முடியாமல் போனது.
ட்விட்டரில் குறும்பதிவுகள் வெளியாகும் விதம் உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். இப்போதைய குறும்பதிவு எப்போதும் முதலில் இருக்கும். முந்தைய குறும்பதிவுகள் அவை வெளியான வரிசைப்படி ஒவ்வொன்றாகப் பின் வரிசையில் போய்க்கொண்டிருக்கும். இந்தத் தலைகீழ் வரிசைதான் ட்விட்டர் டைம்லைனின் அடையாளம்.
இதில் யாருக்கும் எந்தப் பிரச்சனையும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் இந்த முறையை மாற்றம் செய்து, ஃபேஸ்புக் பாணியில் முன்னுரிமை அடிப்படையில் டைம்லைனை தோன்றச்செய்ய ட்விட்டர் திட்டமிட்டிருப்பதாக பஸ்ஃபீட் செய்தி தெரிவித்தது. அதாவது குறும்பதிவுகள் அவை வெளியான தலைகீழ் வரிசையில் தோன்றாமல், அவற்றில் சிறந்த மற்றும் முன்னணி குறும்பதிவுகள் தேர்வு செய்யப்பட்டு முன்னிறுத்தப்பட திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அந்தச் செய்தி தெரிவித்தது. இந்த முன்னுரிமை அம்சத்திற்காக ஒரு 'அல்காரிதம்' உதவியுடன் தீர்மானிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
140 எழுத்துகள் எனும் வரம்பு கொண்ட ட்விட்டரின் ஆதார பலமே அதன் உடனடித்தன்மைதான். இதோ இப்போது இந்த நொடியிலான கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதற்கான மேடைதான் ட்விட்டர். அந்த அம்சம் மூலம்தான் அது பிரபலமானது. அதுவே ட்விட்டரில் தொடர்பு கொள்ளவும், உரையாடவும், விவாதம் செய்யவும், நட்புக் கொள்ளவும் வழி செய்கிறது.
இந்த அம்சத்தில் கைவைக்கலாமா? இப்படிச் செய்தால் ட்விட்டரின் தனித்தன்மை போய்விடாதா?
ட்விட்டரைப் புரிந்து கொண்டவர்களும், அந்தச் சேவையை நேசித்தவர்களும் இந்த உணர்வைக் குறும்பதிவுகளாக்கினர். அத்தோடு இப்படி ஒரு மாற்றம் ட்விட்டருக்கு மரண அடியாகத்தான் இருக்கும் என உணர்த்துவது போல #RIPTwitter எனும் ஹேஷ்டேகையும் சேர்த்துக்கொண்டனர். ஆயிரக்கணக்கில் இந்தக் குறும்பதிவுகள் குவிந்தன.
இவற்றில் ஒரு குறும்பதிவில் ஃபேஸ்புக்கின் முகப்புப் பக்க ஒளிப்படம் இடம்பெற்று, அதில் ஃபேஸ்புக் எனும் வார்த்தையை அடித்துவிட்டு ட்விட்டர் எனும் சொல் எழுதப்பட்டிருந்தது. ஃபேஸ்புக்காக மாற ட்விட்டர் எதற்கு என்பது போல கேட்ட இந்தப் படம் ட்விட்டரில் வைரலாகப் பரவியது.
சர்ச்சைக்குரிய 'டவுன்லோடு' சேவையான 'மெகாஅப்லோட்' மூலம் புகழ் பெற்ற இணைய தொழில்முனைவோரான, 'கிங்டாட்காம்', "அல்கோரிதமை தொடாதீர்கள். எழுத்துகளைக் கூட்ட வேண்டாம். எதையும் மாற்றாதீர். நாங்கள் திருப்தியாக இருக்கிறோம்” என ட்விட்டருக்கே நேராகக் குறும்பதிவிட்டிருந்தார். மறக்காமல் இறங்கற்பா ஹேஷ்டேகையும் சேர்த்திருந்தார். இதைப் பலரும் 'ரீட்வீட்' செய்தனர்.
இந்த எதிர்ப்பு அலையால் விழித்துக்கொண்ட ட்விட்டர் சி.இ.ஓ ஜேக் டெர்சி, 'டைம்லைனை அடுத்த வாரமே மாற்றும் எண்ணம் இல்லை' என மறுப்புத் தெரிவிக்க வேண்டிய நிலை வந்தது. இதைக் குறும்பதிவு மூலமே செய்தார். ஒன்றல்ல, இரண்டல்ல வரிசையாக ஆறு குறும்பதிவுகளை வெளியிட்டு தெளிவுபடுத்தியிருந்தார்.
ட்விட்டரின் ஆதாரத்தன்மையான உடனடிப் பகிர்வு மாறாது என அவர் கூறியிருந்தார். சமூக 'கிராஃப்' தேவை இல்லாமலே, ட்விட்டர் நட்பு வளர்க்க கூடியது என்றும் ஒப்புக்கொண்டிருந்தார்.
'உங்களைப் போலவே உடனடித்தன்மை குறும்பதிவுகளை நானும் நேசிக்கிறேன்' என்றும் கூறியிருந்தார். அதோடு மறக்காமல் நீங்கள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்கிறோம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இனி ட்விட்டர் தனது டைம்லைன் தன்மையை மாற்றத் துணியுமா என்று தெரியவில்லை. ஆனால், 'இத்தகைய வசதியைத் தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்புடன் ட்விட்டர் அறிமுகம் செய்யப்படலாம்' என 'தி வெர்ஜ்' இணையதளம் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ள, 'யூ ஆர் அவே' எனும் பெயரிலான, சற்று இடைவெளிக்குப்பின் ட்விட்டரில் நுழையும் போது, இடைப்பட்ட காலத்தின் முக்கிய குறும்பதிவுகள் முன்னிறுத்தப்படும் அம்சத்தின் நீட்டிப்பாக இது அமையலாம் என கூறப்படுகிறது. ஆனால் ஹேஷ்டேக் மூலம் பயனாளிகள் தங்கள் கருத்தைத் திட்டவட்டமாகத் தெரிவித்த பிறகும், இப்படி ஒரு மாற்றத்திற்கு ட்விட்டர் துணிந்து தனது தனித்தன்மையும், பயனாளிகள் நன்மதிப்பையும் இழக்க விரும்புமா என்ன?
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
4 days ago
தொழில்நுட்பம்
6 days ago
தொழில்நுட்பம்
6 days ago
தொழில்நுட்பம்
6 days ago
தொழில்நுட்பம்
9 days ago
தொழில்நுட்பம்
10 days ago
தொழில்நுட்பம்
13 days ago
தொழில்நுட்பம்
13 days ago
தொழில்நுட்பம்
15 days ago
தொழில்நுட்பம்
17 days ago
தொழில்நுட்பம்
17 days ago
தொழில்நுட்பம்
18 days ago
தொழில்நுட்பம்
19 days ago
தொழில்நுட்பம்
20 days ago
தொழில்நுட்பம்
20 days ago