மூன்றாம் காலாண்டில் அதிகரித்த மொபைல் விற்பனை: முதலிடத்தில் ஸியோமி நிறுவனம்

By ஐஏஎன்எஸ்

இந்தியாவில் மூன்றாம் காலாண்டில் கிட்டத்தட்ட 5 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஒரு காலாண்டில் இந்த எண்ணிக்கையில் மொபைல்கள் விற்பது இதுவே முதல் முறை. கடந்த வருடம் இதே காலகட்டத்தை விட 8 சதவீதம் அதிகமாக தற்போது விற்கப்பட்டுள்ளது.

இதில் ஸியோமி நிறுவனமே சந்தையில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. 1.31 கோடி மொபைல்களை விற்று 26.1 என்ற அளவு சந்தையில் தனது இருப்பைப் பெற்றுள்ளது. அடுத்த இடத்தில் சாம்சங் நிறுவனம் உள்ளது. மொத்தம் 1.02 கோடி மொபைல்களை விற்றுள்ளது. இது கடந்த வருடம் இதே காலகட்டத்தில் இருந்த எண்ணிக்கையை விட 7 சதவீதம் வளர்ச்சியாகும் என்று இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கும் கேனலிஸ் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

சாம்சங் பலவிதமான மொபைல்களாலும், இந்தியாவுக்கேற்ற விலை நிர்ணயத்தாலும் 20.4 சதவீதம் சந்தையில் நிறைந்துள்ளது. சாம்சங்கிடம் இரண்டாவது இடத்தைப் பறிகொடுத்த விவோ, 80.8 லட்சம் மொபைல்களையும், ரியல்மீ 80.7 லட்சம் மொபைல்களையும் விற்றுள்ளது. 60.1 லட்சம் மொபைல் விற்பனையுடன் ஐந்தாவது இடத்தில் ஓப்போ நிறுவனம் இருக்கிறது.

கேனலிஸ் நிறுவனத்தைச் சேர்ந்த அத்வைத் பேசுகையில், "கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களுமே அதிக விற்பனை செய்திருந்தாலும் இணையச் சந்தைகள்தான் இதில் அதிகப் பலனடைந்தவை. இந்தப் பண்டிகைக் காலத்தில் அதிக எண்ணிக்கையில் பலவிதமான மொபைல்கள் விற்பனைக்கு வந்துள்ளன. பொருளாதார மந்த நிலை இருந்தாலும், நல்ல விலையில், தரமான ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் வரவேற்பு உள்ளது என்பதற்கு தற்போது அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் தளங்களில் நடந்து வரும் விற்பனையே ஒரு சான்று" என்கிறார்.

ஆப்பிள் நிறுவனமும் இந்தியாவில் கிட்டத்தட்ட 8 லட்சம் மொபைல்களை மூன்றாம் காலாண்டில் விற்பனை செய்துள்ளது. ஆனால், ஐபோன் 12-ன் விற்பனை இந்தியாவில் மந்தமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இந்தியாவில் மொபைல் சேவை நிறுவனங்கள் இன்னும் 5ஜிக்குத் தயாராகவில்லை. 5ஜி தான் சமீபத்திய ஐபோனின் முக்கிய அம்சம். மேலும் இந்த ஐபோனின் விலையும் இந்தியாவில் மிக மிக அதிகமாக இருப்பதால் விற்பனை கடினமாகவே இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE