ஒலிமயமான தேடியந்திரங்களை பார்த்தோம். வானொலி தேடியந்திரங்களையும் பார்த்தோம். இனி இசை தேடியந்திரங்களின் பக்கம் செல்லலாம்.
எம்பி-3 கோப்பு உள்ளிட்ட தொழில்நுட்பங்களின் உதவியுடன் இணையம் இசை உலகை தலைகீழாக புறட்டிப்போட்டிருக்கிறது. இணையம் மூலமே பாடல்களை கேட்கவும், பகிர்ந்து கொள்ளவும் எண்ணற்ற வழிகள் உண்டாகி இருக்கின்றன. இவற்றில் விருப்பமான பாடல்களை தேடி கேட்டு ரசிக்க உதவும் பிரத்யேக தேடியந்திரங்களும் எண்ணற்றவை இருக்கின்றன.
சொல்லப்போனால் பொது தேடியந்திரங்கள் தவிர்த்து பார்க்கும்போது இசைத் துறையில்தான் அதிக தேடியந்திரங்கள் இருப்பதாக தோன்றுகிறது. பாடல்களை தேடித் தருவதற்காக உருவாக்கப்பட்ட தேடியந்திரங்களின் பின்னே உள்ளே தேடல் நுட்பங்களும் வியக்க வைக்க கூடிய அளவுக்கு புதுமையானவை. இவற்றில் பல காலப்போக்கில் காணாமல் போய்விட்டாலும் கூட இந்த பிரிவின் பரந்து விரிந்த தன்மை வியக்க வைக்க கூடியது.
இசை தேடியந்திரங்களின் பயணத்தை சோலயோவில் இருந்து துவங்குவோம். சோலயோ... நீங்கள் தேடிய பாடலை நீங்கள் கேட்ட பாடலாக்குகிறது. இணைய வெளியில் யூடியூப்பிலும், சவுண்ட் கிளவுட்டிலும் கொட்டிக்கிடக்கும் பாடல்களில் இருந்து நமக்கு தேவையானதை கொண்டு வந்து தேடித்தருகிறது. ஆடியோ மட்டும் அல்ல வீடியோவுடனும்தான்!
அடிப்படையில் சோலயோ இசை தேடியந்திரம் தான். இதில் உள்ள தேடல் கட்டத்தில் பாடகர் அல்லது இசையமைப்பாளர் பெயரை டைப் செய்து தேடு என்றால், அடுத்த நொடி முதலிலேயே குறிப்பிட்டது போல யூடியூப், சவுண்ட் கிளவுட் (ஒலிகளை பகிர்ந்து கொள்வதற்கான இணைய மேடை) உள்ளிட்ட சேவைகளில் இருந்து பொருத்தமான இசை கோப்புகளை பட்டியலிட்டு காட்டுகிறது.
இந்தப் பட்டியலை பார்த்த பிறகுதான் பரவசமே இருக்கிறது. தகவல்களை தேடும்போது அவற்றை படிக்க முடிய வேண்டும்! பாடல்களை தேடும் போது கேட்க முடிய வேண்டும் அல்லவா? சோலயோ இதை அழகாக செய்கிறது.
இந்த தேடியந்திரத்திலேயே இசை கேட்கும் பிளேயரும் உண்டு. ஆக, தேடல் பட்டியலில் நாம் தேடிய பாடல் கண்ணில் பட்டதும் ஒரு கிளிக் செய்தால் அருகே இசை பிளேயர் தோன்றி பாடல் ஒலிக்கத் துவங்கும். முதலில் பாடலை முன்னோட்ட வடிவில் கிளிக்கி அதன் பிறகு பிளேயருக்கு கொண்டு செல்ல வேண்டும்.
தகவல்களை படிக்க வேண்டும் என்றால் கூட இன்னொரு இணைய பக்கத்தை வரவைத்து வெளியே செல்ல வேண்டும் இல்லையா? அல்லது பெரிய மனது செய்யும் சில தேடியந்திரங்களில் முடிவுகள் மீதே சின்னதாக முன்னோட்டம் பார்க்கலாம்.
ஆனால், சோலயோவில் பாடல்களை தேடும்போது, எங்கேயும் வெளியே செல்லாமல் அதிலிருந்தபடியே பாடலை கேட்க முடிவது, இசைப் பிரியர்களைப்பொறுத்தவரை கும்பிட நினைத்த கடவுள் பக்கத்திலேயே வந்து உட்காந்து கொள்வது போல தான்.
பரவசம் இன்னும் இருக்கிறது. ஒரு பாடலை தேடும்போது பட்டியலில் இருக்கும் மற்ற சில பாடல்களும் பிடித்திருக்கிறதா? அவற்றையும் கிளிக் செய்து அடுத்தடுத்து கேட்கலாம். இசைப் பிரியர்களுக்கு இதன் பொருள் நன்றாகத் தெரியும். ஆம், கேட்கும் பாடல்களை எல்லாம் அல்லது கேட்க விரும்பும் பாடல்களை எல்லாம் அப்படியே பாடல் பட்டியலாக (பிளே லிஸ்ட்) உருவாக்கி வைத்துக்கொள்ளலாம். இது நம் விருப்ப பட்டியல் என்பதால் எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம். புதிய பாடலை பட்டியலில் சேர்க்கலாம்.
ஆனால் பிளே லிஸ்ட்டை உருவாக்க வேண்டும் என்றால் உறுப்பினராக பதிவு செய்து கொள்ள வேண்டும். தேடவும், கேட்கவும் இந்த கட்டாயம் இல்லை. இருந்தாலும் என்ன உறுப்பினராக சேர்ந்தால் மற்ற உறுப்பினர்களின் பிளே லிஸ்ட்டை பார்க்கலாம். அவர்களோடு தொடர்பு கொண்டு இசைமயமான நட்பை வளர்த்துக்கொள்ளலாம்.
இணையத்தில் பாடல்கள் எங்கெங்கோ சிதறிக்கிடக்கும் போது அவற்றை ஒரே இடத்தில் இருந்து தேடும் வசதி இருப்பது தானே முறையானது என கேட்டு அந்த வசதியை அளிக்கிறது சோலயோ. இதைத்தான், தேடுங்கள், கேளுங்கள், சேமியுங்கள் (பட்டியல்) என்கிறது.
அதோடு ஒரு சில இசை கலைஞர்களின் பாடல்கள் குறிப்பிட்ட சேவைகளில் தான் கிடைக்கும். மற்ற தளங்களில் இல்லாமம் போகலாம். உதாரணத்திற்கு ஒலி வீடான சவுண்ட் கிளவுட்டில் இசைக்கலைஞர்களே தங்கள் படைப்புகளை இடம்பெறச்செய்வது உண்டு. மற்ற தளங்களில் காப்புரிமை கதவால் பாடல்கள் இடம்பெற்றிருக்காது. எனில் ஒவ்வொரு தளமாக தேடுவதை தவிர வேறு வழியில்லை. இந்த தேடலை தான் சோலயோ ஒருங்கிணைத்து எளிமையாக்கி இருக்கிறது.
பெரும்பாலான இசை தேடியந்திரங்கள் போல இதிலும் மேற்கத்திய பாடல்களின் ஆதிக்கம்தான் என்றாலும், நல்ல வேளையாக ராகதேவனையும் இசைக்குயில் ஜானகியையும் இனம் கண்டு நம்மூர் பாடல்களையும் இது நச்சென தேடித்தந்து விடுகிறது.
தேடியந்திர முகவரி:>http://www.solayo.com
சைபர்சிம்மன், இணைய வல்லுநர், தொடர்புக்கு enarasimhan@gmail.com
முந்தைய அத்தியாயம்:>ஆ'வலை' வீசுவோம் 11 - ரேடியோ தேடல்: இசை எங்கிருந்து வருகிறது?
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
3 days ago
தொழில்நுட்பம்
3 days ago
தொழில்நுட்பம்
3 days ago
தொழில்நுட்பம்
6 days ago
தொழில்நுட்பம்
7 days ago
தொழில்நுட்பம்
10 days ago
தொழில்நுட்பம்
10 days ago
தொழில்நுட்பம்
12 days ago
தொழில்நுட்பம்
14 days ago
தொழில்நுட்பம்
14 days ago
தொழில்நுட்பம்
15 days ago
தொழில்நுட்பம்
16 days ago
தொழில்நுட்பம்
17 days ago
தொழில்நுட்பம்
17 days ago