டிக் டாக் அமெரிக்கப் பிரிவை ஆரக்கிள் நிறுவனத்துக்கு விற்க முடிவு

By ஐஏஎன்எஸ்

டிக் டாக் செயலியின் சீன உரிமையாளரான பைட் டான்ஸ் நிறுவனம், ஆரக்கிள் நிறுவனத்துக்கு தங்களது அமெரிக்கப் பிரிவை விற்க முடிவு செய்துள்ளது. மைக்ரோசாஃப்டுக்கும், ஆரக்கிளுக்கும் இடையே நடந்த போட்டியில் ஆரக்கிளே முந்தியுள்ளது.

ஆனால், இந்த விற்பனையின் மூலம் டிக் டாக்கின் பெரும்பான்மையான பங்குகளும் ஆரக்கிள் நிறுவனத்துக்குச் செல்லுமா என்பது பற்றிய தெளிவு இன்னும் தரப்படவில்லை. மேலும் இது ஒட்டுமொத்த விற்பனை போல அல்ல என்றும், அமெரிக்காவில் டிக் டாக்கின் செயல்பாட்டுக்கு, தங்களது க்ளவுட் தொழில்நுட்பம் மூலம் ஆரக்கிள் உதவும் என்றும் கூறப்படுகிறது.

மைக்ரோசாஃப்ட் தனது அறிக்கையில், "டிக் டாக்கின் அமெரிக்கச் செயல்பாடுகளை மைக்ரோசாஃப்டுக்கு விற்க மாட்டோம் என பைட் டான்ஸ் நிறுவனம் எங்களிடம் தெரிவித்துள்ளது. எங்கள் முன்னெடுப்பு தேசிய நலன் மற்றும் பாதுகாப்பைப் பேணும் அதே நேரத்தில் டிக் டாக் பயனர்களுக்கும் பயனுள்ளதாக இருந்திருக்கும்.

உயர்தரப் பாதுகாப்பு, தனியுரிமை, இணையப் பாதுகாப்பு மற்றும் தவறான தகவல்களை எதிர்கொள்ளுதல் ஆகிய விஷயங்களில் உச்சபட்ச தரத்தைப் பேண வேண்டும் என்று, இதற்காகவே நாங்கள் சில முக்கிய மாற்றங்களைச் செய்திருந்தோம். இதை எங்களது ஆகஸ்ட் மாத அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தோம்" என்று குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம், பாதுகாப்புக் காரணங்களுக்காக டிக் டாக் உட்பட 58 சீனச் செயலிகளை இந்தியா தடை செய்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் நிர்வாகம், டிக் டாக்கின் அமெரிக்கப் பிரிவு செயல்பாடுகளை செப்டம்பர் மாதத்துக்குள் அமெரிக்க நிறுவனத்துக்கு விற்கவில்லையென்றால், டிக் டாக் செயலி அமெரிக்காவிலும் தடை செய்யப்படும் என்று பைட் டான்ஸ் நிறுவனத்துக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தது.

ஆரக்கிள் நிறுவனத்துக்கு ட்ரம்ப் நிர்வாகத்தோடு நெருங்கிய தொடர்பு இருப்பதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில், ட்ரம்ப்பின் கட்சிக்கு நிதி சேர்க்க, ஆரக்கிளின் நிறுவனர் லாரி எல்லிஸன் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியிருந்தார். மேலும், ஆரக்கிளின் தலைமை நிர்வாகி சாஃப்ரா காட்ஸ் ட்ரம்பின் நிர்வாகக் குழுவில் இடம்பெற்றுள்ளார். வெள்ளை மாளிகைக்குப் பல முறை சென்று வந்திருக்கிறார் என்று நியூயார்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது. கடந்த மாதம் டொனால்ட் ட்ரம்ப்பும் கூட, டிக் டாக்கை ஆரக்கிள் வாங்குவதைத்தான் ஆதரிப்பதாக வெளிப்படையாகக் கூறியிருந்தார்.

இந்தப் புதிய கூட்டினால், ஆரக்கிள் நிறுவனத்தின் காலாண்டு லாபம் ஏற்றம் கண்டது. கடந்த வருடத்தில் இதே காலகட்டத்தில் கிடைத்ததை விட 2 சதவீதம் அதிக வருவாயைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் ட்ரம்ப் நிர்வாகம் டிக் டாக்குக்கு விதித்துள்ள விற்பனைக் கெடு என்பது கட்டாயக் கொள்ளை என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது. "வெளிநாட்டு நிறுவனங்கள் மீது அமெரிக்கா காட்டி வரும் பொருளாதாரத் துன்புறுத்தலும், அரசியல் சூழ்ச்சியும் கட்டாயக் கொள்ளைக்கு ஒப்பானது" என சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE