100 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தொட்ட ஸக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு

By ஐஏஎன்எஸ்

ஃபேஸ்புக் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஸக்கர்பெர்கின் சொத்து மதிப்பு 100 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தொட்டுள்ளது. டிக் டாக் செயலிக்குப் போட்டியாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் என்ற சமூக வலைதளத்தை ஸக்கர்பெர்க் அறிமுகம் செய்ததையொட்டி அவரது சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது.

ரீல்ஸின் அறிமுகத்தால் ஃபேஸ்புக்கின் பங்கு மதிப்பு 6 சதவீதத்துக்கும் மேலாக அதிகரித்துள்ளது. ஃபேஸ்புக்கின் பங்குகளில் 13 சதவீதம் மார்க் ஸக்கர்பெர்க்கிடம் உள்ளது. இதனால் ஸக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு அதிகரிக்க, அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸாஸ், மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் ஆகியோரைத் தொடர்ந்து ஸக்கர்பெர்க்கும் 100 பில்லியன் சொத்து மதிப்பு கொண்ட பணக்காரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.

தனது மனைவி ப்ரிசில்லா சானுடன் இணைந்து அமைத்துள்ள அறக்கட்டளையின் மூலம், ஃபேஸ்புக்கின் பங்குகளில் 99 சதவீதத்தை தன் வாழ்நாளில் தானமாக அளிக்க ஸக்கர்பெர்க் திட்டமிட்டுள்ளார்.

அமெரிக்காவில் டிக் டாக்கின் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருக்கும் நிலையில், டிக் டாக்கைப் போலவே குறு வீடியோக்களை உருவாக்கும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸை ஃபேஸ்புக் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் 15 விநாடி குறு காணொலிகளை, ஒலி, எஃபெக்ட்ஸ் என வித்தியாசமான அம்சங்களுடன் பயனர்கள் பதிவேற்றலாம்.

கடந்த வருடம் பிரேசில் நாட்டில் சோதனைக்காக அறிமுகம் செய்யப்பட்ட ரீல்ஸ், பின்னர் ஜெர்மனி, பிரான்ஸ், சமீபத்தில் இந்தியா எனப் பல நாடுகளில் சோதனை ஓட்டம் கண்டது. முக்கியமாக, இந்தியாவில் டிக் டாக் உள்ளிட்ட 59 சீனச் செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்ட ஒரு வாரத்தில் இந்தியாவுக்குள் ரீல்ஸ் அறிமுகமானது.

இன்னொரு பக்கம், டிக் டாக்கைத் தடை செய்யும் வகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்திருக்கும் உத்தரவுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக டிக் டாக் தரப்பு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE