| ஃபைண்ட்சவுண்ட்ஸ்: விதவிதமான ஒலிகளை அல்ல... எல்லா விதமான ஒலிகளையும் தேட உதவும் தேடியந்திரம் இது. ஒலிகளை நாடுபவர்களை பிரமிக்க வைக்கும். |
முதலில் நன்றாக கைத்தட்டுங்கள். இன்னும் பலமாக தட்டுங்கள். ஏனெனில், ஃபைண்ட்சவுண்ட்ஸ் தேடியந்திரத்தை பயன்படுத்தி பார்க்கும்போது உங்களுக்கு நிச்சயம் கைத்தட்டி பாராட்ட தோன்றும். என்ன மாதிரியாக உழைத்து, எப்படி ஒரு தேடியந்திரத்தை உருவாக்கி இருக்கிறார்கள் என வியக்கத் தோன்றும். அதிலும் நீங்கள் தொழில்முறையாக ஒலிகளை நாடுபவர் என்றால், இந்த தேடியந்திரம் உங்களை பிரமிக்க வைக்கும். இதுபோன்ற தேடியந்திரத்தை தான் இதுநாள் வரை தேடிக்கொண்டிருந்தேன் என சொல்ல வைக்கும். அதாவது இதுவரை அறியாமல் இருந்தால்!
ஃபைண்ட்சவுண்ட்ஸ் அப்படி என்ன செய்கிறது?
ஒலிகளை தேடித் தருகிறது!
'இணையத்தில் ஒலிகளை தேடுங்கள்' என்பது தான் இதன் கோஷமாக இருக்கிறது.
முதல் பார்வைக்கு, சிறப்பு தேடியந்திரங்களின் வரிசையில் ஒலிகளை தேடித் தரும் தேடியந்திரம் என சாதாரணமாக நினைக்கத் தோன்றும். வடிவமைப்பிள் புதுமை பளபளப்பு இல்லாமல் வழக்கொழிந்து போன பழைய தேடியந்திரம் போல இருக்கும் இதன் முகப்பு பக்கத்தை பார்க்கும்போது இன்னும் கூட அலட்சியமாக இருக்கும். ஆனால் இந்த தேடியந்திரத்தை பயன்படுத்தி பார்க்க முற்பட்டால் தான் அதன் அருமை புரியும்.
முகப்புப் பக்கத்தில் தேடல் கட்டம் இருக்கிறது. அதன் கீழ், உதாரண சொற்களும், அதற்கும் கீழ் ஒலிகளின் பல கோப்பு வடிவங்களும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதற்கும் கீழ், என்ன வகையான ஒலிகளை எல்லாம் கண்டுபிடிக்கலாம் எனும் குறிப்பு இருக்கிறது. அதை கிளிக் செய்து உள்ளே நுழைந்தீர்கள் என்றால் நீங்கள் அசந்து போக வேண்டும்.
ஒரு ஹோட்டலில் உலகம் முழுவதும் கிடைக்க கூடிய உணவு வகைகள் எல்லாம் பட்டியலிடப்பட்டால் எப்படி இருக்கும்? அதே போல இந்தப் பக்கத்தில் இந்த தேடியந்திரத்தில் தேடக்கூடிய ஒலிகள் எல்லாம் பட்டியலிடப்பட்டுள்ளது. முதலில் வகைகள், துணைத்தலைப்புகளாக கண்ணில் படுகின்றன. விலங்குகள், பறவைகள், விடுமுறை, வீடு, பூச்சிகள், இதர, இசைக்கருவிகள், இயற்கை, இறைச்சல், அலுலகம்... இப்படி துணைத் தலைப்புகள் நீள்கின்றன.
ஒவ்வொரு தலைப்பிலும் கேட்கக்கூடிய ஒலிகள், விலங்குகள் பிரிவில் முதலை, குரங்கு, வவ்வாள், கரடி, எருமை, ஒட்டகம், யானை, பன்றி, நாய், வரிக்குதிரை என பட்டியல் நீள்கின்றது. எந்தச் சொல்லில் கிளிக் செய்தாலும் அதற்கான ஒலி வடிவை கேட்கலாம்.
இப்படி ஒவ்வொரு வகைக்கும் நீளமான ஒலி பட்டியல்!
அருவி ஒலியில் இருந்து, பூகம்ப முழக்கம் வரை, நீலக்குயில் கீதம் முதல் புயல் பாடும் பாட்டு வரை, சூட்கேஸ் திறக்கும் ஒலி முதல் பேக்ஸ் ஒலி வரை, வயலின் இசை முதல் தபேலா வரை.... இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம், கேட்டுக்கொண்டே போகலாம்.
இந்தப் பட்டியல் என்பது இதில் கிடைக்ககூடிய ஒலிகளுக்கான மாதிரிகள்தான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!
உங்கள் தேவைக்கேற்ப குறிப்பிட்டு தேடினால் அதற்கேற்ற ஒலி குறிப்பை கண்டு பிடித்து விடலாம். கண்டு, கேட்பது மட்டும் அல்ல, பயன்பாட்டிற்காக பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம்.
இந்தப் பட்டியலில் இருந்தும் ஒலிகளை தேர்வு செய்து கொள்ளலாம் அல்லது வழக்கமான தேடியந்திரத்தில் தேடுவது போல குறிச்சொல்லை டைப் செய்து தேடலாம். எதிர்பார்க்கும் ஒலிக்கான குறிச்சொல்லை அடித்துவிட்டு, தேவையான கோப்பு வடிவம், ஒலியின் துல்லியம், அதன் கால அளவு ஆகியவற்றை குறிப்பிட்டும் தேடலை பட்டை தீட்டலாம்.
தேடல் முடிவுகளும் வழக்கமான தேடியந்திர முறையிலேயே பட்டியலிடப்படுகிறது. பத்து, பத்து ஒலிகளாக பட்டியலில் பார்க்கலாம். ஒவ்வொரு முடிவுடனும் அதற்கான இணைப்பு பக்கம் இடம் பெற்றிருக்கும். அந்த இணைப்புக்கு முன் இடது பக்கத்தில் மைக் மற்றும் டவுன்லோடு பட்டன் இருக்கின்றன. இணைப்பின் மீது கிளிக் செய்தால் ஒலியை திரையிலே கேட்டுப் பார்க்கலாம்.
இந்த ஒலியை இமெயிலில் அனுப்பிக்கொள்ளும் வசதி மற்றும் ட்விட்டர் மூலம் பகிரும் வசதி ஆகியவையும் இருக்கின்றன. முடிவுகள் ஒலிக்கோப்புகள் அல்லவா, எனவே அவை ஒலிக்குறிப்புக்கான வரைபடமாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
யோசித்துப் பாருங்கள், இணையத்தில் தகவல்களை வெகு சுலபமாக தேடி விடலாம். விதவிதமான தேடியந்திரங்கள் இருக்கின்றன. புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தேடவும் சிறப்புத் தேடியந்திரங்கள் இருக்கின்றன. இவை எல்லாமே பரவலாக அறியப்பட்டிருக்கின்றன.
ஆனால், ஒலிகள் என்று வரும்போது இணையம் நிசப்தமாக இருக்கிறது. நாமும் கூட செய்திகளையும், கட்டுரைகளையும் படிக்கும் அளவுக்கு இணையத்தில் ஒலிகளை கேட்பதில்லை. வீடியோ பார்க்கிறோம், பாடல்கள் கேட்கிறோம் என்றாலும் ஒலிகளுக்கு அத்தனை முக்கியமில்லை; அதற்காக இணையத்தில் ஒலிகள் இல்லாமல் இல்லை. அவற்றை கவனத்தில் கொள்ளவும், கண்டெடுப்பதற்குமான சேவைகள் தான் பிரபலமாக இல்லை.
அதனால்தான் ஃபைன்சவுண்ட்ஸ் முக்கியமாகப்படுகிறது. ஒரே இடத்தில் உலகில் உள்ள விதவிதமான ஒலிகளை எல்லாம் கேட்பதற்கான வாய்ப்பு எத்தனை சிறப்பானது. தொழில்முறையாக ஒலிகளை தேடுபவர்களுக்கான தேடியந்திரம் என்றாலும் கூட வெகுஜன நோக்கிலானதும் கூட. கொஞ்சம் ஆர்வம் உள்ளவர்களுக்கு கூட தீனி போல இதில் ஒலிகள் இருக்கின்றன. காற்று வீசும் ஒலி, எழுதும் ஓசை, கூக்குரல், வெடிச்சத்தம், எந்திர துப்பாக்கி ஒலி, கார்ட்டூன் ஒலி என எண்ணற்ற ஒலிகளின் மாதிரியை கேட்க முடிவது, அதிலும் ஒரே இடத்தில், ஒரு கிளிக்கில் கேட்கும் வாய்ப்பு இந்த தேடியந்திரத்தின் ஹைலைட். இந்த பணியை மிகச் சிறப்பாக செய்கிறது இந்த தேடியந்திரம்.
கம்பேர்சோனிக்ஸ் (Comparisonics) எனும் நிறுவனம் இந்த ஒலி தேடியந்திரத்தின் பின்னே இருக்கிறது. ஆச்சர்யப்படக்கூடிய வகையில் 14 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தேடியந்திரம் செயல்பட்டு வருகிறது.
ஃபைண்ட்சவுண்ட்ஸ் தளத்தின் 'எங்களைப் பற்றி' அறிமுக பக்கத்தில், இணையத்தில் ஒலிகளை தேடுவதற்கான இலவச தளம், கூகுள், யாஹூவைப் போல இதுவும் ஒரு தேடியந்திரம், ஆனால் ஒலிகளில் கவனம் செலுதுவது என குறிப்பிடப்பட்டுள்ளது. அதிக அம்சங்களை கொண்டிருந்தாலும் பயன்படுத்த எளிமையானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எண்ணற்ற தேடியந்திரங்கள் இருந்தாலும் ஒலி விளைவுகளை தேடுவதற்கான ஒரே தேடியந்திரம் இதுதான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுருக்கமான, எளிமையான அறிமுகம். ஆனால், இந்த தேடியந்திரம் செயல்படும் விதம் மிகவும் நுட்பமானது.
கூகுளின் வெற்றிக்கு காரணமான பேஜ்ரேங்க் நுப்டம் போல இந்த தேடியந்திரத்திற்கு பின்னும் ஒரு நுட்பம் இருக்கிறது. சவுண்ட் மேட்சிங் என்று இது குறிப்பிடப்படுகிறது. இவை பற்றி எல்லாம் விளக்கும் தனிக்கட்டுரை இணைப்பாக கொடுக்கப்பட்டுள்ளது.
பொதுவாக ஒலி (ஆடியோ) தொழில்நுட்பத்தின் பதிவு வரலாற்றை சுருக்கமாக சுட்டிக்காட்டும் இந்தக் கட்டுரை ஒலிகளை தேடும் நுட்பத்தை அழகாக விவரிக்கிறது.
இதன் அடிப்படை செயல்பாடு மற்ற தேடியந்திரங்கள் போலவே இருக்கிறது. ஏற்கெனவே இணையத்தில் இருந்து ஒலி கோப்புகளை தேடி தொகுத்து வைத்திருந்து, குறிச்சொற்களுக்கு ஏற்ப தேடித்தருகிறது. ஆனால் இது தேடித்தருவது எச்டிஎம்.எல் கோப்போ, புகைப்படமோ அல்ல; ஒலி கோப்பு. தேடப்படும் சொல்லுக்கு ஏற்ப, பொருத்தமான ஒலிக்குறிப்பை தேடுவது, எச்டிஎம்.எல் பக்கத்தை தேடித்தருவது போல எளிதானது அல்ல.
யானை என்று குறிச்சொல்லை தேடும்போது, யானை எனும் சொல் உள்ள இணைய பக்கங்களை எல்லாம் தேடி எடுத்து அவற்றை தரப்படுத்தி வரிசைப்படுத்திவிடலாம். ஆனால் யானையின் பிளிறல் என்றும் தேடும்போது, ஒரு ஒலிக் குறிப்பில் எப்படி பிளிறல் சத்தத்தை அடையாளம் காண்பது? அதிலும் ஒலிகளை உணர்வதில் மனிதர்களுக்கு இருக்கும் திறனும், ஆற்றலும் சாப்ட்வேருக்கு சாத்தியமில்லை எனும்போது இதில் உள்ள சிக்கலை உணரலாம். ஆனால், சவுண்ட் மேட்சிங் நுட்பம் மூலம் இந்த சவாலை ஃபைண்ட்சவுண்டஸ் அழகாக எதிர்கொள்கிறது.
ஒலிக்குறிப்புகள் இணையத்தில் இருந்து எடுத்து தொகுக்கப்பட்டு, அவற்றுக்கு உரிய ஒலி கையெழுத்துகள் கண்டறியப்பட்டு அதற்கேற்ப வகைப்படுத்தப்படுகிறது. இந்த ஒலி கையெழுத்துகளின் அடிப்படையில் குறிச்சொற்களின் அர்த்தத்துடன் பொருத்தப்பட்டு ஒலிகள் பட்டியலிடப்படுகிறது. மேலும் ஒரே மாதிரியான சொற்கள் விலக்கப்பட்டும் தனித்தன்மை வாய்ந்தவை மட்டுமே பட்டியலிடப்படுகிறது. இன்னும் பல நுணுக்கமான அம்சங்களோடு ஒலி தேடலை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறது.
ஒலி பொறியாளர்கள், இசை அமைப்பாளர்கள், இயக்குனர்கள், வீடியோ கேம் வடிவமைப்பாளர்கள், அனிமேஷன் வல்லுனர்கள் என பலவகையான தொழில்வல்லுனர்களின் தேவையை இந்த தேடியந்திரம் நிறைவேற்றி வருகிறது.
தொழில் சார்ந்த தேவையில்லாவிட்டாலும் கூட, ஒருவர் இந்த தேடியந்திரத்தை சுவாரஸ்யமாக பயன்படுத்தலாம். குறிப்பிட்ட ஒலிகளை கேட்டு பார்க்கும் தேவை ஏற்பட்டால் இந்த தேடியந்திரத்தில் அதை எளிதாக தேடிவிடலாம். வலைப்பதிவிலோ, பேஸ்புக் பதிவிலோ ஒலி சார்ந்த சொல்லை பயன்படுத்தும் போது இந்த தேடியந்திரத்தில் தேடி அதன் இணைப்பை குறிப்பிட்ட அந்த சொல்லுடன் இணைத்து சுவாரஸ்யத்தை அளிக்கலாம்.
அடிப்படையான தேடல் தவிர தொழில்முறை வல்லுனர்களுக்கு என்று மிக பிரத்யேகமான வசதியையும் பைண்ட் சவுண்ட்ஸ் அளிக்கிறது.
தேடியந்திர முகவரி:>http://www.findsounds.com
சைபர்சிம்மன், இணைய வல்லுநர், தொடர்புக்கு enarasimhan@gmail.com
முந்தைய அத்தியாயம்:>ஆ'வலை' வீசுவோம் 8 - கிகாபிளாஸ்ட் எனும் சிறிய/அரிய தளம்
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
23 hours ago
தொழில்நுட்பம்
23 hours ago
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
4 days ago
தொழில்நுட்பம்
5 days ago
தொழில்நுட்பம்
7 days ago
தொழில்நுட்பம்
7 days ago
தொழில்நுட்பம்
10 days ago
தொழில்நுட்பம்
12 days ago
தொழில்நுட்பம்
12 days ago
தொழில்நுட்பம்
13 days ago
தொழில்நுட்பம்
14 days ago
தொழில்நுட்பம்
14 days ago
தொழில்நுட்பம்
14 days ago
தொழில்நுட்பம்
19 days ago