ஸ்மார்ட் போனால் கெடும் தூக்கம்!
ஸ்மார்ட் போன்காள் ஏற்படும் பாதிப்பு பற்றிய புதிய ஆய்வு வெளியாகி இருக்கிறது. படுக்கையறையில் ஸ்மார்ட் போன் அல்லது டேப்லெட் வைத்திருக்கும் சிறார்களுக்குத் தூக்கம் பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கிறது. இந்த நவீன சாதனங்களை பயன்படுத்தும் பிள்ளைகளை மற்ற பிள்ளைகளோடு ஒப்பிடும்போது 21 நிமிடங்கள் குறைவாகத் தூங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜெனிபர்பால்பே தலைமையிலான குழு 2,000 நடுநிலைப் பள்ளி மாணவர்கள் மத்தியில் இந்த ஆய்வை நடத்தியுள்ளது. இரவு தூங்கச்செல்லும் முன் டிவி பார்ப்பதால் ஏற்படும் தூக்கப் பாதிப்பைவிட ஸ்மார்ட் போனைப் பயன்படுத்தும் பிள்ளைகளிடம் அதிகப் பாதிப்பு இருப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. குறைந்தது இரவு தூங்கச்செல்லும் முன் கேட்ஜெட்டுக்கு குட்பை சொல்லலாமே!
செல்ஃபி எனும் கலை
எங்கு பார்த்தாலும் செல்ஃபி பற்றித் தான் பேசுகிறார்கள் என்று பார்த்தால் இப்போது செல்ஃபி கல்லூரி அங்கீகாரத்தையும் பெற்றிருள்ளது. ஆம், பிரிட்டனில் உள்ள சிட்டி லிட் கல்லூரி செல்ஃபி பாடத்தை ஒரு மாத கோர்சாக அறிமுகம் செய்துள்ளது.
தி ஆர்ட் ஆஃப் போட்டோகிராபி செல்ஃப் போர்ட்ரேச்சர் எனப் பெயரிட்டுள்ளது. மாணவர்கள் சுயபடக்கலையை விமர்சன நோக்கில் புரிந்து கொள்ளவும், சுயபடங்களை எடுக்கும் கலையை மேம்படுத்திக்கொள்ளவும் இந்தப் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
பல்வேறு சுயபடங்களைப் பார்த்து, ரசித்து, ஆய்வு செய்வது, சுயபடங்களில் அடிக்கடி பின்பற்றப்படும் உத்திகளை அலசுவது, சுயம் மற்றும் நினைவுகளை ஆய்வுக்குட்படுத்துவது எனப் பல விஷயங்களை இதில் கற்கலாம். ஒரு மாத காலத்துக்கு செல்ஃபி சார்ந்த லெக்சர்களும் உண்டு. செல்ஃபி படம் எடுத்துள்ள யார் வேண்டுமானாலும் சேரலாமாம்! பயிற்சிக் கட்டணம் ரூ.12755.
எல்லாம் சரி, செல்ஃபிகோர்ஸ் படித்துவிட்டு என்ன செய்யலாம்? இந்தக் கல்லூரியிலேயே புகைப்படக்கலை சார்ந்த பல பாடத்திட்டங்கள் இருக்கின்றனவாம், அதில் சேர்ந்து கொள்ளலாம்.
செல்ஃபி பாடத்திட்டம் பற்றி விரிவாக அறிய: >www.citylit.ac.uk/courses/the-art-of-self-portraiture
ஆண்ட்ராய்டு 100
கடந்த ஆண்டின் சிறந்த ஆண்ட்ராய்டு செயலிகளைக் கூகுள் பட்டியலாக வெளியிட்டது. அதைத் தொடர்ந்து இப்போது ஆண்ட்ராய்டு பயனாளிகளிடம் அவசியம் இருக்க வேண்டியதாகக் கருதப்படும் 122 செயலிகள் கொண்ட இன்னொரு பட்டியலை வெளியிட்டுள்ளது. மிகவும் பிரபலமான எவர்நோட், கேம்ஸ்கேனர், யூடியூப் கிண்டில், சவுண்ட் கிளவுட் மற்றும் கேம் சார்ந்த செயலிகளும் இந்தப் பட்டியலில் உள்ளன.
ஆயிரக்கணக்கில் இருக்கும் செயலிகளில் எதைத் தேர்வு செய்வது எனத் தெரியாமல் இருக்கும் ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு இந்தப் பட்டியல் உதவியாக இருக்கும். ஆண்ட்ராய்டு அனுபவசாலிகள்கூடத் தங்களிடம் உள்ள செயலிகளை இந்தப் பட்டியலோடு ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம். இதனிடையே மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது விண்டோஸ் போன்களில் ஆண்ட்ராய்டு உள்ளிட்ட செயலிகளை அனுமதிக்கவும் தீர்மானித்துள்ளதாம். ஆக, விண்டோஸ் போன் வைத்திருப்பவர்களும் ஆண்ட்ராய்டு செயலிகளைச் சுலபமாகப் பயன்படுத்தும் நிலை வரலாம்.
ஆண்ட்ராய்டு செயலிகள் பரிந்துரை பட்டியலைப் பார்க்க:
>https://play.google.com/store/apps/collection/promotion_3000ebe_musthaveapps?hl=en
புதிய நோக்கியா போன்கள்
நோக்கியாவின் ஸ்மார்ட் போன் பிரிவைக் கையகப்படுத்திய பிறகு மைக்ரோசாப்ட் நோக்கியா பெயரையே மறந்து விட்டது எனத் தோன்றியது. சமீப அறிமுகங்களில் நோக்கியா பெயரே இல்லாமல் மைக்ரோசாப்ட் பெயர் மட்டும்தான் முன்னிறுத்தப்பட்டது. ஆனால் திடீரென நோக்கியா பெயரில் நோக்கியா 215 மற்றும் நோக்கியா 215 டூயல்சிம் ஆகிய இரண்டு போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இரண்டுமே பட்ஜெட் போன்கள்.
ஸ்மார்ட் போன்கள் அல்ல. ஆனால் ஸ்மார்ட் போனில் உள்ளது போல இணைய வசதி கொண்டவை. இரண்டிலும் பேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றை அணுகலாம். ஓபரா மினி பிரவுசர் மற்றும் பிங்தேடியந்திரத்துடன் இவை வருகின்றன. விலை ரூ.2000 க்கும் குறைவாக இருக்கும். இவற்றின் பேட்டரி ஆற்றல் பற்றியும் விசேஷமாகச் சொல்லப்படுகிறது. மத்தியக் கிழக்கு, ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தேர்ந்தெடுத்த சந்தைகளில் இந்தக் காலாண்டில் விற்பனைக்கு வருகிறது.
ஸ்மார்ட் போன் அறிமுக நிலையில் இருப்பவர்களுக்கு என இதை அறிமுகம் செய்திருப்பதாக மைக்ரோசாப்ட் தெரிவிக்கிறது.
ஸ்மார்ட்டான பூட்டு
எல்லாமே ஸ்மார்ட் ஆகிவரும் உலகில் பூட்டுகளும் ஸ்மார்ட்டாவது தானே முறை. அமெரிக்க நிறுவனமான டிஜிபாஸ்(Digipas), பயணத்தின்போது எடுத்துச்செல்லப்படும் சூட்கேஸ்களுக்கான ஸ்மார்ட் பூட்டை அறிமுகம் செய்திருக்கிறது. இஜீடச் (eGeeTouch) எனும் இந்தப் பூட்டை ஸ்மார்ட் போன் மூலம் திறக்கலாம்.
இந்த ஸ்மார்ட் பூட்டில் சாவியை மறந்து வைத்துத் தேடும் பிரச்சினையோ அல்லது ரகசிய எண்களை நினைவில் கொள்ள வேண்டிய அவசியமோ கிடையாது. லக்கேஜ் தவிர லாக்கர் மற்றும் வீட்டு அலமாரிகளிலும் இதைப் பயன்படுத்தலாம். நட்சத்திர ஹோட்டல் ஒன்றில்தான் இப்படி ஸ்மார்ட் போனால் திறக்கும் பூட்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் அடுத்த கட்டமாக சூட்கேஸ்களுக்கும் ஸ்மார்ட்லாக் வந்துவிட்டது. இனி வீடுகளுக்கும் வந்துவிடும்!
ஜூம் செய்ய விரும்பு
தைவான் நாட்டு நிறுவனமான அசெஸ் (ASUS) ஜென் போன் ஜூம் மற்றும் ஜென் போன் 2 என இரண்டு புதிய ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்திருக்கிறது. அமெரிக்காவில் நடைபெறும் சி.இ.எஸ் கண்காட்சியில் இவை அறிமுகமாயின. இதில் ஜென்போன்ஜூம், அதன் சக்திவாய்ந்த கேமராவுக்காக ஒசத்தியாகப் பேசப்படுகிறது. லூமியா 1020 போனை நினைவுபடுத்தினாலும் இதன் ஆப்டில்கல்ஜூம் வசதி விஷேசமானது என்று நிறுவனம் பெருமைப்படுகிறது.
இதில் 12 எக்ஸ் டிஜிட்டல் ஜூம் சாத்தியம். இந்த கேமரா தவிர செஃல்பி பிரியர்களுக்காக ஒரு முன்பக்க கேமராவும் இருக்கிறது. ஆண்ட்ராய்டு லாலிபாப்பில் இயங்குகிறது. இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் தான் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. விலை ரூ.25,320. 4 ஜி அம்சம் கொண்ட இந்த ஜென் போன் 2, மோட்டோ ஜி மற்றும் ஒன்பிளஸ் ஒன் ஸ்மார்ட் போன்களுடன் மல்லு கட்டக்கூடியதாக கருதப்படுகிறது.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
2 days ago
தொழில்நுட்பம்
3 days ago
தொழில்நுட்பம்
4 days ago
தொழில்நுட்பம்
8 days ago
தொழில்நுட்பம்
12 days ago
தொழில்நுட்பம்
15 days ago
தொழில்நுட்பம்
17 days ago
தொழில்நுட்பம்
25 days ago
தொழில்நுட்பம்
29 days ago
தொழில்நுட்பம்
30 days ago
தொழில்நுட்பம்
1 month ago
தொழில்நுட்பம்
1 month ago
தொழில்நுட்பம்
1 month ago
தொழில்நுட்பம்
1 month ago